தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

கோளறு பதிகம்

                                                             

                                                             கோளறு பதிகம் 


கோளறு  பதிகம் பாடப்பட்ட சூழலை முதலில் அறிவோம்!

                    திருஞானசம்பந்தரும்  'அப்பர்' என்று இவரால் அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரும் பல சிவத்தலங்களுக்கும் ஒன்றாகவே சென்று இறைவன் மீது பாடல்கள் பாடி வந்தனர்.

                   ஒருமுறை இவர்கள் இருவரும் திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் என்னும் திருத்தலத்தில் தங்கியிருந்தனர்.   இருவரும் இறைவனைப் பற்றிய சிந்தனைகளில் கலந்துரையாடிக் கொண்டிருந்தனர்.  அப்போது, மதுரையிலிருந்து வந்த ஏவலர் ஒருவர், 'ஐயனே!  பாண்டியன் தேவி மங்கையர்க்கரசியாரிடமிருந்தும் அமைச்சர் குலச்சிறையாரிடமிருந்தும் செய்தி ( பாண்டிய நாட்டில் சமண மதம் ஓங்குவதைத் தடுக்கும் பொருட்டு, திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி அங்கே சைவம் தழைக்க உதவ வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் ) வந்துள்ளது' என்று கூறி ஓர் ஓலையைச் சம்பந்தரிடம் தந்தார்.  சம்பந்தரும் அதனைப் படித்துவிட்டு,  அப்பரைப்  பார்த்து,   " அப்பரே!  பாண்டியன் தேவியாரும் குலச்சிறையாரும் அடியேனை மதுரையம்பதிக்கு வந்து, ஆலவாய் அரசனின் ஆலயத் தரிசனம் செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.  ஆதலால், உடனே சென்று அன்னை அங்கயற்கண்ணியுடன் அமர்ந்திருக்கும் திருவாலவாயனைத் தரிசிக்க வேண்டும் போல் இருக்கிறது".
                      அப்பரோ,  ஒன்றும் கூறாமல் முகவாட்டம் அடைந்தார்.   ஏனென்றால்,  பாண்டிய மன்னன் சமண மதத்தில் பற்றுக் கொண்டிருந்தான்.  அவனுடைய மனைவி மங்கையர்க்கரசியோ சைவ மதத்தில் பற்றுக் கொண்டிருந்தார்.  பாண்டிய நாட்டில் சமணரின் ஆதிக்கம் சென்று கொண்டிருந்தது.   இதனால், அப்பர் தயங்கினார்.  
                    சம்பந்தர், 'பெருமானே!  ஏன் தயங்குகிறீர்கள்?  உடனே திருவாலவாய்க்குச் செல்ல வேண்டும் என்று என் மனம் விழைகிறது.  ஆனால்,  தாங்களோ எதையோ எண்ணிக் கலங்குவதாய்த் தோன்றுகிறது.  என்னவென்று கூறுங்கள்' என்றார்.
                 'ஒன்றும் இல்லை, பிள்ளையாரே! பாண்டியன் சமணனாய் மாறிவிட்டான்.  மதுரையில் சமணர் ஆதிக்கம் அளவில்லாமல் போய்விட்டது என்று அறிந்தேன்.  என் இளம்வயதில் சமணரால் அடியேன் அடைந்த துன்பங்கள் எல்லாம் தாங்களும் அறிந்திருப்பீர்கள்.  சிறு பிள்ளையான தாங்கள் மதுரைக்குச் சென்றால் அந்தச் சமணர்களால் ஏதேனும் ஊறு விளையுமோ என்று அஞ்சுகிறேன்.  அதனால் தாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.  
                'என்  தந்தையாரைப் போன்ற அன்பு என்மேல் தங்களுக்கு இருப்பதால் தான் அடியேன் தங்களை 'அப்பர்' என்று அழைத்தேன்.  தங்களுக்குச் சமணர்களால் விளைந்த துன்பங்களெல்லாம் எந்த இறைவனின் திருவருளால் விலகியதோ அதே இறைவன் திருவருள் அடியேனையும் காக்கும் என்பதனை மறந்து கலங்குகிறீர்களே..   தாங்கள் இப்போது கலங்குவதை பார்க்கும்போது நான் உங்களை அப்பர் என்று அழைத்தது மிகச் சரி என்று தெளிவாகிவிட்டது.  என்னைத் தயைசெய்து தடுக்காதீர்கள்'. 
                 உடன் அப்பரோ,  'அது மட்டும் இல்லை ஐயனே....இன்று    நாளும்  கோளும் சரியில்லை.  அதனால் இன்று நீங்கள் கிளம்பி மதுரைக்குச் செல்லாமல் பிறிதொரு நாளில் சென்றால் மிக்க நலமாகும் என்று அடியேன் எண்ணுகிறேன்' என்றார்.
                  'அப்பரே!  நாளும் கோளும்  அடியார்க்கு என்றும் மிக நல்லவை என்று தாங்கள் அறியாததா?  அவை நன்மையே பயக்கும்' என்று கூறி,   "வேயுறு தோளிபங்கன் ....' என்று தொடங்கிப் பத்துப் பாடல்கள் பாடினார் சம்பந்தர்.  இயல்பாகவே, பத்துப் பாடல்களின் தொகுப்பிற்குப் 'பதிகம்' என்று பெயர்.  அதன்படி, இப்பதிகத்திற்குக்  "கோளறு   பதிகம்"  (  கோள்  + அறு  = கோள்களால் ஏற்படும் துன்பங்களை அறுக்கின்ற  ( நீக்குகின்ற ) பாடல்கள். )  என்று பெயர்.   இறுதியாக இருக்கும் பதினோராவது பாடல்,  பதிகத்தைப் படிப்பதால் ஏற்படும் பயனைக் கூறுகிறது.   மேலும், இப்பதிகம் திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாம் திருமுறையில் அமைந்துள்ளது.
                                
              
                       திருமறைக்காடர்க் கோவில், வேதாரண்யம்.    

                                    கோளறு   பதிகம்*      

                    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

                        மிகநல்ல வீணை தடவி

                        மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

                        உளமே புகுந்த அதனால்

                        ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

                        சனிபாம்பு இரண்டும் உடனே

                        ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

                         அடியார் அவர்க்கு மிகவே.            (  1  )

சுருக்கம் : இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

விளக்கம் : மூங்கில்  (  வேய் )  போன்ற  தோளினையும்  உமாதேவியாரைத் தம் ஒருபாகமாகவும் கொண்டவனும்  விடமுண்ட தொண்டையை  (  கண்டம் )ஆகிய சிவபெருமான்,  நிலவு கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவராய் மகிழ்ச்சியான நிலையில் வீணையை மீட்டிக்கொண்டு என் உள்ளத்தில் வந்து புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு,திங்கள் முதலானவன்பான் கோள்களும் குற்றம் இல்லாத நலத்தைச் செய்வன.   அவை அடியவர்களுக்கும்   நல்லனவற்றையே மிகுதியாகச் செய்யும்.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க

எருதேறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.    (   2   )

சுருக்கம்  :  அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

விளக்கம் :  எலும்பு,  பன்றிக்கொம்பு,ஆமையின் ஓடு ஆகியவற்றை  மார்பில் அணிந்து பொன்  போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைப்பூவின் மாலை,  கங்கை ஆகியவற்றை  முடிமேல் அணிந்தும்  உமாதேவியாருடன் எருதின் மீது ஏறி வந்தது என் உள்ளத்தில்  வந்து புகுந்த காரணத்தால்  அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாத நாள்களான ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருகின்ற நாள்களிலும் பிறவுமான  நட்சத்திரங்கள்  அன்போடு  நல்லனவற்றையே செய்யும்.   அடிவர்களுக்கும்    நல்லனவற்றையே மிகுதியாகச் செய்யும்.

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வமான பலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.     (   3   )

சுருக்கம்  :   திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

விளக்கம் :  அழகிய பவளம் போன்ற மேனியில் ஒளி பொருந்திய கொன்றை மலர்,  நிலவு ஆகியவற்றை முடிமேல் அணிந்து இறைவன் உமாதேவியாரோடு வெள்ளைப்பசு  மீது ஏறிவந்து  என் உள்ளத்தில் புகுந்துள்ள காரணத்தினால் திருமகள்,  துர்க்கை, செயமகள், நிலமகள், திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லனவாகத் தரும்.     அடிவர்களுக்கும்    நல்லனவற்றையே மிகுதியாகச் செய்யும்.

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்

கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.      (   4    )

சுருக்கம்   :    சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

விளக்கம் :   பிறை போன்ற நெற்றியினை உடைய உமாதேவியாரோடு ஆலின் கீழிருந்து வேதங்களை அருளிய எங்கள் இறைவன் கங்கை, கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அனைத்து என் உள்ளத்தில் வந்து புகுந்த காரணத்தினால் கோபம் கொண்ட காலன், அக்கினி,  எமன், எமதூதர்கள், கொடிய நோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணம் கொண்டு நல்லனவற்றையே செய்யும்.   அடிவர்களுக்கும்    நல்லனவற்றையே மிகுதியாகச் செய்யும்.

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.        (   5    )

சுருக்கம்   :    கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

விளக்கம் :     நஞ்சினை அணிந்த கண்டனும் எம் தந்தையும் உமாதேவியாரோடு விடைமீதேறி வருகின்ற எம் தலைவனுமாகிய சிவபெருமான், இருள் செறிந்த வன்னி இல்லை, கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து வந்து என் உள்ளத்தில் புகுந்த காரணத்தினால்,  கொடிய கோபம் கொண்ட அசுரர்கள், இடி மின்னல், ஆணவம் கொண்ட பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவற்றையே செய்யும்.  அடிவர்களுக்கும்    நல்லனவற்றையே மிகுதியாகச் செய்யும்.

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.    (    6   )

சுருக்கம்   :  சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

விளக்கம் :    ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோல் ஆடையை உடுத்தி வரிந்து கட்டிய கோவண ஆடையை உடையவராய் உள்ள சிவபெருமான்,  உமாதேவியாரோடும் அன்றையதினம் மலர்ந்த மலர்கள் வன்னி, கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்த காரணத்தினால் வலிமையான குரங்கு, புலி,  கொல்லும் குணம் கொண்ட யானை,  பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியனவும் நமக்கு நல்லனவற்றையே செய்யும்.    அடிவர்களுக்கும்    நல்லனவற்றையே மிகுதியாகச் செய்யும்.

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக

விடையேறு செல்வன் அடைவார்

ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.    (   7   )

சுருக்கம்   :    வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

 விளக்கம் :     செப்புப் போன்ற இளம் முலைகளை உடைய உமாதேவியாரை ஒரு பாகத்தே கொண்டு,  விடையின்மீது ஏறிவரும் சிவபெருமான் தன்னை அடைந்த இளமதியையும் கங்கையையும் முடிமேல் அணிந்து என் உள்ளத்தில் புகுந்த காரணத்தினால் வெம்மை, குளிர்ச்சி, பித்தம் ஆகியவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து அடையாது.  அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும்.

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே     (   8    )

சுருக்கம்   :   கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

விளக்கம் :   தமது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்து விடையின்மீது ஏறி உமாதேவியாரோடும் ஒளிபொருந்திய மதி, வன்னி, கொன்றை மலர் ஆகியனவற்றையும் தம் முடிமேல் அணிந்து என் உள்ளத்தில் வந்து புகுந்த காரணத்தினால் ஏழு கடல்களால் சூழப்பட்ட  இலங்கை மன்னனாலும்  ( இராவணன் ) பிறராலும் வரும் துன்பங்கள் நம்மை வந்து அடையா.  ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவற்றையே செய்யும்.  அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும்.

பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்

வரு காலமான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.     (    9    )

சுருக்கம்  :     நான்முகன்,  நாராயண  மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

விளக்கம் :   பல்வேறு வேடம் கொண்டு அருளுகின்ற இறைவனும் உமையொருபாகனும் எருதின் மீது ஏறி வரும் எங்கள் இறைவனாகிய சிவபெருமான்,  முடியின் மேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உள்ளத்தில் புகுந்த காரணத்தினால் தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரமன், திருமால், வேதங்கள், தேவர்கள் ஆகியோராலும்  கெட்ட  காலங்கள், அலைகளை உடைய கடல், மலைகள் ஆகியவற்றாலும்  வரும் தீமைகள் எவை எனினும் அவை நமக்கு நல்லனவாகவே அமையும்.   அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.      (   10   )

சுருக்கம்   :  புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

விளக்கம் :    பூங்கொத்துகளை அணிந்த கூந்தலை உடைய உமாதேவியாரோடு சென்று நற்குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்து வேடவடிவம் கொண்ட சிவபெருமான், முடியின்மீது ஊமத்தை மலர், மதி, பாம்பு ஆகியவற்றை அணிந்து என் உள்ளத்தில் புகுந்த காரணத்தினால் புத்தர்களையும் சமணர்களையும்  ( அமணர்கள்  ) திருநீற்று வாதத்தில் தோற்றோடச் செய்யும்.  நமக்கு வரும் அத்தகைய துன்பங்கள் நல்லனவற்றையே செய்யும்.  அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே!!        (    11    ).

சுருக்கம்  :   இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

விளக்கம் :     தேன் நிறைந்த சோலைகளைக்  ( பொழில் )  கொண்டதும் கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும் செம்பொன் குவியல் எங்கும் நிறைந்திருப்பதும் நான்முகனால் முதன்முதலில் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்தில் தோன்றி திருமறைஞானம் பெற்ற  முனிவனாகிய திருஞானசம்பந்தன்  வினைப்பயனால் தாமே வந்து அடையும் நாளும் கோளும் பிறவும் அடியவர்களை வந்து துன்புறுத்தாத வண்ணம் பாடிய சொல்லால் இயற்றிய மாலையாகிய இப்பதிகத்தைப்  படிக்கும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவார்கள்.  இது நமது  உறுதியான கூற்று.  (  ஆணை )

                                                                      திருச்சிற்றம்பலம்

                       இன்றைக்கும்  ஏதேனும் முக்கியமான காரியமாகக் கிளம்பும்போதும்  அப்படியே சகுனம் சரியில்லாமல் இருந்தாலும் செல்லும் காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று வேண்டியபடி இந்தப் பதிகத்தைப் படித்துவிட்டுச் செல்லுவாரும் உண்டு.

*   -   சில பாடல்களின் குறிப்புகள் 

1.  மூங்கில் போன்ற தோள்கள்  :மூங்கிலின் இரு கணுக்களுக்கும் இடையே உள்ள பகுதி போன்ற தோள்கள்    -   பாம்பு இரண்டு  :  இராகு,  கேது.

2.  ஏழை  :  பெண்  ( இங்கு,  உமாதேவியார் ),   ஒன்பது  :  அசுவினியை முதலாகக் கொண்டு எண்ணினால் (  மொத்தம் 27 நட்சத்திரங்கள்  ) ஒன்பதாவது நட்சத்திரம்  ஆயில்யம்.  ஒன்பதோடொன்று : மகம்;  ஒன்பதொடேழு : பதினாறு ( விசாகம் ).;  பதினெட்டு :  கேட்டை ;  ஆறு : திருவாதிரை.   உடனாய நாள்கள் : மற்றவை  அதாவது பரணி,  கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம், பூரட்டாதி.    இன்னும் சிலர் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரையை முதலாகக் கொண்டு எண்ணுவர்.  அதன்படி ஒன்பது சித்திரை,  அதனோடு ஒன்று சுவாதி, அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம், அதற்குப் பதினெட்டு பூரட்டாதி.  அதற்கு முன் ஆறு பூராடம் என்றும் அமையும்.  உடனாய நாள்களாக பரணி, கார்த்திகை, மகம் பூரம், விசாகம், கேட்டை என்பன  அமையும்.

3.    கலையதூர்தி  -  துர்க்கை;   நெதி  - திரவியம்.

5.  துஞ்சிருள் வன்னி  - வன்னி மரத்தின் இலைகள் மிகுந்து அடர்த்தியாகத் தழைத்துக் காணப்படுவதால் இருள் சூழ்ந்து இருக்கும்.

6. அரி - குரங்கு;  உழுவை  -  புலி;  ஆளரி -  சிங்கம்.

7.  வாதம்  -  வளி ( காற்று );   பித்து  -  பித்தம்.

8.  அரையன்  -  அரசன்  ( இடைப்போலி )

9.  நாரி  -  உமாதேவியார்.

10.  வாதில்  -   வாதத்தில்  :  அனல் வாதம், புனல் வாதம், போதிமங்கைக்கு அருகில் புத்தருடன் நடந்த சொற்போர்.

11.   நாளும்  -  சூரியன் முதலிய கிரகங்களும்.                                                             

       கோளும்  -  அசுவினி முதலிய நட்சத்திரங்களும்.

                                                கோளறு பதிகம் நிறைவுற்றது.  

கருத்துகள்

  1. வணக்கம் அத்தை. இந்நெடிய பதிகத்தை கடின உழைப்புடன் இவ்வளவு தெளிவாக உரைத்ததற்கு நன்றி.. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,