தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

"சாதனைப் பெண்" சாவித்திரிபாய் புலே

                                

                    "சாதனைப் பெண்"  சாவித்திரிபாய் புலே 

                                                     

பெயர்  :  சாவித்ரிபாய் புலே.

காலம்  :  1831, ஜனவரி  3  -  1897, மார்ச்சு 10

ஊர் :  நைகோன்  கிராமம்  (  சதாரா  மாவட்டம்,  மகாராட்டிரா  )

கணவர்  :  ஜோதிராவ் புலே 

அவர் செய்த குற்றம் என்று பிறரால் கூறப்படுவது  :  ஒடுக்கப்பட்ட பிரிவில் பிறந்தவர்.

                 தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் புலேவுக்கு மனைவி ஆனார்.   அவரின் உதவியால் கல்வி கற்றார்.  இதுவே அவரது சிந்தனையை  மலரச் செய்தது.  சமூக மறுமலர்ச்சிக்குக்  காரணமாக அமைந்தது.   குறிப்பாக, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்றால் சமூகம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்று நம்பினார்.   இவர்களுக்குக்  குழந்தைகள் இல்லை;  எனவே,  யஷ்வந்த்  ராவ் என்ற குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தனர்.

கணவர் ஜோதிராவும் சாவித்ரிபாய் புலேவுக்கு மிகவும் உதவியாக இருந்தார்.  அவரை ஆசிரியப்  பயிற்சிப் பள்ளியில் சேர்த்துப் படிக்கச் செய்தார்.  

                                    

                     சாவித்ரிபாய் புலே அக்கல்வியை முடித்ததும்  1848 இல் இருவரும் இணைந்து பள்ளியைக்  குறிப்பாக,  பெண்களுக்கான முதல் பள்ளியை உருவாக்கினர்.  இதன்மூலம் சாவித்ரிபாய் புலே,"இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரா"க ஆனார்.

                     அப்பணியின்பொழுது,   பழமைவாதிகளும் மேல்சாதியினரும் கடுமையாக எதிர்த்தனர்;  மேலும் அவர் மீது சேற்றினையும் மலத்தினையும் வீசினர்.  சாவித்ரிபாய் புலே இந்த அவமானங்களை எல்லாம் தாண்டி, பள்ளிக்குச் சென்றபின்  சேறுபட்ட ஆடைகளை நீக்கி வேறோர் ஆடையினை அணிந்து ஆசிரியப்  பணியாற்றினார்.  

                        கல்வி என்ற வலிமையான ஆயுதத்தால் மட்டுமே  பெண்கள் சமூகத்தில் உயர முடியும் என்று தமக்குக்  கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கூறி வந்தார்;  அந்தக் கல்வியின் மூலம்தான் இது சரி, இது தவறு என்று பெண்கள் உணரமுடியும் என்று வலியுறுத்தி வந்தார்.

                     தம் கணவர் தம்மைப் படிக்க வைத்து உயர்த்திய செயலின் மூலம் பெண்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்று கருதினார்; 

புரட்சிச் செயல்கள்  :  விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினார்.

               திருமணங்களின்பொழுது பெண்களைப்  படிக்க வைப்பேன் என்று மாப்பிள்ளைகளிடம் உறுதிமொழி எடுக்கச் செய்தார்.  

            இளம்வயது விதவைப் பெண்களுக்கும்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில், 'இல்லம்' ஒன்று தொடங்கினார்.     

         பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று முழங்கினார்;  சமூக ஏற்றத்தாழ்வினை நீக்கப் பலவழிகளில் போராடினார்.

இவரின் இறுதிக்காலமும்  உயரியதே :  1897 இல் பிளேக் நோய் பரவியது;   சாவித்ரிபாய் புலேயும்  அவரது வளர்ப்பு மகனும்  மருத்துவருமான  யஸ்வந்த் நடத்திய மருத்துவமனையில்  அந்நோய் தாக்கப்பட்ட நோயாளிகளை  அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தார்.  இதில், அவருக்கும் இந்நோய் தொற்றியது.  இதனால், இந்த நாளன்று விண்ணுலகை அடைந்தார்.  

எழுதிய நூல்  :  "கவிதை மலர்கள்"  (  கல்வியின் தேவை,  சாதீய எதிர்ப்பு போன்ற கருத்துகள் அடங்கியவை  )

சான்றிற்காக ஒரு கவிதை இங்கே:

உன்னில் நம்பிக்கை கொள்;  விழித்திரு,  உழைத்திரு;

அறிவின் ஆதி வரை சிந்தித்திரு;

சாதி என்னும் சங்கிலியை அறுத்து எறி;

ஆதிக்கம் என்னும் சொல்லைத் தூரா வீசு;

அறிவையும் செல்வத்தையும் திரட்டு;

அறிவில்லை எனில் விலங்குகளாக மாறிடுவோம்;

போ.....கல்வியைக் கற்றுக் கொள்;

பெற்ற  சிறப்புகள்  

1998,  மார்ச்சு 10 அன்று இந்திய அஞ்சல் துறை இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

                    

                  புனே பல்கலைக்கழகத்தின் பெயர்,  2015 இல் சாவித்திரிபாய்  புலே பல்கலைக்கழகம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

                சமீப காலமாக,  இவரது நினைவுநாளான இன்றைய நாளை,  "தேசிய மகளிர் கல்வி நாளாக" அறிவிக்கக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

                சங்ககாலம் முதல் இன்று வரை பெண்கள்  பல துறைகளில் முன்னேறி உள்ளனர் என்றாலும்  இன்னும் பல பெண்கள் அறியாமையில் தான்  உள்ளனர்.  பாரதியார், பாரதிதாசன் முதலான கவிஞர்களும்  இதோ இப்பொழுது பார்த்தோமே சாவித்ரிபாய் புலே போன்ற பெண்களும் சமூகத்தில் பெண்களுக்காகப் போராடி உள்ளனர்.  

              இவற்றை உணர்ந்து பெண்கள் கல்வி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்;  தம்முள் இருக்கும் அறியாமையை நீக்க முயற்சி செய்ய வேண்டும்;  தம்முள் இருக்கும் தம் திறமையை அறிந்து அத்திறமையில் மேலும் மேலும் முன்னேறத் தொடங்க வேண்டும்;  அப்பொழுது தான் சமுதாயத்தின் எல்லாப் பக்கங்களும் ஒளி வீசும்!  ஆண்கள் மட்டும் சமுதாயத்தை உயர்த்த  முயற்சி செய்தாலோ,  போராடினாலோ  சமுதாயம் முழுமை பெற முடியாது;  

                அடுப்படி தான்  பெண்களுக்கு!  என்று கூறும் உலகத்திற்கு அதிலும் சாதிக்க இன்று பலவழிகள் உள்ளன பெண்களே!  அதையும் தாண்டி   வங்கி, வானியல்,  விளையாட்டு என்று பல துறைகள் உள்ளன, நீங்கள் சாதிக்க..!.உங்கள் திறமையை அறிந்து அதன்வழிச் சென்று சாதிக்க முயற்சி செய்யுங்கள்!

                வீட்டை விட்டு வெளியில் வரத்  தயக்கமா?  கவலையை விடுங்கள்... வீட்டில் இருந்து கொண்டே   கோலம், சமையல், தையல் போன்றவற்றைக் கற்றுத் தருதல்,  ஆடை முதலான பொருள்களை இயங்கலையில்   ( Online  ) விற்பனை செய்தல்  என்று பல நல்ல வழிகள் உள்ளன.  

                இதற்குத் தேவை....!    உங்கள்  நம்பிக்கை,  முயற்சி,  எடுத்த கொள்கையில் விடாப்பிடி,  பிரச்சனைகளைத் தாண்டிச் செல்லும் துணிச்சல்,  பார்வையை விசாலமாக்குதல் ...என்று இவை இருந்தால் போதும்!  நிச்சயம் நீங்களும் வெல்லலாம்!

                இங்குச்  சாதித்தவர் அனைவரும்  மலர்மீது நடந்து வரவில்லை;  நல்ல சூழல் பெற்றிருக்கவில்லை;  உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலை ஆகும்;  வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்;  என்னும் வரிகள் கூறும்  சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி,  சாதித்தவர்கள் என்பதை நாம்  ஒவ்வொருவரும்   உணர வேண்டும்!  வரலாற்றில் இடம்பெறவில்லை  ஆயினும்,    'மனிதப் பிறவி ' என்னும் இந்த அரிய  வாய்ப்பை அருமையாக ஆக்குவோம்;  அர்த்தம் உள்ளதாக்குவோம்;

                    உங்களின் மேலான  கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

                                            பக்கத்தில் உள்ள  "follow"  பட்டனை அழுத்தி,  உங்கள் ஆதரவைத்  தொடர்ந்து வழங்குங்கள்!  நன்றி!!!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,