ஜான் பென்னி குயிக்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கர்னல் ஜான் பென்னி குயிக் ( col. J. penny Cuick )
அனைவருக்கும் வணக்கம். தேனி உள்பட தென்மாவட்டக் கிராமங்களில் தெய்வமாக வைத்து வணங்குகின்ற கர்னல் ஜான் பென்னி குயிக் பேசுகிறேன்.
பிறப்பால், நான் ஓர் இந்தியன்தான்! ஆமாம், ஜனவரி 15 ஆம் நாள் 1841 இல் புனேயில் பிறந்தேன். பொறியாளர் கல்வி யினை, இங்கிலாந்தில் உள்ள ராயல் பொறியியல் கல்லூரியில் பயின்றேன்.
சென்னை மாகாணத்தில் வைகை வடிநிலப்பரப்பில் பல ஆண்டுகளாக மழை பொய்த்தது. இதனால், மக்கள் உணவு முதல் எதுவும் கிடைக்காமல் கடும் பஞ்சத்தில் வீழ்ந்தனர். எனக்கு இது மிகவும் வருத்தத்தைத் தந்தது. அப்பொழுது மழை நீர் பற்றியும் அது ஓடும் வழிகளையும் பற்றி ஆராய்ந்து பார்த்தேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற பெயரில் ஓடிக் கடலில் கலந்ததைப் பார்த்தேன். பெரிய அளவிலான ஆற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதைக் கண்டு , "இதற்குக் குறுக்கே ஓர் அணையைக் கட்டி இந்த நீரை வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டு கிடைக்கும் நிலங்கள் பயன்பெறும்; விளைநிலங்களாக மாறி வளம் கொழிக்கத் தொடங்கும்" என்று நினைத்தேன். அதற்கான செயல் வடிவத்திற்குத் திட்டமிட்டேன்.
அப்பொழுது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர். அந்த அரசின் பார்வைக்கு என்னுடைய திட்டத்தினை முன்வைத்தேன். அவர்களும் அத்திட்டத்திற்கு அனுமதி அளித்தனர். அதற்கான கட்டுமானப் பணிகளை 1895, அக்டோபர் 11 ஆம் நாளன்று சுமார் 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கினோம். அப்போதைய சென்னை மாகாணக் கவர்னர் வென்லாக் முன்னிலையில் இந்தப் பணிகளைத் தொடங்கினோம்.
அணை கட்டுவதென்றால் சாதாரணமான வேலையா என்ன? நாங்கள் அணை கட்ட ஆரம்பித்த வழி நெடுக அடர்ந்த காடுகள்! அதுமட்டுமன்றி விஷப்பூச்சிகள், காட்டு யானைகள் போன்ற காட்டு மிருகங்கள், திடீரென்று உருவாகிற காட்டாறுகள் என்று எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அணை கட்டிண்டு இருந்தோம், மூன்று வருடங்களாக! பாதி தான் கட்டி முடித்திருந்தோம்; திடீரென்று தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுப் போச்சு. அதனால், இந்த வெள்ளத்தில் வேலையாள்கள், பொறியாளர்கள், ஆங்கிலேயர் என்று நிறைய பேர் உயிரிழந்தனர். அணையையும் அடித்துக் கொண்டு போய் விட்டது.
சரி, மீண்டும் கட்டலாம் என்று நினைத்து ஆங்கிலேய அரசிடம் பணம் ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை வைத்தேன். அரசு மறுத்து விட்டது. மிகவும் கஷ்டமாகி விட்டது எனக்கு! ஒரு நல்லது செய்யலாம் என்று பார்த்தால் இப்படி ஆகி விட்டதே என்று. மனம் தளராமல், இங்கிலாந்திற்குச் சென்று எனது குடும்பச் சொத்துகள் முழுமையும் விற்றேன். அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு வந்து, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தேன்.
இதனால், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டப் பகுதிகளுக்கு இன்றும் தண்ணீர் கிடைப்பது கண்டு மகிழ்கிறேன்.
அணையை வெற்றிகரமாகக் கட்டி முடித்ததால், ஆங்கிலேய அரசு எனக்குச் சென்னை மாகாணப் பொதுப்பணித்துறையின் செயலாளராகப் பதவி உயர்வு கொடுத்துச் சிறப்பித்தது. 1898 இல் சென்னைச் சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரியத் தலைவராக இருந்தேன்.
முதலில் இதனுடைய அமைப்பைப் பார்ப்போம்! இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்குகிறது. அங்கிருந்து மேற்கு நோக்கிக் கேரளாவில் பாய்கின்ற பெரியாற்றின் மீது கட்டப்பட்ட து ஆகும். ஆக, இந்த அணை தமிழ்நாடு-கேரளா எல்லையில் அமைந்துள்ளது.
பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால், பெரியாறு அணை என்று அழைக்கப்பட்டது. ஆனால், முல்லையாறு மற்றும் பெரியாறு ஆகிய இரண்டும் சேரும் இடத்தில் கட்டப்பட்டுள்ளதால் இந்த இரண்டு ஆறுகளின் பெயர்களையும் சேர்த்து, இன்று "முல்லைப் பெரியாறு அணை" என்று அழைக்கப்படுகிறது.
அதேசமயம் இந்த அணை கட்டுவதற்கு ஏற்பட்ட தடங்கல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ( கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கூறுகிறேன் )
1. 1798 - இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, இந்த இரண்டு ஆறுகளையும் இணைத்து அணை கட்ட முயற்சி செய்தார். நிதி வசதியின்றித் திட்டம் கைவிடப்பட்டது.
2. 1807 - மதுரை மாவட்ட ஆட்சியர் ஜார்ஸ்பேரிஸ் தலைமையில் அணை கட்டத் திட்டமிட்டு மாவட்டப் பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவு இட்டார். 1808 இல் "நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம்" என்று அவர் அறிக்கை தந்தார்.
3. 1837 - கர்னல் பேபர், முல்லையாற்றுத் தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது, வேலை செய்தவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது; அவர்களுக்குக் கூலியும் அதிகமாகக் கேட்டனர். எனவே, பணிகள் நின்றன.
4. 1867 - மேஜர் ரைவ்ஸ், தண்ணீரைக் கிழக்கே திருப்புவதுதான் நல்லது என்று எண்ணித் திட்டமிட்டார். இதற்கான அறிக்கையையும் சுமித் என்பவர் தயார் செய்தார். ஆனால், இத் திட்டத்திற்குத் தலைமைப் பொறியாளர் வாக்கர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், நின்று போனது.
5. 1876 - சென்னை மாகாணம் கடும் பஞ்சத்தில் இருந்ததால், அணைத்திட்டம் மேலும் தாமதம் ஆனது.
6. 1886 - ஓர் ஒப்பந்தம் இடப்பட்டது. திருவிதாங்கூர் திவான் வி. இராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் ஆகிய இருவராலும் " இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகள் செல்லுபடியாகும்" என்று கையொப்பமிடப்பட்டது. ( இந்த முயற்சியும் 24 ஆண்டுகள் நடைபெற்றது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் ).
எனது சொத்துகளை விற்றதனால் நல்ல ஒரு மாளிகையில் இருந்த எனது குடும்பத்தினர் கடுமையான நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர். இதனால் அரசாங்கம் தருகின்ற தொகுப்பு வீட்டில்தான் வாழ்ந்து வந்தனர். குடும்பத்தில் எனது மகள்கள் ஐந்து பேர் மற்றும் மகன் ஒருவன் ஆகியோரின் நிலைமையும் மோசமானது.
இது போகட்டும், விடுங்கள்! பணம் போனால் மீட்டு விடலாம்; இயற்கையைக் காப்பாற்றா விட்டால்? இதில் அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால், சமுதாயத்தின் உறுப்பினராகிய நாம் ஒவ்வொருவரும்?? யோசித்துப் பாருங்கள்!
,மழை நீர்! உயிர் நீர்!
மழைத் துளி; உயிர்த்துளி!
மழை நீரைச் சேகரிப்போம்!!
என்றெல்லாம் நாம் கூறி வருகின்றோம்; ஆனால், அதைப் பொருள்படுத்துகின்றோமா என்றால் ஒரு பெரிய கேள்விக்குறிதான்!
நிலம்நீர்ஆகாயம்காற்றுதீ ஆகிய ஐம்பெரும்பூதங்களில் நீர் தான் மிகவும் முக்கியமானது! இதைத்தானே, உலகமே போற்றி வணங்கும் திருவள்ளுவரும்,
"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை"
என்ற திருக்குறளின்மூலம், "மழைநீர் தானே உணவாகவும் இருக்கிறது; உணவையும் விளைவிக்கிறது; அதன்மூலம் உணவாகவும் இருக்கிறது" என்று! நமக்கு உணர்த்துகிறார், மிக அழகாக!
எனவே, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிக் கொடுத்ததனால் என் பெயரை உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சூட்டி எனக்கு நன்றிக் கடன் செலுத்துகிறீர்கள்; அரசு விழாவாகக் கொண்டாடுகிறீர்கள். எல்லாவற்றையும் நான் மதிக்கிறேன். அதேசமயம், நீங்கள் இனியாவது விழிப்புடன் இருந்து செயல்கள் புரிந்திட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆமாம்! இன்றைக்குச் சுற்றுச்சூழல் மிகவும் கெட்டு விட்டதால், வெப்பநிலை அதிகரிக்கிறது; காலம் தவறி மழை பொழிகிறது; பனிப்பெருக்கு ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமானால், முதலில் நீர்நிலைகளைக் காப்பாற்ற வேண்டும்; "இந்தப் பூமி எனக்கு ஆனது; இதைக் காக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு" என்று கருதி, உங்கள் சொந்த முயற்சியில் ( நான்கைந்து பேராக இணைந்து கூட ) ஏரிகுளங்களைத் தூர் வாருங்கள்; நீர்நிலைகளில் கழிவுகள் கொட்டுவது குறித்து உங்கள் வீட்டு உறுப்பினர்கள், உங்கள் சொந்தங்கள், உங்கள் நட்புகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்களால் இயன்றவரை மரம் நடுவது மட்டுமன்றி அவற்றை முறையாக வளருங்கள்; நெகிழிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்துங்கள்; சின்னச்சின்ன ஆறு குளமாக இருந்தாலும் அவற்றில் குப்பைகளைக் கொட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய இந்தச் சின்ன எல்லையளவை நாம் சரியாக வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்தச் சமுதாயமும் தூய்மையாகி விடும் தானே!!
நான் மேலே சொன்ன அந்தச் சின்ன வழிகளுக்கு அரசை எதிர்பாராமல், நாமே கையாண்டால், யாரிடமும் தண்ணீருக்காகக் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.
இன்னும் சிலர், "முல்லைப் பெரியார் அணை" என்று பிழையாகக் குறிப்பிடுகின்றனர். "முல்லைப் பெரியாறு அணை" என்பதே சரியான வடிவம்!
இதுவரை, நான் கூறியவற்றைப் பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி! நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்!!!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்





வந்தேரிகள் என்றும் பாப்பன் என்றும் தமிழகத்தில் பிறந்து தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உழைத்து வாழ்ந்த, வாழ்கின்ற, தமிழை தன் முதல் மொழியாக நினைத்து பூரிக்கின்றவர்களை வசை பாடும் இந்த நாளில், தான் வாழ்ந்த நாட்டுக்காக அனைத்தும் இழந்து உழைத்த ஒரு ஆங்கிலத் தமிழனை கொண்டாடும் உங்கள் வரிகள் என்னை நெகிழ வைத்தன. மனிதரைப் போற்றுவோம். இன வெறியர்களை விலக்குவோம். நன்றி
பதிலளிநீக்குநல்லன செய்ய நினைப்போருக்கு நாடு, மதம், மொழி, பொருள் ஆகியன கண்ணுக்குத் தெரியா! நீங்கள் கூறியது போன்றே மனிதரைப் போற்றுவோம்! தங்கள் கருத்திற்கு நன்றி!
நீக்குGood information
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு நன்றி!
நீக்குஅருமையான தகவல் அனைவரும் அறிய வேண்டிய செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குநல்லது ஐயா! தங்கள் கருத்திற்கு நன்றி!
நீக்குஅருமை கவிஞரே
பதிலளிநீக்கு👍🙏
பதிலளிநீக்கு