தொல்காப்பியம்
உயிர் மயங்கியல்
நிலைமொழியின் இறுதியில் உயிர் எழுத்து நிற்க, வருமொழியின் முதலில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியன புணரும் முறையை விளக்கும் இயல் “உயிர் மயங்கியல்” எனப்படும்.
அதாவது, அகர ஈறு தொடங்கி ஒளகார ஈறு வரை இதன் புணர்ச்சி கூறப்படுகின்றது.
1. அகர இறுதிப் பெயர் நிலை முன்னர்
வேற்றுமை அல்வழிக் க ச த ப தோன்றின்
தத்தம் ஒத்த ஒற்று இடைமிகுமே.
நிலைமொழியில் அகரத்தை இறுதியாகக் கொண்ட பெயர்கள் வந்து நிற்க, வருமொழியின் முதலாக அல்வழிப் புணர்ச்சியில் க ச த ப என்னும் எழுத்துகள் கொண்ட சொற்கள் அமையும்பொழுது தத்தமக்குப் பொருத்தமான ஒற்றுகளே வந்து மிகும்.
விள + குறிது = விளக்குறிது.
( விள - ஒரு வகை மரம் )
"தத்தமக்கு ஒத்த ஒற்று" என்றால், சிலவிடங்களில் மெல்லினம் மிகுதலும் உண்டு என்று பொருள்.
தட + செவி தடஞ்செவி ( தட - அகன்ற )
2. வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்
என வென் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.
வினையெஞ்சு கிளவி - வினையெச்சம்.
உவமக் கிளவி - உவமைச்சொல்
ஞாங்கர் - முன்புகூறிய
அதாவது,1. அகர ஈற்றுச் சொற்களாகிய வினையெச்சச் சொல்லும்
2. உவமைச்சொல்லும்
3. 'என' என்னும் எச்சமும்
4. சுட்டாகிய அகர ஈறும்
5. உரையசைக் கிளவியாகிய ஆங்க என்பதும்
( உரையசைக் கிளவி - உரையாடும்பொழுது இடையே அமைகின்ற தனக்கென்று பொருள் இல்லாத வெறும் அசைநிலையாக மட்டுமே அமையும் சொல் )
ஆகிய இடங்களில் முன்புகூறிய வல்லெழுத்து மிகும்.
படிக்க + சொன்னான் = படிக்கச் சொன்னான்.
பூப்போல + சிரித்தாள் = பூப்போலச் சிரித்தாள்.
தெற்றென + பேசினார் = தெற்றெனப் பேசினார்.
அ + காட்சி = அக்காட்சி
ஆங்க + குயில் = ஆங்கக் குயில்
சுட்டின் முன்
3. சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின்
ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும்.
சுட்டு எழுத்தாகிய அகரத்தின் முன்னர் ஞ, ந, ம ஆகிய எழுத்துகள் வருமொழி முதலாக வந்தால் அவ்வவற்றிற்குப் பொருத்தமான ஒற்று எழுத்துகள் மிகுந்து வருதல் வேண்டும்.
அ + ஞாலம் = அஞ்ஞாலம்
அ + நூல் = அந்நூல்
அ + மான் = அம்மான்
4. ய வ முன் வரினே வகரம் ஒற்றும்.
சுட்டு எழுத்தாகிய அகரத்தின் முன்னர் வருமொழி முதல் எழுத்துகளாக ய, வ ஆகியன வந்தால் வகர ஒற்று இடையே மிகுந்து வரும்.
அ + யாழ் = அவ்யாழ்
அ + வாழை = அவ்வாழை
5. உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.
வருமொழி முதல் எழுத்துகளாக ய, வ ஆகியன மட்டுமன்றி உயிர் எழுத்து வந்தாலும் மேலே கூறிய வகர ஒற்றே மிகுந்து வரும்.
அ + அணில் = அவ்வணில்
அ + எழில் = அவ்வெழில்
ஆயியல் திரியாது - முன்பு கூறிய இலக்கணத்திலிருந்து மாறாது.
6. நீட வருதல் செய்யுளுள் உரித்தே.
வல்லினம் தவிர்த்த பிற எழுத்துகளை முதலாகக் கொண்ட சொல் வருமொழி முதலில் அமையும்பொழுது அகரச் சுட்டானது 'ஆ' என்று நீண்டு அமையும். இது செய்யுளில் மட்டுமே அமையும்.
ஆயிடை
ஆவயின்
ஆக இதுவரை,
1. அகர இறுதி முன்னர் க ச த ப வரின் - அந்த ஒற்று மிகும்.
2. வினையெஞ்சு கிளவி
உவமை
'என'
சுட்டின் இறுதி
உரையசைக் கிளவி
3. அகரச் சுட்டின் முன்னர் ஞ ந ம - அந்த ஒற்று மிகும்.
4. சுட்டின் முன்னர் ய வ - வகர ஒற்று
5. சுட்டின் முன்னர் உயிர் எழுத்து - வகர ஒற்று
6. அகரச் சுட்டு - நீண்டு ( செய்யுளில் )
என்று பார்த்தோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக