இத்தக் காலகட்டத்தில் நச்சினார்க்கினியர், பரிமேலழகர், சிவஞான முனிவர் போன்ற தமிழ்த் திறம்மிக்கோர் தமிழிலக்கியத் தொன்டுகள் ஆற்றிக் கொண்டிருந்த நேரமும்கூட! இத்தமிழ்ப்பணியை ஆற்றிட இலங்கையிலும் ஓர் அறிஞர் தோன்றினார். அவர்தாம் ஆறுமுக நாவலர்!
இவரது தோற்றம் முதல் தமிழ்த் தொண்டுகள் வரை பற்றி இனிக் காண்போம்.
இயற்பெயர் : ஆறுமுகம் பிள்ளை
பிறப்பு : டிசம்பர் 18, 1822.
ஊர் : நல்லூர் ( யாழ்ப்பாணம், இலங்கை.)
தந்தையார் : கந்தப்பிள்ளை; தாயார் : சிவகாமி அம்மையார்.
உடன்பிறந்தோர் : மூத்த சகோதரர்கள் நால்வர்;
தமக்கையர் மூவர்.
( இவர், இறுதி மகனாகப் பிறந்தார். )
மொழிப்புலமை : தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்.
பன்முகத் திறமைகள் : ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், பாடசாலை மற்றும் அச்சுக்கூட நிறுவனர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், எழுத்தாளர்.
புகழ் அடைந்த விதங்கள்
1. அச்சுக்கூடம் நிறுவியமை : வித்தியாநுபாலன இயந்திரசாலை என்னும் அச்சுக்கூடம்.
2. அச்சிட்டமை : பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலய தரிசனவிதி, சைவசமய சாரம், கொலைமருத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படை உரை போன்ற நூல்களை அச்சிட்டமை.
3. எழுத்தாளர் : திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதியமை.
4. வெளியீட்டாளர் : ஞானக்கும்மி, யேசுமத்த பரிகாரம், வச்சிர தண்டம் ஆகிய நூல்கள்.
5. பதிப்பாசிரியர் : இலக்கணக் கொத்து, சைவசமய வினா-விடை, இலக்கண வினா-விடை, ஏரெழுபது உள்பட அறுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
மேலும், திருவாவடுதுறை, திருநாகைக்காரோணம் ஆகிய இடங்களில் சைவப் பிரசங்கங்கள் .செய்தார்.
சைவ சமய வளர்ச்சி, சைவத் தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகியனவற்றிற்கு உழைப்பதே இவரது முதன்மை நோக்கமாக இருந்தது.
இவ்வளர்ச்சிக்கு உதவுகின்ற மிகப் பெரிய வாசல் 'பிரசங்கம் செய்தல்' என்பதைக் கைக்கொண்டார். அதன்படி, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவில் ( யாழ்ப்பாணம் ), திருவாவடுதுறை, திருநாகைக்காரோணம், இராமநாதபுர சமஸ்தானம், மதுரை, குன்றக்குடி ஆகிய இடங்களில் சைவசமயப் பிரசங்கங்கள் செய்தார்.
சுருக்கமாகக் கூறுவதானால், "தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டு செய்வதே என் கடன்" என்று வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டினார்.
வள்ளலார் இராமலிங்கம் பிள்ளை எழுதிய நூல் திருவருட்பா ஆகும். இந்நூலின் சில பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டதுடன் அவற்றிற்குப் பதிலாக, சிவாலயங்களில் பாடப்பட்டன. இதனைக் கண்ட நாவலர், திருமுறைகளுடன் திருவருட்பாவை ஒப்பிடுவது தவறு. பாடப்படுவதும் தவறு என்று கூறியதுடன் 'போலியருட்பா மறுப்பு" என்னும் நூலையும் எழுதினார்.
இவரது கருத்துகளை அறிந்த சைவப் பெரியோர்கள் சிலர், வள்ளலாரைக் கொண்டு சிதம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் நாவலர் மீது வழக்குத் தொடுத்தனர்.
இறுதிக்காலம்
இதுவரை அனைத்துப்பணிகளிலும் தாம் பெற்ற அனுபவங்களைக் கொண்டு, "யாழ்ப்பாணச் சமயநிலை" என்னும் நூலை எழுதினார். மேலும், நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூல் காண்டிகையுரை, தமிழ் அகராதி, தமிழ்-சம்ஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி உள்பட பல நூல்களை எழுதினார்.
தம் தமிழ் மற்றும் சைவ சமயத் தொண்டுகளாலே வாழ்ந்து வந்த இவர், டிசம்பர் 5, 1879 இல் விண்ணுலகம் அடைந்தார்.
1. யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே இவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டமை.
2.
இலங்கை அரசு இவரது சிறப்பினைப் போற்றும் வகையில்
அஞ்சல் தலை ஒன்று வெளியிட்டது. ( அக்டோபர் 29, 1971 ).
3. மண்ணிவாக்கத்தில் ( சென்னை ) அமைந்துள்ள ஸ்ரீ நடேசன் வித்யாலயா பள்ளி, இவரது பெயரில் கலையரங்கம் அமைத்துள்ளது.
4. சைவ மக்கள் இவரை "ஐந்தாம் சமயக்குரவர்" என்று போற்றுகின்றமை.
இவரது வாழ்க்கை வரலாற்றை, ' நாவலர் சரிதம்" என்னும் பெயரில் த. கைலாசம்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். ‘வடமொழிகளின் இயல்பறியாமையினாலும் ழகர, ளகரங்களின் பேதமறியாமையினாலும் சொற்களைப் பிழைப்படுத்தி வழங்கிவந்திருக்கிறார்கள். ஏடுகள் எழுதுகிறவர்களும் மேன்மேலும் பிழைகளை உண்டாக்கிவிட்டார்கள். இவைகளாலே தமிழ்ச் சொற்களினுடைய உண்மையான சொரூபம் தெரியாமற் போயிற்று” என்று எழுதி பிழையாக வழங்கும் சிலசொற்களையும் அவற்றின் சரியான சொரூபங்களையும் காட்டியுள்ளார்.
உதாரணமாக, கற்பூரம், குங்கிலியம், பருதி, அருணம், சிகப்பு, உத்தராயனம், கத்திரித்தல் என்று எழுதுவதெல்லாம் தவறு. இச்சொற்களின் சரியான வடிவம் முறையே, கர்ப்பூரம், குங்குலியம், பரிதி, அரிணம், சிவப்பு, உத்தராயணம், கத்தரித்தல் என்று காட்டியுள்ளார்.
புகழால் மேன்மை அடையக்கூடிய துன்பமும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவில் சிறந்தவருக்கு மட்டுமல்லாமல் பிறருக்கு ஒரு போதும் கிடையாது என்னும் திருவள்ளுவரின் 'நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது' குறளின்வழி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், ஆறுமுக நாவலர்.
கருத்துகள்
கருத்துரையிடுக