தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

 

கற்பது தமிழ்

TNPSC, TET 1 & 2, UG TRB, PG TRB,

College TRB, SET, SLET & UGC NET Paper 2 Tamil

சிற்றிலக்கியங்கள்

மாதிரி வினாத்தாள்

பள்ளு இலக்கியம்

 

64.  சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம்?

பள்ளு இலக்கியம் 

65.  பள்ளு இலக்கியம் என்றால் என்ன?  அல்லது எந்நிலத்து வகை இலக்கியம்?

·         பள்ளர்களின் வாழ்க்கையை விளக்கிக் கூறுவது

·         உழவுத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர்கள்.

·         இவர்களில் பெண்கள் பள்ளியர், பள்ளத்தியர் என அழைக்கப்படுவர்.

·         எனவே, வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம்

·         எனவே, இது  மருத நில இலக்கியம் ஆகும். 

66.  பள்ளு இலக்கியத்தின் நோக்கம் யாது?

விவசாயத் தொழில் செய்யும் உழவர்கள், உழத்தியர்கள் ஆகியோரின் ஏழ்மை வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிமையாக, இனிமையாக, சுவையாகக் கூறுவது.

 67.  பள்ளங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளியைப் பற்றிப் பாடும் சிற்றிலக்கிய வகை?

பள்ளு

 68.  பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்கள்காரணம் தருக

வேறு பெயர்கள்  :  பள்ளு, உழத்திப் பாட்டு, பள்ளேசல்,பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ்,  பள்ளிசை . . .

பள்ளு   :  பள்ளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுதல்

உழத்திப் பாட்டு  :  பள்ளரின் இரு மனைவியரே இந்நூலின் பெரும் பகுதியில் ஆட்சி செய்வதால்

பள்ளேசல்  :  நூலின் இறுதியில் மூத்த பள்ளியும் இளைய பள்ளியும் ஏசிக்கொள்வதால்

பள்ளு நாடகம்  :  நடித்தற்கு உரியது; பாடுவதற்கு உரியது; இயல் இசை நாடகம் என்னும் மூன்று கூறுகளும் நிறைந்திருப்பதால் ..

 69.  பள்ளு இலக்கியத்தின் பா வகை?

·         பாட்டுடைத் தலைவனின் பெருமைகளை ஆங்காங்கே எடுத்துக்கூறி, சிந்து, கலிப்பா, விருத்தம், தரு ஆகிய பா, பாவினங்களால் விரவப்பெற்று, நாடகத் தமிழால் வருவது

·         இவற்றுள்  பெரும்பாலும் சிந்துப்பாடல்கள்  :  கதைமாந்தர் கூற்றாகவும்,

·         கலிப்பாக்கள் பெரும்பாலும் :  புலவர் கூற்றாகவும்

·         இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றினையும் தழுவியதாகவே . . .

 70.  பள்ளு இலக்கியம் நாட்டுப்புறங்களில் எவ்வாறு அமைகிறது ?

நாட்டுப்புறங்களில் மனிதர்களின் மேல் தெய்வம் இறங்கும் என்பது நம்பிக்கை.

இந்த நம்பிக்கை பள்ளு இலக்கியங்களில் காண முடிகிறது.

மள்ளர்கள் மழை வேண்டி வழிபாடு செய்யும்போது பள்ளன்மீது தெய்வம் வந்து இறங்குகிறது.

             "சங்கிலிக் கருப்பண்ண வந்திறங்கிக்கோ

  சகலமான பேச்சி தாயே வந்திறங்கிக்கோ

 விந்தை இருளப்பன் வந்திறங்கிக்கோ

 எங்கள் வீரபத்திர அய்யனாரே வந்திறங்கிக்கோ  /  பஞ்சமி செட்டியார் பள்ளு

இப்பாடலைப் பாடும்போது உடுக்கை அடித்து அருள்வர வேண்டுவர்.

வந்திறங்கிக்கோ என்ற தொடர் திரும்பத் திரும்ப வருவது நாட்டுப்புறப் பாடல் மரபு.

   "அந்தமில்லா ஆதியில்லா ஆண்டவனே மழை தருவீர்

   நந்தலறும் அலங்கார நாயகியே மழைதருவீர்"  /  செண்பகராமன் பள்ளு

    "தொல்லுலகு எல்லாம் புகழும் சுவாமி முனிப்பெருமாள்

      நல்லபுகழ் ஓங்கும் நரசிங்கப் பள்ளிசைக்க

      எல்லனும் சந்திரனும் ஈசுரனும் வாசவனும்

      வல்லபை யிடத்தமைந்த வாரணனும் காப்பாமே"  /  நரசிங்கப் பள்ளு

 71.  பள்ளு இலக்கியத்தின் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

பள்ளு இலக்கியத்தின் உறுப்புகள்  :  48

1. கடவுள் வணக்கம் ( காப்பு ),      2. மூத்த பள்ளி வரல்,

3. இளைய பள்ளி வரல்,                     4. குடும்பன் ( பள்ளன் ) வரல்,

5. பள்ளியர் குடித்தரங் கூறல்,       6. பள்ளியர் பெயர்ப் பெருமை கூறல்,

7. நாட்டு வளங்கூறல்,                        8. நகர் வளங்கூறல்,

9. குயில் கூவக் கேட்டு மகிழ்தல்,             10. மழை வேண்டி கடவுட் பரவல், 11. மழைக்குறி ஓர்தல்,                             12. மழை பொழிதல்,

13. ஆற்று வரவு ( வெள்ளம்  பாய்ச்சல் ), 14. அதன் சிறப்புக் காண்டல்,

15. ஐந்திணை வளங்கூறல்,                        16. பண்ணைத் தலைவன் வரவு,

17. பள்ளிகள் முறையீடு,                             

18. இளையவளிடம் பண்ணைத் தலைவன் உரைப்பது,

19. பள்ளன் வெளிப்படல்,                            20. பண்ணைச் செயல் வினவல்,

21. பள்ளன் அவை கூறல்,                            22. ஆயரை வருவித்தல்,

23. ஆயர் வருகை,                                            24. ஆயர் பெருமை கூறல்,

25. மூத்தப் பள்ளி முறையீடு,                    

26. பள்ளன் கிடையிலிருந்தான்போல் வரல்,

27. அவனைத் தொழுவில் மாட்டல்,        28. அவன் புலம்பல்,

29. மூத்த பள்ளி அடிசில் கொண்டு வரல்,    30. பள்ளன் அவளொடு கூறல், 31. அவன் அவளை மன்னிப்புக் கேட்க வேண்டுதல்,   32. அவள் மறுத்தல், 33. அவன் துன்பப்படல்,                             

34. அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல்,

35. விதை முதலிய வளம் கூறல்,              36. கிடை வளங் கூறல்,

37. காளை வளங் கூறல்,                               38. ஏர்பூட்டி உழுதல் ( ஏர்மங்கலம் ), 39. காளை வெருளல்,                                           

40. காளை பள்ளனை முட்டல், பள்ளன் கீழே விழுதல்,

41. பள்ளிகள் புலம்பல்,                                 42. பள்ளன் எழுந்திருந்தல்,

43. பண்ணைத் தலைவர்க்கு அறிவித்தல்,    44. நாற்று நடல்,

45. அருவி வெட்டல், கடாவிடுதல்,          

46. நெற்பொலி தூற்றல், அளத்தல் (முகவைப்பாட்டு),

47. மூத்த பள்ளி முறையீடு,

48. பள்ளிகளுள் ஒருவருக்கொருவர் ஏசல்.

குறிப்பு  :  இந்த உறுப்புகளில் சில குறைந்தும் கூடியும் திரிந்தும் சில பள்ளு இலக்கியங்கள் அமைகின்றன.

 72.  பள்ளு இலக்கியம் பிற கருத்துகள்?

ü  மருதநில வேளாண் மக்களிடம் பண்டைக் காலம் முதலே  ஏர்மங்கலம், உழத்திப் பாட்டு, விருந்திற்பாணி, முகவைப் பாட்டு, ஏரோர் களவழி, புலன் ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு எழுந்த எழுத்து இலக்கியம்.

ü  உழவைப் புகழ்ந்து பாடும் வழக்கம் இன்றும் மள்ளர்குல உழத்தியர்களிடம் காணப்படுதல்.

ü  பள்ளு நூல்கள் பெரும்பாலும் ஏதேனும் ஓர் இறைவனுடன் இறைத் தளத்துடன் தொடர்புபடுத்தியே பாடப்படுதல்.

ü  மூத்த பள்ளி ஒரு சமயத்தவராகவும் இளைய பள்ளி வேறொரு சமயத்தவராகவும் அமைந்து தங்களின் கடவுளே சிறந்தவர் என்று பேசும் ஏசல் முறை அமைதல்.

ü  16, 17 ஆம் நூற்றாண்டுகளில் சைவம் - வைணவ சமயத்திற்குள் நடந்த சமயப் பூசல்கள் பள்ளு நாடகங்களின் மூலம் மக்களிடம் நடத்திக் காட்டப்பட்டுள்ளன.

 73.  தொல்காப்பியரின்  'பள்ளு' குறித்த கருத்து?

§      தொல்காப்பியர் குறிப்பிடும் 34 செய்யுள் உறுப்புகளுள் எண்வகை வனப்பு :  அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு

§      இந்த எண்வகை வனப்புகளுள் புலன் என்பதன் வளர்ச்சியே பிற்காலத்துத் தோன்றிய பள்ளு இலக்கியங்கள்.

§      புலன் என்பது பள்ளு என்னும் இலக்கியத்தை நேரடியாகக் குறிக்காவிட்டாலும் வழக்குச் சொல்லால் தொடுக்கப்பட்ட ஏர்மங்கலம், உழத்திப் பாட்டு போன்ற இலக்கிய வகைமையைக்; குறிக்கின்றது.

 

74.  தொல்காப்பியரின் 'பள்ளு' குறித்த கருத்துகளுக்கான சான்றுகள்?

·         பள்ளு இலக்கியத்தின் முதல் வித்துக்கள் : தொல்காப்பியரின் தொல்காப்பியமே!

·         புறத்திணையியல்  :  வாகைத் திணை  :  ஏரோர் களவழி / வேளாண்மைச் செயல்களை விரித்துப் பாடுவது

·         செய்யுளியல்   :  புலன் என்பதற்குத் தந்திருக்கின்ற விளக்கம்

·         தொல்காப்பியர் கூறும் ஏரோர் களவழி, புலன் ஆகிய இரண்டின் விரியாக  :  பள்ளு இலக்கியங்களின் 48 உறுப்புகளும் . . . .

 75.  பள்ளு என்னும் சிற்றிலக்கிய வகைக்கு இலக்கணம் கூறிய நூல்?

பன்னிரு பாட்டியல்

ஆனால், இந்நூல் 'உழத்திப் பாட்டு' என்றே குறிக்கிறது.

                       "புரவலர் கூறி அவன் வாழிய என்று

                       அகவயல் தொழிலை ஒருமை உணர்ந்தனள்

                        எனவரும் ஈரைந்து உழத்திப் பாட்டே"

 76.  பள்ளு இலக்கணம் குறித்துக் கூறிய பிற பாட்டியல் நூல்கள்?

·         பல்வேறு சிற்றிலக்கிய வகைகளுக்கு உரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.

·         ஆனால், இவற்றுள்  பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையின் இலக்கணம் காணப்படவில்லை.

·         நவநீதப் பாட்டியலில் பிற்காலத்தில் சேர்க்கப்பெற்றுள்ள பல பாடல்களில் நான்கு பாடல்களில் உழத்திப் பாட்டு என்றால் என்ன என்று விளக்கப்படுகின்றது.

·         உழத்திப் பாட்டை, "பள்ளு" என்றும் கூறுவர் என்று கூறுகிறது .

 77.  பள்ளு குறித்த சங்க காலச் சான்றுகள்?

சங்க காலத்தில் வாழ்ந்த மள்ளர்களே, கி.பி.16 ஆம் நூ., முதல் பள்ளர்கள் என்று அழைக்கப்பெறுகின்றனர்.

பள்ளு இலக்கியங்களில் மருதநில உழவர்கள் பள்ளர் &  மள்ளர் என்று குறிக்கப்படுகின்றனர்.

            போத மள்ளர்      -  திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு

             மள்ளர் குலம்     - முக்கூடற் பள்ளு

            மள்ளியர்             - பொய்கைப் பள்ளு

           மூத்த மள்ளி        -  பொய்கைப் பள்ளு

இச் சான்றுகளிலிருந்து மள்ளரும் பள்ளரும் ஒருவரே;

மருத நில உழவர்களே என்பதை அறிய முடிகின்றது.

மள்ளர்கள்  :  குடும்பன், தேவேந்திரப் பள்ளன், பண்ணாடி

பள்ளியர்கள் :  மள்ளியர் & மள்ளி

 78.  இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தில் கூறியுள்ள மருத நில மக்கள் வாழ்வு பற்றிய கருத்துகள்?

மருத நில மக்கள் :  வயலும் வயலைச் சார்ந்த இடத்திலும் உள்ள மக்களின் வாழ்க்கையைக் கூறுகின்றது.

இளங்கோவடிகள் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு என்று உழவர்களின் வாழ்க்கையைக் காட்டுகின்ற சொற்களைப்  படைத்துள்ளார்.  /  நாடுகாண் காதை

 79.  ஏர்மங்கலம் என்பது யாது?

முதன் முதலாக ஒரு நல்ல நாளில் ஏரைப் பூட்டி உழத் தொடங்குவதைப் பொன்னேர் பூட்டுதல்

பொன் ஏர் பூட்டி நின்ற உழவர்கள் தம் உழவுக் கருவியாகிய ஏரை வாழ்த்தி, நன்கு விளையுமாறு வேண்டிப் பாடும் பாட்டு.

 80.  முகவைப் பாட்டு என்றால் என்ன?

வயல்களில் நெற் பயிர்கள் நன்றாக விளைந்த பின்பு அவற்றை உழவர்கள் அறுப்பர்.

அவற்றை வீட்டிற்குச் சுமந்து வந்து பரப்பி, மாடுகளால் மிதிக்கச் செய்து நெல்லையும் வைக்கோலையும் பிரிப்பர். அப்போது பாடும் பாட்டு முகவைப் பாட்டு

 81.  பள்ளு குறித்து வீரமாமுனிவர் கூறும் கருத்து?

வீரமாமுனிவர் :  சதுரகராதியில் தொகை அகராதி என்ற பிரிவு  : சிற்றிலக்கிய வகைகள் பலவற்றின் விளக்கங்கள் கூறப்படுகின்றன.

அவற்றுள் உழத்திப் பாட்டு என்பதன் விளக்கமும் காணப்படுகிறது.

 82.  பள்ளு வகைச் சிற்றிலக்கியங்களில் கூறப்படும் முக்கியமான தகவல்கள்?

விதைகளின் வகைகள்,            ஏர்க்காலின் வகைகள்,

மாடுகளின் குணம்,                   குறிகள் ( அடையாளங்கள் ),    

மீன் வகைகள்    ஆகியன

 83.  பள்ளு இலக்கியத்தில் காட்டப்பெறும் விருந்தோம்பல் காட்சி?

வருவிருந்தினர்க்கு உபசரிப்பது போல் தாழை சோறிட

வாழை குருத்து அளிக்கும்"

 84.  பள்ளு நூலில் வேளாண் தொழிலாளி வருணிக்கப்படும் விதம்?

           "கறுக்கும் கிடாய் மருப்பின்

              முறுக்கு மீசையும் - சித்ரக்

             கத்தரிகை யிட்ட வன்னக்

             கன்னப் பரிசும்

குறுக்கில் வளைதடி சேர்த்து

இறுக்கும் கச்சையும் - செம்பொற்

                                கோலப் புள்ளி உருமாலும்

                                நீலக் கொண்டையும்

                               சறுக்கும் தொறும் குதிப்பும்

                              சுறுக்கும் தலை அசைப்பும்

. . .

மறுக்கும் மதுவெறிகொண்டு

உறுக்கும் சிரிப்பும் தோன்ற

     வடிவழகக் குடும்பன்

     தோன்றி னானே.

 85.  பள்ளு நூலில் காட்டப்படும் பள்ளர்கள் தொடர்பான பிற காட்சிகள்?

v  வேளாண் கூலியின் மதுப் பழக்கம்,

v  சக்களத்தியர் ஏசிக் கொள்ளுதல்,

v  நில உடைமையாளர் தொழிலாளியைத் தொழுவில் கட்டி அடித்தல் ஆகியன

 86.  பள்ளு இலக்கியங்களில் தொல்காப்பியர் கூறும் சேரிமொழி?

புலன் :  சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்தல்

பேச்சுவழக்குச் சொற்களால் அமைந்த இலக்கியம் புலன் ஆகும்.

பள்ளு இலக்கியங்களில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேல் பேச்சுவழக்கு மொழிகள் அமைந்துள்ளன.

தொல்காப்பியர் கூறும் சேரிமொழிகள்

சட்டித்தலை,              முண்டை,                              ஓட்டுச் சாய்ப்பு,

மிஞ்சிப் பேசில் நெஞ்சறுப்பேன்,                      அஞ்சிப் பேசடி,

போருமடா பள்ளா,                 கூத்தியார்,           மூதலி,       

புருசன்,                                          கெட்ட பேச்சு,     சிறுக்கி,         

ஞாயம்,        கள்ளி,                   சொள்ளை மூக்குப் பண்ணையார், சாராயம்,    கள்,   பழிகாரி,       சக்களத்தி

முதலானவை பள்ளு இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.

 87.  பள்ளு இலக்கியத்தின் தோற்றம்?

16 ஆம் நூ . ,

 88.  பள்ளு இலக்கியத்தின் முதல் நூல் எது?

முக்கூடற்பள்ளு   /  காலம்  :  17-ஆம் நூ., இறுதி

 89.  முக்கூடற் பள்ளு என்னும் பள்ளு நூலிற்குப் பின் எழுந்த பள்ளு நூல்கள் சிலவற்றைக் கூறுக.

ஞானப்பள்ளு,                திருவாரூர்ப் பள்ளு,     குருகூர்ப் பள்ளு, சிவசயிலப் பள்ளு,         வைசியப்பள்ளு,            வடகரைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு,                                 சீகாழிப் பள்ளு,

செண்பகராமன் பள்ளு,                                           தில்லைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு,                     கண்ணுடை அம்மை பள்ளு,    

திருப்புன வாயிற் பள்ளு,    கதிரை மலைப் பள்ளு,

பறாளை விநாயகர் பள்ளு,            தண்டிகைக் கனகராயன் பள்ளு,         குற்றாலப் பள்ளு,                                 திருச்செந்தில் பள்ளு,

போரூர்ப் பள்ளு,                                  இருப்புலிப் பள்ளு,

திருவிடை மருதூர்ப் பள்ளு,          புதுவைப் பள்ளு போன்றவை.

 90.  பள்ளு என்னும் சிற்றிலக்கியத்தின் அமைப்பு?

ü  பாட்டுடைத் தலைவனின் பெயர் மட்டும் கூறப்படும். மற்றவர்களின் பெயர்கள் கூறப்படுவது இல்லை.

ü  பள்ளனின் பெயர் பாட்டுடைத் தலைவனின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும்.

ü  மூத்த பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊர் அல்லது நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும். இளைய பள்ளியின் பெயர் பாட்டுடைத் தலைவனின் ஊரின் பக்கத்து ஊர் அல்லது பக்கத்து நாட்டின் பெயருடன் சேர்த்துக் கூறப்படும்.

ü  இரண்டு பள்ளியர்களில் ஒருத்தி சிவன் அடியாராகவும் மற்றொருத்தி திருமால் அடியாராகவும் காணப்படுவர்.

சான்று  :   முக்கூடற்பள்ளு  :  வைணவ சமய நூல்.

பாட்டுடைத் தலைவன் அழகர். 

பள்ளனின் பெயர் அழகக் குடும்பன்.

மூத்த பள்ளியின் பெயர் முக்கூடற் பள்ளி.

இளைய பள்ளியின் பெயர் மருதூர்ப் பள்ளி.

திருவாரூர்ப் பள்ளு   :  சைவ சமய நூல்.  

பாட்டுடைத் தலைவன் :  வன்மீக நாதன்.

பள்ளனின் பெயர் வன்மீகப் பள்ளன்.

மூத்த பள்ளியின் பெயர் :  வன்மீகப் பள்ளி.

இளைய பள்ளியின் பெயர் சீரங்கப் பள்ளி

 

91.  பள்ளு இலக்கியத்தின் கதைச் சுருக்கம்?

                ஏராளமான நிலங்களைக் கொண்ட ஒரு செல்வனின் பண்ணையில் பள்ளன் ஒருவன் பரம்பரை பரம்பரையாக விவசாய வேலை செய்து வருகின்றான். அவனுக்கு இரண்டு மனைவியர். பள்ளன் தன் விவசாய வேலைகளைக் கவனிக்காது இளைய மனைவியிடம் மயங்கிக் கிடக்கின்றான். மூத்த மனைவியைக் கவனிக்கவில்லை. அப்போது நல்ல மழை பெய்கின்றது. ஆற்றில் தண்ணீர் நிரம்ப வருகின்றது.

                பள்ளனோ விவசாய வேலைகளைச் செய்யாமல் இளைய மனைவியின் வீட்டிலேயே இருக்கின்றான். இதை மூத்த மனைவி பண்ணையிடம் கூறுகின்றாள். பண்ணைக்காரன் கோபம் கொள்கின்றான். இதை அறிந்த பள்ளன் பயந்து போய் பண்ணையிடம் வருகின்றான். பண்ணை பள்ளனிடம் விவசாய வேலைகள் பற்றிக் கேட்கிறான். பள்ளன் கூறுகின்றான்.

              அதனால், பண்ணையின் ஆணைப்படி வயல்களில் ஆட்டுக் கிடை வைக்க இடையனை அழைத்து வருகின்றான். பின், பள்ளன் இளைய மனைவியின் வீட்டிற்குச் செல்கின்றான். இதை அறிந்த மூத்த மனைவி மீண்டும் பண்ணையிடம் சென்று கூறுகின்றாள்.

         இதை அறிந்த பள்ளன் விவசாய வேலைகளைச் செய்வது போல் நடிக்கின்றான். இதனால், பண்ணை அவனைத் தண்டிக்கும் பொறி ஆகிய தொழுவத்தில் மாட்டித் தண்டிக்கின்றான். இதனால் பள்ளன் வருந்துகின்றான். இதைக் கண்ட மூத்த மனைவி மனம் வருந்துகின்றாள். பள்ளனை மீட்கின்றாள்.

             விடுபட்ட பள்ளன் ஒரு நல்ல நாளில் வயல்களை உழச் செல்கின்றான். பள்ளனை ஒரு மாடு முட்டி விடுகின்றது. அதனால் பள்ளன் மயங்கி விழுகின்றான். பின் மயக்கம் நீங்கி வயலை உழுகின்றான். சில நாட்கள் சென்றதும் பயிர் நன்கு விளைகின்றது. அவன் மூத்த மனைவிக்கு உரிய பங்கு நெல்லைச் சரியாகக் கொடுக்கவில்லை என அவள் பள்ளர்களிடம் முறையிடுகின்றாள்.

              இதை இளைய மனைவி கேட்கின்றாள். மூத்த மனைவிக்கும் இளைய மனைவிக்கும் சண்டை ஏற்படுகின்றது. இறுதியில் இருவரும் சமாதானம் அடைகின்றனர். பள்ளனுடன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

         இவையே பெரும்பாலான பள்ளு நூல்களின் செய்திகள் ஆகும்.

92.  பள்ளு மூலமாகக் கூறப்படும் சமயக் கருத்துகள்?

ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தவள்;  மற்றவள் வைணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவனதும், திருமாலினதும் தலைகள் உருளுவதை முக்கூடற் பள்ளு ஆசிரியர் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார்.

       ". . . .சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்

      தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி"

என்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள்.

            அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி

            "கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு

            கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி"

சிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள்.

"நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி

நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி"

என்று கூறும் மூத்த பள்ளிக்கு,

        "மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்

          மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி"

என்று இளைய பள்ளி பதிலடி தருகிறாள்.

 93.  பள்ளனின் வருகை குறித்துச் சான்று தருக.

நெற்றியில் வெண்ணீறுமிட்டு

மற்றொரு சந்தனப் பொட்டும்

நேர்த்தியாய் அணிந்து அசைந்து லாத்தி நடந்து

மெத்தவே குறும் சிரிப்பும்

முற்றிடுங் கிடாய் மருப்பின்

மீசை முறுக்கி ..  /  பள்ளன் வருகை, செங்கோட்டுப்பள்ளு

 

முண்டை முறையிட்டதென்ன

முக்கூடற்பள்ளி  உங்கள்

மூப்புச்சொம் மெனக்குத் தந்தால்

மூதலியடி

தொண்டை கட்டக் கூப்பிடாதே

கூப்பிட்டு என்னை  வைது

சொன்ன பேச்சைப் பன்ணையார்க்குச்

சொல்லுவேண்டி"   /   முக்கூடற் பள்ளு 

94.  பள்ளு நூல்கள்  சிலவற்றைக் குறிப்பிடுக.

அகத்தியர் பள்ளு         இரும்புல்லிப் பள்ளு   எட்டையபுரப் பள்ளு

கங்காநாயக்கர் பள்ளு                     கஞ்சமி செட்டியார் பள்ளு

கட்டி மகிபன் பள்ளு                           கண்ணுடையம்மன் பள்ளு

கதிரை மலைப் பள்ளு                      குருகூர்ப் பள்ளு

கொடுமாளூர்ப் பள்ளு                      கோட்டூர் பள்ளு

சண்பகராமன் பள்ளு                        சிவசயிலப் பள்ளு

சிவசைல பள்ளு                                   சீர்காழிப் பள்ளு

செண்பகராமன் பள்ளு                    சேரூர் ஜமீன் பள்ளு

ஞானப் பள்ளு                                        தஞ்சைப் பள்ளு

தண்டிகைக் கனகராயன் பள்ளு   திருச்செந்தில் பள்ளு

திருமலை முருகன் பள்ளு                 திருமலைப் பள்ளு

திருவாரூர்ப் பள்ளு                               திருவிடைமருதூர்ப் பள்ளு

தென்காசைப் பள்ளு                          பள்ளுப் பிரபந்தம்

பறாளை விநாயகர் பள்ளு             புதுவைப் பள்ளு

பொய்கைப் பள்ளு                              மாந்தைப் பள்ளு

முக்கூடற் பள்ளு                                    முருகன் பள்ளு

வையாபுரிப் பள்ளு    

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,