தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,

 

கற்பது தமிழ்

சிலப்பதிகாரம்

சங்க இலக்கியங்கள்  தன்னுணர்ச்சிப் பாடல்களையே கொண்டு திகழ்ந்தன.  இப்போக்கை முதன்முதலில் மாற்றி அமைத்தவர் இளங்கோவடிகள்.  'சிலப்பதிகாரம்' என்னும் ஒப்பில்லா நூலைக் 'காப்பியம்' என்னும் இலக்கிய வகையில் அமைத்தார். செம்மொழியாம் தமிழ்மொழிக்கு உரிய  முதல் சான்றாகத் திகழ்கிறது, சிலப்பதிகாரம்! சுருக்கமாகச் சொன்னால் தமிழில் தோன்றிய முதல் காப்பியம்!

சிறப்புகள்

·       குடிமக்கள் காப்பியம்

·       மூவேந்தர் காப்பியம்

·       புரட்சிக் காப்பியம்

·       முத்தமிழ்க் காப்பியம்

·       நாடகக் காப்பியம்

·       உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

·       பெண்ணுக்கு முதன்மை தந்த முதல் காப்பியம்

நூல் அமைப்பு

1.  காண்டங்கள்       -  மூன்று

             புகார்             மதுரை          வஞ்சி

2. உள்பிரிவு              -  30 காதைகள்

     புகார்         -  10

      மதுரை     -  13 

      வஞ்சி     -    7

3.  பாவகை  -  பெரும்பாலும் அகவற்பா

     உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

4.  தன்மை 

     நாடகக் கூறுகள் அனைத்தும் உள்ளன.

     இசைப்பாடல்களும் உள்ளன 

5.  முப்பெரும் உண்மைகள்

i  அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

ii   ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

iii உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.

புகார்க் காண்டம்  -  10 காதைகள்

மங்கல வாழ்த்துப் பாடல்                              மனையறம் படுத்த காதை.

அரங்கேற்று காதை                                     அந்தி மாலைச் சிறப்பு செய் காதை

இந்திர விழவு ஊர் எடுத்த காதை                 கடல் ஆடு காதை

கானல் வரி                                                   வேனிற்காதை

கனாத் திறம் உரைத்த காதை                       நாடு காண் காதை

மதுரைக் காண்டம் - 13 காதைகள்

காடு காண் காதை             வேட்டுவ வரி                     புறஞ்சேரி இறுத்த காதை

ஊர் காண் காதை               அடைக்கலக் காதை            கொலைக்களக் காதை

ஆய்ச்சியர் குரவை            துன்ப மாலை                      ஊர் சூழ் வரி

வழக்குரை காதை           வஞ்சின மாலை             அழற்படுகாதை         

கட்டுரை காதை   

                                        வஞ்சிக் காண்டம்

குன்றக் குரவை                   காட்சிக் காதை                   கால்கோள் காதை                                  நீர்ப்படைக் காதை                நடுகற் காதை                    வாழ்த்துக் காதை      

வரம்தரு காதை

 இனி, காதைகளின் சுருக்கம்!

புகார்க் காண்டம்

1. மங்கல வாழ்த்துப் பாடல்

சோழனின் குடை போன்றது திங்கள்! அவனது திகிரி போன்றது ஞாயிறு! அவனது தண்ணளி போன்றது மழை! அவனது தொல்குடி போன்ற பெருமையுடையது புகார் நகரம்! என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை வாழ்த்தித் தொடங்குகின்றார்.

காவிரிப்பூம்பட்டினத்தில் மாநாய்கள் மகளாகக் கண்ணகி பிறந்தாள்; வயது பன்னிரண்டு; தீதிலா அருந்ததி போன்ற கற்பினள். அப்புகாரில் மாசாத்துவான் மகனாகத் தோன்றினான் கோவலன். வயது பதினாறு; முருகவேள் போன்ற சிறப்புடையவன். இத்தகைய கண்ணகி - கோவலன் திருமணம் காண்பார் வியக்குமாறு நடைபெற்றது.

'காதலர் பிரியாமல் வாழ்க!' என வாழ்த்தினர், மகளிர்.

2.  மனையறம்படுத்த காதை

காதலர் இருவரும் எழுநிலை மாடத்து இடைநிலத்தில் ஞாயிறும் திங்களும் போல, மலர்ப் படுக்கையில் கூடிக் களித்தனர். காதல் வயப்பட்ட கோவலன் கண்ணகியை, 'மாசறு பொன்னே! வலம்புரி முத்தே' எனப் பலவாறு பாராட்டினான். சில ஆண்டுகள் இனிதே கழிந்தன.

3. அரங்கேற்று காதை

            இக்கதையின் மற்றொரு கதாபாத்திரமான மாதவி , காவிரிப்பூம்பட்டினத்தில் கணிகையர் குலத்தில் பிறந்தவள். ஆடல், பாடல், அழகு என்னும் மூன்றிலும் சிறந்தவள்; ஏழாண்டு காலம் ஆடற்பயிற்சி பெற்றவள். சோழப் பேரரசன் முன்னிலையில் அவளது அரங்கேற்றம் நிகழ்ந்தது. ஆடல் கண்டு களித்த மன்னன் தலைக்கோல் பட்டத்தையும், பசும்பொன் மாலையையும் அவளுக்குப் பரிசாக அளித்தான்.

         "இம்மாலை ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் விலை மதிப் புடையது; இவ்வளவு விலை கொடுத்து வாங்குவோன் மாதவிக்கு உரியவன் ஆவான்!'' என்று கூறி, அதனை நகர நம்பியர் திரியும் வீதியில் விற்பது போல் தோழி கூனியை நிற்குமாறு செய்தாள், மாதவியின் தாய்! கோவலன் அம் மாலையை வாங்கி மாதவியை அடைந்தான்; நீங்காத விருப்புடன் அவளுடனே இருந்தான்; குற்றமற்ற கண்ணகியை மறந்தான்

4.அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

மாலைப்பொழுது வீசிய தென்றலில் ..பரவிய நிலவொளியில் கணவனைப் பிரியா மகளிர் கூடிக் களித்தனர். பிரிந்தோர் காமத்தீயில் வாடி வதங்கினர்! கோவலனும் மாதவியும் நெடுநிலா முற்றத்திலிருந்து நிலவுப் பயன் கொண்டனர். அழகுச் செல்வி காற்சிலம்பு ஒலிக்க ஆடினாள்; பாடினாள்; ஊடினாள். கூடினாள்; கொள்ளை இன்பம் உற்றான் கோவலன்!

ஆனால் கண்ணகியின் காலில் சிலம்பு இல்லை; நெற்றியில் திலகம் இல்லை; கூந்தலில் எண்ணெய் இல்லை; முகத்தில் சிரிப்பு இல்லை. கணவனைப் பிரிந்தோர் கண்ணகி போலவே தனிமைத் துயர் உற்றனர். இவ்வாறு புணர்ந்தோர் இன்புற, பிரிந்தோர் துன்புற மீனக் கொடியுடைய மன்மதன் விடிய விடிய இரவு முழுதும் ஆட்சி செய்தான்.

5. இந்திர விழவூரெடுத்த காதை

             பொழுது புலர்ந்தது. அவ்வேளையில்,  பூம்புகார் விழாக்கோலம் பூண்டது. மாந்தர் இந்திர விழா நடத்தத் தொடங்கினர். புகார் நகரம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரு பிரிவுகளை உடையது. மருவூர்ப் பாக்கத்தில் யவனர் இருப்பிடங்களும், பிறநாட்டு வணிகர் இருப்பிடங்களும் விளங்கின; வண்ணம், சுண்ணம், மலர் முதலியன விற்கும் வீதியும், நவமணிகள் விற்கும் வீதியும், பாணர் இருப்பிடங்களும் அங்கே திகழ்ந்தன. பட்டினப்பாக்கத்தில் அரச வீதியும், வேளாளர் வீதியும், கணிகையர் வீதியும் விளங்கின. அவ்விரு பாக்கங்களுக்கு இடையே நாளங்காடி என்னும் கடைத் தெரு அமைந்திருந்தது.

                நாளங்காடியில் உள்ள பூதத்திற்கு மறக்குடி மகளிர் பூப்பலி கொடுத்தனர். வீரர்கள் 'வேந்தன் வாழ்க!' என வாழ்த்தி வஞ்சினம் கூறித் தற்பலியிட்டனர். வேந்தன் வடதிசை சென்று வென்று பரிசாகப் பெற்று வந்த கொற்றப் பந்தரும். பட்டி மண்டபமும்,தோரண வாயிலும் ஒருங்கே காட்சியளித்த இடத்தும் பலி வழங்கப்பட்டது.

          வெள்ளிடை மன்றம். இலஞ்சி மன்றம். நெடுங்கல் மன்றம், பூத சதுக்கம். பாவை மன்றம் ஆகிய ஐவகை மன்றங்களிலும் பலிகள் தரப்பட்டன. வச்சிரக் கோட்டத்திருந்த முரசை ஐராவதக் கோட்டத்துக்குக் கொண்டு சென்று, விழாவின் தொடக்கமும் முடிவும் பற்றி அறிவித்தனர். கற்பகத் தருக் கோட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது.

                 காவிரியின் புனித நீரால் இந்திரனை நீராட்டினர். சிவபெருமான் முதலான பிற கடவுளரின் கோயில்களிலும் விழாச் செயல்கள் நடைபெற்றன. அறவோர் பள்ளிகளில் அறவுரைகள் நிகழ்ந்தன. பரத்தமை இழுக்கம் உடைய கணவன்மார் விருந்தினரை உடன் அழைத்துச் செல்ல, மனைவியர் ஊடல் தீர்ந்து கூடிக் களித்தனர். இவ்வின்பவிழா நாளில் கண்ணகிக்கு இடக்கண் துடிக்க, மாதவிக்கு வலக்கண் துடித்தது.

6.கடலாடு காதை

இமய மலையின் வடசேடியில் வாழும் விஞ்சையன், இந்திர விழாவினைக் காண விரும்பிக் காதலியுடன் புறப்பட்டான். கங்கை, உச்சயினி, விந்தம், வேங்கடம், காவிரி முதலானவற்றைக் காட்டிக் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான். மாதவி ஆடிய ஆடலைத் துணைவியுடன் கண்டு மகிழ்வுற்றான். இந்திர விழா முடிந்தது.

கோவலனின் வருத்தம் நீங்குமாறு மாதவி, அவனை மகிழ்வித்தாள்.  பின்பு,  இருவரும் வீதிகள் பலவற்றைக் கடந்து கடற்கரை சென்றனர். தாழைகள் வேலியாகச் சூழ்ந்த புன்னை மர நிழலில், சித்திரத் திரையால் வளைத்த அறையில் வெண்கால் கட்டிலில் அமர்ந்திருந்தனர். அப்போது வசந்தமாலையின் கையிலிருந்த யாழினை மாதவி வாங்கினாள்.

7. கானல் வரி

மாதவி இசையை எழுப்பிப் பார்த்து, குற்றமின்மையைக் கண்டறிந்து, அதனைக் கோவலனிடம் தந்தாள். அவன் காவிரி ஆற்றையும் கடற்கரைச் சோலையையும் மையமாக வைத்து வரிப் பாடல்களை யாழில் இசைத்துப் பாடினான். தலைவன் தலைவியர் தம் களவொழுக்கம் உணர்த்தும் அகப்பொருள் துறை அமைந்த பாடல்களை அவன் பாட, அவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டாள் மாதவி. 'இவன் பாடிய பாடல்களில் ஒரு குறிப்பு உண்டு! இவன் வேறொருத்தியிடம் மயங்கினான் போலும்!' எனக் கருதிய அவள்,யாழைத் தான் வாங்கினாள்.

தன்னுள்ளத்தே வேறொரு குறிப்பு இல்லையென்றாலும், அப்படி ஒரு குறிப்புத் தோன்றுமாறு அவளும் கானல் வரிப் பாடல்களைப் பாடினாள். யாழிசை மேல் ஊழ் வந்து தாக்க, கோவலன் மனம் திரிந்தது! 'மாயப் பொய் பல உடைய குலத்திலே பிறந்தவளாதலின், அக்குலத்திற்கு ஏற்பவே பாடினாள்!' எனக் கருதி அவளை விட்டு நீங்கினான்; மனம் வருந்திய மாதவி தனியே தன்மனை சென்றடைந்தாள்.

8. வேனிற் காதை

கோவலனைப் பிரிந்த நிலா முற்றத்தே மாதவி யாழ் இசைத்துப் பாடினாள். பகை நரம்பு அதிர்ந்தது. பண் மயங்கியது. காமதேவன் ஆணையால் கோவலனுக்கு ஒரு திருமுகம் அனுப்ப விரும்பி, தாழை மடலை எழுதுதாளாக... பித்திகை அரும்பை எழுத்தாணியாக, சாதிலிங்கக் குழம்பை மையாகக் கொண்டு திருமுகத்தை வரைந்தாள்! 'இளவேனில் என்பவன் அனுபவ மில்லாத இளவரசன். திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்! மலர் அம்பால் உயிரை வாட்டுகின்றான்! இதனை நீர் அறிந்து அருளுவீராக!' என்று எழுதினாள்.

            கோவலனிடம் தருமாறு தோழி வசந்தமாலையிடம் கொடுத்து, ஏற்பன கூறி, அவனை அழைத்து வருமாறு வேண்டிக் கொண்டாள். மாலை வடிவான ஓலையை வாங்கிச் சென்ற வசந்தமாலை, கடை வீதியில் கோவலனைக் கண்டு அதனைத் தர, அவன் அந்த ஓலையை வாங்க மறுத்ததோடு மாதவியைப் பழித்துப் பேசினான்! 'ஆடல் மகளே ஆதலின் இதுவும் அவளது நடிப்பே' என்று இழித்துரைத்தான். இதனை யறிந்த மாதவி, 'இன்று மாலை வராவிட்டாலும் நாளை காலை வருவார்!" என்று கூறிப் படுக்கையில் செயலற்றுக் கிடந்தாள்.

9. கனாத் திறம் உரைத்த காதை

புகார் நகர மகளிர் மாலைப் பொழுதில் மலரும். நெல்லும் தூவி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை வழிபட்டனர். கண்ணகியின் தோழி தேவந்தி கோயிலுக்குச் சென்று, அறுகு முதலியவற்றைத் தூவி வழிபட்டுக் 'கண்ணகி தன் கணவனைப் பெற' வேண்டினாள். கண்ணகியை நோக்கி, 'நீ நின் கணவனைப் பெறுவாய்!' என்று கூற,  கண்ணகியோ தான் கண்ட தீக் கனவினைக் கூறினாள்.

       தேவந்தி 'சோமகுண்டம். சூரிய குண்டம் மூழ்கிக் காமவேள் கோட்டம் சென்று தொழுதால் தீமை விலகும்; கணவனைப் பிரியா வாழ்வு கிட்டும்; மறுமையில், போக பூமியில் பிறக்கும் வாய்ப்பும் கிடைக்கும்' என்றாள். 'துறை மூழ்கித் தெய்வம் தொழுதல் சமண சமய நெறியன்று! இது ஒரு வகை மூடம்!' எனப் பதில் உரைத்தாள் கண்ணகி.

             அப்பொழுது கோவலன் வந்தான்! அவளது வாடிய மேனி கண்டு வருந்தினான்; தன் செயலுக்கு நாணினான். கண்ணகியின் காற்சிலம்பை முதலாகக் கொண்டு, இழந்த பொருளை மீட்க விரும்பி, புகாரில் வாணிகத்தை மேற்கொள்ள மனமில்லாமல் 'மதுரை செல்லலாம் எழுக!' எனக் கண்ணகியிடம் உரைத்தான். வினையின் ஏவலின்படி பொழுது புலர்வதன் முன்னரே இருவரும் மதுரை நோக்கிப் புறப்பட்டனர்.

10.நாடுகாண் காதை

மேற்கு நோக்கிச் செல்லும்போது, எதிர்ப்பட்ட  கவுந்தியடிகளின் அடி தொழுது தாங்கள் மதுரைக்குச் செல்வதைக் கூற, அவரும் உடன் வர, மூவரும் நாள்தோறும் ஒரு காவதம் நடந்து சென்றனர். மூவரும் காவிரியின் தென்கரை அடைந்து ஒரு பூம்பொழிலில் தங்கியவேளையில் , அங்கே வந்த வம்பப் பரத்தையும், வறுமொழியாளனும் கண்ணகியையும் கோவலனையும் நோக்கிப் பழிக்க, அது பொறாத கவுந்தியடிகள் அவர்களை நரிகளாகுமாறு சபித்தார். கோவலனும் கண்ணகியும் இரங்கி வேண்ட, கவுந்தியடிகள் ஓராண்டில் சாபம் விலக அருள் செய்தார். பின், மூவரும் உறையூரை அடைந்தனர்.

II.  மதுரைக் காண்டம்

11.காடுகாண் காதை

பின் மூவரும் தென்திசை நோக்கிச் சென்று ஒரு சோலையில் தங்கினர். அங்குப் பாண்டியனின் பெருமை பற்றித் தானே பேசிக் கொண்டிருந்த மாங்காட்டு மறையோனைச் சந்தித்தனர். அவனிடம் மதுரை செல்லும் வழி பற்றி வினவினர். அம்மறையோன் மூன்று வழிகளை விளக்கமாக எடுத்துக் கூறினான். அவர்கள், அவன் கூறிய இட வழியில் சென்றனர். நீர் வேட்கை காரணமாகக் கோவலன் ஒரு பொய்கைக் கரையை அடைந்த போது. கானுறை தெய்வம் வசந்தமாலை வடிவத்துடன் வந்து அவனை மயக்கியது. அவன் கொற்றவை மந்திரத்தை உச்சரிக்க, வஞ்சக வடிவம் மாற. தெய்வம் தன்னியல்பினைக் கூறி மறைந்தது.பின் மூவரும் ஐயையின் கோயிலை அடைந்தனர்.

12. வேட்டுவ வரி

அங்கே, சாலினி, தெய்வம் ஏறப்பெற்று, கொற்றவைக்குச் செய்ய வேண்டிய செய்கடனை நிறைவேற்றுமாறு கூறினாள். மேலும், கண்ணகியை அனைவர்க்கும் சுட்டிக் காட்டி, "இவளோ கொங்கச் செல்வி, குடமலையாட்டி. தென்தமிழ் நாடு செய்த தவக் கொழுந்து" என அவளது எதிர்காலத் தெய்வநிலை குறித்து வியந்துரைத்தாள். அது கேட்ட கண்ணகி, நாணமுற்றுக் கணவனின் புறத்தே ஒதுங்கி நின்றாள். வேட்டுவர்கள் கொற்றவையின் புகழ் கூறி வரிப் பாடல்களைப் பாடிக் கொண்டாடினர்.

13. புறஞ்சேரி இறுத்த காதை

கண்ணகியின் உடல் சோர்வினை உணர்ந்த கோவலன் ''பாண்டியனின் செங்கோல் சிறப்பால் நாட்டில் யாதொரு இடையூறும் நேராது. ஆதலால் இரவில் செல்லலாம்''எனக் கூறினான். அவ்வாறே மூவரும் நடந்து சென்றனர். முள்வேலி சூழ்ந்த காவல் மிக்க இடத்தே இருவரையும் இருக்கச் செய்து, கோவலன் தனியே நீர்த்துறையை நாடிச் சென்றான். அங்கே கோசிகனைச் சந்தித்தான். கோவலனைப் பிரிந்த புகார் நகரம் உற்ற துயர் பற்றிக் கோசிகன் விரிவாகக் கூறி, மாதவியின் கடிதத்தை அவனிடம் அளித்தான். கடிதத்தின் மேன்மையை உணர்ந்த கோவலன், "அவள் செய்த குற்றம் யாதும் இல்லை! இது என் தீது'' என நொந்து தன்னையே பழித்துக் கொண்டான். பின், பாணரொடு சேர்ந்து யாழ் இசைத்தான். 'மதுரை எவ்வளவு தூரம் இருக்கிறது' என அப்பாணரிடம் வினவ, அவர்கள். 'அண்மைத்தே' என்றனர். அதன்பின் மூவரும் ஒரு கட்டு மரத்தில் ஏறி வையையாற்றைக் கடந்து, மதுரையின் மதிற்புறத்துப் புறஞ்சேரியில் தங்கினர்.

14.ஊர்காண் காதை

கண்ணகிக்கு நேர்ந்த துன்பத்திற்காக வருந்தினான். உள்ளம் நொந்து கிடந்த அவனுக்குச் சிறந்த முறையில் ஆறுதல் வழங்கினார் கவுந்தியடிகள். கோவலன் தான் மதுரை சென்று திரும்பி வரும்வரை கண்ணகியை அடிகளின் பாதுகாப்பில் இருக்கச் செய்து, கூடல் மாநகரின் உள்ளே பல்வேறு காட்சிகளையும் பல்வேறு கடைத் தெருக்களையும் கண்டு, புறஞ்சேரிக்குத் திரும்பினான்.

15. அடைக்கலக்காதை

மாநகரின் சிறப்பினையும் பாண்டியனின் மேன்மையிளையும் கவுந்தியடிகளிடம் கூறும்போது, மாடல மறையோன் அங்கு வந்து சேர்ந்தான். அவன் கோவலனைக் கண்டு வியந்தான். "இந்தப் பிறவியில் நீ செய்ததெல்லாம் நல்வினையே! அப்படியிருக்க கண்ணகியுடன் நீ இங்கு அடைந்தது பண்டை விளையின் பயன் போலும்!'' எனக் கூறினான். கோவலன் தான் கண்ட தீக்கனாவைக் கூறித் துன்பம் விரைவில் வரும் என்று கூற, மாடலனும் கவுந்தியடிகளும் "இப்புறஞ்சேரி இருக்கை இல்லறத்தார்க்கு உரியதன்று: துறவறத்தார்க்கே உரியது!'' என மொழிந்து கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு உள்ளே செல்லுமாறு விரைவுபடுத்தினர்.

             அவ்வேளையில், மாதரி என்னும் ஆயர்குல முதுமகள் ஒருத்தி, அங்கு வந்து கவுந்தியடிகளை வணங்கியபொழுது, கண்ணகியைப் பாதுகாக்குமாறு அம்மாதரியிடம் ஒப்படைத்தார். மாதரியும் மகிழ்ந்து, கண்ணகியையும் கோவலனையும் அழைத்துக் கொண்டு தனது இல்லத்தை அடைந்தாள்.

16.கொலைக்களக் காதை

மாதரி தன் மகள் ஐயையை அவளுக்குப் பணி புரியச் செய்தாள்: உணவு செய்தற்குரிய பொருள்களை அளித்தாள். கண்ணகி சமைத்த உணவைக் கோவலன் இனிதாக உண்டான். கோவலன் தன்னால் கண்ணகிக்கு நேர்ந்த துன்பம் குறித்து வருந்தினான். என்னோடு போந்து ஈங்கு என் துயர் களைந்த பொன்னே! கொடியே! எனப் புகழ்ந்தான்; புலம்பினான்! "சீறடிச் சிலம்பில் ஒன்றை விற்று வருவேன்; மயங்காதிரு'' என்று கூறிச் சென்றவன், கடை வீதியில் பொற்கொல்லனைச் சந்தித்தான்; சிலம்பை விற்பது குறித்து வினவினான். "இச் சிலம்பு கோப்பெருந்தேவிக்கே பொருந்தக் கூடியது!'' என்ற பொற்கொல்லன், தனது திருட்டைக் கோவலன் மீது சுமத்த விரைந்து செயல் பட்டான். தீவினை பயனைத் தந்தது!

    தன் மனைவியின் ஊடல் தீர்க்கச் சென்று கொண்டிருந்த பாண்டியனைக் கண்டு அவன் காலில் வீழ்ந்து வணங்கி,''பாண்டிமாதேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் அகப்பட்டான்; என் குடிலகத்தான்!" என்று கூறினான். கள்வனைக் கொன்று சிலம்பினைக் கொணருமாறு காவலர்க்குக் கட்டளையிட்டான், பாண்டியன்.

 கோவலனைக் கண்ட காவலர் "இவனைப் பார்த்தால் திருடன் போல் தெரிய வில்லையே!" என்றனர். பொற்கொல்லன் பதறினான்! அவர்கள் மனத்தில் பதியுமாறு களவு நூல் பற்றிப் பேசினான்; கள்வரின் திறத்தைப் பலவாறு கூறினான். அப்போது காவலருள் கல்லாத மூர்க்கன் ஒருவன் கோவலனை வாளால் வெட்டினான்; கோவலன் உடல் மண்ணில் சாய்ந்தது! கூடவே மன்னனின்  செங்கோலும் வீழ்ந்தது!

17.ஆய்ச்சியர் குரவை

ஆயர்பாடியில் பலவகைத் தீ நிமித்தங்கள் நிகழ்ந்தன! தயிர் கடையச் சென்ற மாதரி திடுக்கிட்டாள்! பால் உறையவில்லை! வெண்ணெய் உருகவில்லை! ஆட்டுக் குட்டிகள் துள்ளி விளையாடவில்லை! பசுக்கள் அழுகின்றன! இவற்றால் ஏதோ துன்பம் வரப்போகிறது என வருந்தினாள் மாதரி. அவள் "முன்னர் ஆயர் சேரியில் கண்ணனும் பலராமனும் பின்னையுடன் ஆடிய குரவையை இப்போது துயர்தீர ஆடுவோம்!'' என ஐயையை நோக்கிக் கூறினாள். கன்னியர் எழுவர் ஏழிசைப் பெயர் பெற்றுத் திருமாலின் சிறப்பைப் பாடியவாறு குரவை ஆடினர்.

18. துன்ப மாலை

குரவை முடிந்ததும் மாதரி வைகைக்கு நீராடச் சென்றாள். அப்பொழுது, கோவலன் கொல்லப்பட்ட செய்தியைக்  கேட்ட ஒருத்தி வந்து, "அரண்மனையில் சிலம்பு திருடிய கள்வன் என்று கூறிக் கோவலனைக் கொலை செய்தனர்!'' என்றாள்.

இது கேட்ட கண்ணகி சினம் கொண்டாள். காண்பார் இரங்க, அழுது துடித்தாள்! 'காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?" எனச் சூரியனை நோக்கி வினவினாள்! "நின் கணவன் கள்வன் அல்லன்; கள்வன் என்று கூறிய ஊரைத் தீயுண்ணும்!" எனப் பதில் கிடைத்தது.

19. ஊர்சூழ் வரி

கதிரவன் உரைத்ததைக் கேட்ட கண்ணகி, தனது மற்றொரு சிலம்புடன் புறப்பட்டாள். ''கணவனைக் காண்பேன்; அவன் வாயிலிருந்து ஒரு தீதறு நல்லுரை கேட்பேன்!" எனச் சூள் உரைத்தாள்; வெட்டுண்ட கணவனைப் பலர் காட்டக் கண்டு துடி துடித்தாள்! ''பொன்னறு நறுமேனி புழுதியிலே கிடப்பதா!" என மருண்டாள்! ''நீ இங்கே இரு'' எனக் கணவன் வாய் திறந்து மொழியக் கேட்டும் பழி துடைப்பதற்காகப் பாண்டியனைக் காண அரண்மனை சென்றாள்.

20. வழக்குரை காதை

பாண்டிமாதேவி தான் கண்ட தீய கனவை மன்னனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பொழுது, அரண்மனையை அடைந்த கண்ணகி, பாண்டியன்முன் தோன்றி,  தன் கணவனை ஆராயாது கொன்ற கொடுங் கோன்மையை அஞ்சாது எடுத்துரைத்தாள். நீதிச் செருக்கு மிக்க பாண்டியன், தான் செய்தது தவறு என்பதனை முதலில் உணராது பேசினான். கண்ணகி, தனது காற்சிலம்பை வேந்தன் முன் வீசியெறிந்தாள். உண்மையுணர்ந்த பாண்டியன், 'யானோ அரசன்; யானே கள்வன்: கெடுக என் ஆயுள்!" என்று கூறி உள்ளம் தளர்ந்தான்! உயிர் துறந்தான்! பாண்டிமாதேவியும் கணவனின் இணையடி தொழுது வீழ்ந்தாள்.

21.வஞ்சின மாலை

அரச மாதேவி உயிர் நீத்ததை அறியாத கண்ணகி அவளை நோக்கி, "ஒப்பற்ற கற்புடை மகளிர் பலர் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன்; யானும் ஒரு பத்தினியாயின் அரசரோடு மதுரையையும் அழிப்பேன்!'' என்று வஞ்சினம் கூறி,  "நான்மாடக் கூடலில் உள்ள மகளிரே, ஆடவரே, மாதவரே, கேளுங்கள்! குற்றமில்லாத என் கணவனைக் கொலை செய்த மதுரையை நான் அழிப்பது குற்றமாகாது!" என்று கூறி இடமுலையைக் கையால் திருகி எறிந்தாள்! உடனே தீக் கடவுள் வெளிப்பட்டு ஏவல் கேட்டுப் பணிந்து நின்றது! "நல்லோர் பக்கம் சாராது தீயோரை அழிப்பாயாக!'' என ஆணையிட்டாள். அவ்வாறே தீத்திறத்தார் பக்கம் சேர்ந்தது தீ!

22. அழற்படு காதை

நால்வகை வருணப் பூதங்களாகிய தெய்வங்களும் நகரை விட்டு நீங்கின. பசுக்களும் கன்றுகளும் தீயில் அகப்படாது அகன்ற தெருவில் ஓடின யானைகளும் குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன. தீ அறவோர் பக்கம் சாராது மறவோர் பக்கம் மண்டியது. இல்லற நெறியினின்றும் பிறழாத முது மகளிர் "கணவனை இழந்த கண்ணகியின் செயல் சிறந்ததே!" எனத் தீக்கடவுளை வணங் கினர். தீயின் வெம்மையைத் தாங்காத மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வந்து தோன்றியது.

23. கட்டுரை காதை

அத் தெய்வம் கண்ணகியை நோக்கி, "நான் மதுரையின் காவல் தெய்வம்! உனக்குற்ற துன்பம் கண்டு நானும் துன்புற்றேன்! இந்நாட்டை ஆண்ட பாண்டியர் அனைவருமே பழியுடன் படராதவர்.இந்நெடுஞ்செழியனும் அத்தகையவனே! ஊழ் வினை காரணமாக உனக்கு இத்துன்பம் நேர்ந்தது.

நின் கணவனின் பழம் பிறப்பைக் கூறுகிறேன் கேள்! கலிங்க நாட்டில் சிங்கபுரத்தில் இருந்த வசு என்பவனும், கபிலபுரத்தில் இருந்த குமரன் என்பவனும் தாய உரிமை காரணமாகப் பகை கொண்டிருந்தனர்.  சங்கமன் என்னும் வணிகன் வாணிபத்தின் பொருட்டுச் சிங்கபுரத்துக் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது  பரதன் என்பவன் அச்சங்கமனைப் பகைவனின் ஒற்றன் என்று மன்னனிடம் அழைத்துச் சென்று கொன்று விட்டான்.

கொலை செய்யப்பட்ட சங்கமன் மனைவி நீலி தாங்கொணாத் துயருடன் பதினான்கு நாட்கள் எங்கும் திரிந்து ஒரு மலை உச்சியை அடைந்து,''எனக்குத் துன்பம் செய்தவர் மறுபிறப்பில் இத்தகைய துன்பத்தை அடைவாராக!" எனச் சாபமிட்டுக் கீழே வீழ்ந்து மாண்டாள்! அந்தச் சாபமே இன்று கோவலனது உயிரைக் கவர்ந்தது. நீ பதினான்காம் நாளில் நின் கணவனை அடைவாய்!" எனக் கூறி மறைந்தது.

`           பின் துயரமே வடிவான கண்ணகி திருச்செங்குன்றம் மலைமீது ஒரு வேங்கை மரத்தடியில் செயலற்று நின்றாள். பதினான்காம் நாள் பகல் பொழுது கழிந்ததும். அங்குத் தெய்வ வடிவுடன் வந்த கணவனுடன் வானகம் சேர்ந்தாள்.

III.  வஞ்சிக் காண்டம்

24. குன்றக் குரவை

கண்ணகி, திருச்செங்குன்றத்து வேங்கை மர நிழலில் நின்றபோது, குன்றக் குறவர்கள் அவளைக் கண்டு திகைத்து, "எம் குல தெய்வமான வள்ளி போல்வீர், யாரம்மா நீ" என வினவினர். மதுராபதியின் கட்டுரையால் ஒருவாறு சீற்றம் தணிந்திருந்த கண்ணகி, தன் தீவினையால் மதுரை கெட்டதும், மன்னன் மாண்டதும், தான் கணவனை இழந்ததுமான நிகழ்ச்சிகளைக் கூறி வருந்தினாள்.

அப்போது வானவர், கோவலனுடன் வந்து கண்ணகியை வணங்கி, கணவனை அவளுக்குக் காட்டினர். கோவலனுடன் கண்ணகியை அழைத்துக் கொண்டு வானவூர்தியில் ஏறி விண்ணுலகு அடைந்த காட்சியைக் கண்ணால் கண்ட குன்றக் குறவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

"புதியதொரு தெய்வம் நம்மை வாழ்விக்க வந்தது! அதற்குக் கோயில் எடுப்போம்! விழாச் செய்வோம்!" எனக் கொண்டாடினர்.

25.காட்சிக் காதை

சேரன் செங்குட்டுவன் தன் தேவி வேண்மாளுடன் மலை வளம் காணப்  பேரியாற்றங் கரையில் தங்கியிருந்தான். அப்பொழுது, குன்றக் குறவர்கள் மலைபடு பொருள்களைக் கொண்டு வந்து தம் வேந்தனுக்கு அளித்துத் தாம் கண்ட தெய்வக் காட்சியை அவனிடம் கூறினர்.

மன்னனின் அருகில் இருந்த சாத்தனார் கோவலன் கொலையுண்டது. கண்ணகி பாண்டியனைக் கண்டு வழக்குரைத்தது, பாண்டிமாதேவி உயிர் துறந்தது ஆகிய செய்திகளை விரிவாக எடுத்துரைத்தார். அது கேட்ட செங்குட்டுவன். உயிர் கொடுத்துப் பழி துடைத்துப் புகழ் பெற்ற பாண்டியனின் பண்பினைப் பாராட்டினான்; நாடாள்வது எத்தகைய துன்பம் தருவது எனச் சுட்டிக் காட்டினான்.

அருகில் இருந்த சேரமாதேவி, "பத்தினித் தெய்வத்தை வணங்கி வழிபடல் வேண்டும்'' என்றபொழுது "பொதிய மலையில் கல்கொண்டு காவிரியில் நீர்ப்படுத்தலைவிட, இமயமலையில் கல் கொண்டு, கங்கையில் நீர்ப்படுத்தலே வீரக் குடியில் பிறந்த தனக்கு ஏற்றதாகும் என்று செங்குட்டுவன் முடிவு செய்தான்.

"பத்தினிக்குக் கல் கொள்ள இமயமலைக்கு எம் வேந்தன் புறப்படுகிறான்! வடதிசையில் உள்ள மன்னரெல்லாம் திறையுடன் வந்து வணங்குக! வணங்கீராயின் இல்லம் நீத்துத் துறவு பூண்டு காட்டுக்குச் செல்க!'' என்று வஞ்சி நகரில் பறை அறையப்பட்டது.

26. கால்கோட் காதை

கனகன், விசயன் என்ற இரு ஆரிய அரசர்கள் தமிழ் மன்னர்களை இகழ்ந்தனர் என்பதனை வடக்கே இருந்து வந்த முனிவர் மூலம் முன்னரே அறிந்திருந்த சேர வேந்தன், அவர்கள் செருக்கை அடக்கக் காலம் பார்த்திருந்தான்; ''பத்தினித் தெய்வத்தின் உருவம் அமைப்பதற்கான சிலையினை அந்தக் கனகவிசயர் முடித் தலையிலேற்றிக் கொணர்வேன்!'' எனச் குளுரைத்து வடபுலம் செல்லத் தயாரானான்.

நால்வகைப் படை புடை சூழ முதலில் நீலகிரி சென்றபின், அங்கிருந்து புறப்பட்டு வடநாடு சென்று.நூற்றுவர் கன்னர் உதவியால் கங்கையைக் கடந்து பகை நாட்டில் புகுந்தான்; கனக, விசயருக்கு உதவியாக வந்த மன்னர்களையெல்லாம் வென்று வாகை சூடினான், செங்குட்டுவன். அமைச்சரையும் சேனையையும் ஏவி இமயமலையில் பத்தினித் தெய்வத்திற்குரிய கல்லைத் தேர்ந்தெடுத்தான்.

27. நீர்ப்படைக் காதை

செங்குட்டுவன், அக் கல்லைக் கனக விசயர் தம் முடித்தலைமேல்  ஏற்றிச் சென்று கங்கையில் நீர்ப்படை செய்தான். அப்போது, கங்கையாடி வந்த மாடல மறையோன் மூலம் கோவலன் மதுரையில் கொலையுண்ட நிகழ்ச்சியையும், அவனது கொலைச் செய்தி கேட்டுப் புகார் நகரில் இருந்த அவன் தந்தையும், கண்ணகி தந்தையும் துறவு மேற் கொண்டதையும், இருவர் தாயரும் இறந்ததையும் அறிந்தான். மேலும் பாண்டி நாட்டுச் செய்திகளையும் மாடலமறையோனிடம் கேட்டறிந்தான். அம்மறையோனுக்கு, அவன் நிறையளவு பொன்னைத் தானம் செய்தான்.

பின் தன்னால் சிறைப் படுத்தப்பட்ட கனக, விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலான கஞ்சுக மாக்களை ஏவினான். வினை முடித்த பெருமிதத்துடன் சேரன் செங்குட்டுவன் பெருந்தேவியுடன் வஞ்சி மாநகர் வந்தடைந்தான்.

28. நடுகற் காதை

வஞ்சிக்குத் திரும்பிய செங்குட்டுவன் தன் தேவியுடன் கூத்தச் சாக்கையன் நிகழ்த்திய கூத்தினைக் கண்டுகொண்டிருந்தபொழுது  நீலன்."ஆரிய அரசர்களைச் சோழ நாடு கொண்டு சென்றபோது சோழன், 'முனி வேடந்தாங்கிப் போர்க்களத்தினின்றும் தப்பிப் பிழைத்து ஓடிய மன்னர்களை வென்றது ஒரு வெற்றியாகுமா?' என வினவினான் என்றும். பின்னர், பாண்டிய நாடு சென்றபோது பாண்டியன், 'தவ வேடம் தாங்கியவர் மீது கொண்ட சினம். ஒரு சினமா?' என எள்ளி நகையாடினான் என்றும் கூறினான்.

          அது கேட்ட சேர வேந்தன் சினம் கொண்டெழுந்தபொழுது மாடலன் , "அரசர் ஏறே! அடங்குக நின் சினம்! இளமை, யாக்கை, செல்வம் ஆகியவை நிலையானவை அல்ல! நின் ஆட்சிக் காலத்தில் இதுவரை நீ ஆற்றிய மறக்கள வேள்வியைக் கைவிடுக! இனி அறக்கள வேள்வி செய்க!" என அறிவுரை கூறினான். வேந்தன் மனம் மாறி அந்தணனின் கூற்றுப்படி அறக்கள வேள்வி செய்தான்.

           ஆரிய அரசரை சிறையினின்றும் விடுதலை செய்து, விருந்தினரைப் போல் உபசரித்தான். "குடிமக்களிடமிருந்து வரி வாங்க வேண்டாம்'' என ஆணையிட்டான்;

கண்ணகிக்குக் கோயில் கட்டினான்; விழா நடத்திப் பேருவகை அடைந்தான். பல நாட்டு மன்னர்களும் அப்பத்தினிக் கடவுளைத் தொழுது வணங்கினர். பத்தினி வழிபாடு வெளி நாட்டிலும் பரவியது.

29. வாழ்த்துக் காதை

அப்போது. பூம்புகாரிலிருந்து புறப்பட்ட கண்ணகியின் செவிலித் தாயும், அடித் தோழியும், தேவந்தியும் மதுரையை அடைந்து மாதரி மகள் ஐயையை அழைத்துக் கொண்டு வஞ்சியில் உள்ள கண்ணகி கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். சேர வேந்தன் முன்னிலையில், கண்ணகிக்கும் தங்களுக்கும் உள்ள உறவைக் கூறி அழுதனர்: பூம்புகாரில் கண்ணகி, கோவலன் ஆகியோரின் தந்தையர் துறவு மேற்கொண்டதும், தாயர் இருவரும் இறந்ததும், மாதவி, மணிமேகலை ஆகிய இருவரது துறவும், மாதரி உயிர் நீத்ததும் ஆகிய செய்திகளைச் சொல்லினர். கண்ணகி தெய்வ வடிவத்துடன் சேரன் செங்குட்டுவனுக்குக் காட்சியளித்து வாழ்த்தினாள்.

30. வரந்தரு காதை

செங்குட்டுவனுக்கு மணிமேகலையின் துறவு வரலாற்றைத்  தேவந்தி உரைத்தாள், மாடலன், அங்கு வந்திருந்த சிறுமியர் மூவர் மீது கரக நீரைத் தெளித்தான். கண்ணகி நற்றாய், கோவலன் நற்றாய், மாதரி என்னும் மூவரே அச் சிறுமியராகப் பிறந்த வரலாற்றைச் செங்குட்டுவனுக்கு எடுத்தியம்பினான்.  பத்தினி வழிபாடு நாளும் நடைபெற நிலக்கொடை வழங்கித் தேவந்தியைப் பூசை செய்பவளாகச் சேரன்  அமர்த்தினான். பத்தினிக் கடவுளை மும்முறை வலம் வந்து பணிந்து வணங்கிப் போற்றினான்.

அப்பொழுது சிறை நீங்கிய கனக விசயரும், குடகக் கொங்கரும், மாளுவ மன்னனும், இலங்கை அரசனான கயவாகுவும். ''எங்கள் நாட்டு வேள்வியிலும் வந்தருள்க!'' என்று கண்ணகி தெய்வத்தை வேண்டினர்.''வரம் தந்தேன்!'' என்னும் ஒலி எழுந்தது. அது கேட்ட அனைவரும் வியப்புற்றனர்.

இளங்கோவடிகள் பத்தினிக் கோயிலுக்குச் சென்றார். பத்தினித் தெய்வம் தேவந்திமேல் வெளிப்பட்டு அடிகளாரின் துறவு வரலாற்றை உரைத்தது. தன் வரலாற்றைக் கூறிய பேறு பெற்றமைக்கு அடிகளார் பெரிதும் மகிழ்ந்தார். 'இதனைக் கேட்கும் பேறு பெற்ற உலகோர், தீதின்றி வாழ்வாராக!' என வாழ்த்தி அருளினார்.

உரைபெறு கட்டுரை

Ø  பாண்டியனின் பத்தினி வழிபாடு

Ø  கொங்கு இளங்கோசரின் பத்தினி வழிபாடு

Ø  கயவாகு மன்னனின் பத்தினி வழிபாடு

Ø  சோழன் பெருங்கிள்ளியின்  பத்தினி வழிபாடு

சிசிலப்பதிகாரம் - நூல் அமைப்பு

சிலப்பதிகாரம்  -  காண்டங்கள்  &  காதைகள்

உரைபெறு கட்டுரை       நாடகக் கூறுகள்      இசைக்கூறுகள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்