தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

தலைமுறைகள் ஏழு

 

                                                     தலைமுறைகள் ஏழு 

        Seven Generations

                                  எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் ஆசிரியப் பணிக்குச் செல்வதால், இரவு வேளை உணவு மட்டும் அம்மா அப்பாவுடன்  நாங்கள் ( என் அண்ணன்கள் இருவர், தங்கை ஒருவள் ) ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.  அப்பொழுது எங்கள் அப்பா, ஏதேனும் சுவையான பாட்டு, கதை, எங்கள் பள்ளியில் நடந்தது,அம்மாவின் அல்லது அப்பாவின் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் என்று கூறுவார்.  நாங்கள் அதைக் கேட்டுக் கொண்டே சாப்பிடுவோம்.  இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அப்பா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதோடு நாங்களும் கலந்து உரையாடுவதால், சாப்பிடுகின்ற அளவு அதிகமாக ஆனதை எழுந்தபிறகு தான் நாங்களே உணர்வோம்.  அந்தளவிற்குச் சாப்பாட்டுச் சுவையுடன் செவிச் சுவையும் அமையும்.  நினைத்தாலே இனிக்கும் / சுவைக்கும் காலங்கள் அவை!

               இப்படித்தான் ஓர் இரவுச் சாப்பாட்டு நேரத்தில் என் அப்பாவிடம், 'எதற்கெடுத்தாலும் ஏன் ஏழு தலைமுறைகள்?' இல்லைன்னா ஏழு தலைமுறைக்கு உக்கார்ந்து சாப்பிடலாம் என்கிறார்களே,ஏன்? என்று கேட்டேன்.  அதற்கு அப்பா, ரொம்ப அருமையா பதில் சொன்னார், பாருங்களேன்.....

                  அம்மா, அதுக்கு நிறைய கருத்துகள் இருக்கு. சொல்றேன், கேளு!

இந்த, 'ஏழு' என்கிற எண்ணைப்  பலரும் கையாள்கிறார்கள். 

       ஏழு கடல், ஏழு மலை, ஏழு காடு, ஆறு கிளி தாண்டி ஏழாவது கிளியோட கழுத்தில் தான் உயிர் இருக்கு. அதைத் திருகிப் போட்டு விட்டால் சூனியக்காரக் கிழவி செத்து விடும்  '  னு நாம பேச்சு வழக்கில் கதை சொல்வோம்.  இதற்கெல்லாம் நிறைய காரணங்கள் சொல்லலாம்.   இவ்வளவு ஏன்? முதல்ல, நம்ம திருவள்ளுவரை  எடுத்துக்கொள்.  

                                "ஒருமையுள் ஆமைபோல்  ஐந்தடக்கல் ஆற்றின் 

                                  எழுமையும் ஏமாப் புடைத்து".  

                      அதாவது ஆமையானது தனக்கு ஆபத்து வரும்பொழுது தன்னுடைய நான்கு கால், ஒரு தலை ஆக ஐந்துறுப்புகளையும் தன் ஓட்டுக்குள் மறைத்துக் கொள்கிறது.  அதுபோல ஒருவன் அறத்திற்கு மாற்றான தீங்கு வரும்பொழுது தன் ஒரு பிறப்பில் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அடக்கி ஆள வேண்டும்.  அவ்வாறு செய்தால் அவனுடைய ஏழு பிறவிகளிலும் அது அவனுக்குப் பாதுகாப்பாக அமையும்.

இன்னும் ஓரிடத்தில், 

                         "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

                           எழுமையும்  ஏமாப் புடைத்து".

                                        இங்கே திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால், 'ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி அவனுக்கு ஏழு பிறவியிலும் கூடவே இருந்து உதவும். என்கிறார்.

                                  இது போன்று இன்னும் சில இடங்களில்  ஏழு என்ற எண்ணைத் திருவள்ளுவர் கையாளுகின்றார்.    நம் ஆண்டாளும் திருப்பாவையில்,            

                 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு 

                 உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்' 

என்று கூறுகிறாரே!    இன்னும் சொல்லப்போனால், விவேகானந்தரிடம் ஒருவர், பல்கலைக் கழகக் கல்வி முறை' பற்றிக் கேள்வி கேட்டார்.  அதுக்கு அவர், பல்கலைக்கழகக் கல்வி முறை பற்றி அவருடைய கருத்தைச் சொன்னார்.  கூடவே வருத்தத்தோடு, 'கல்வி,  'வேலைக்கான ஆட்களை உற்பத்தி செய்யும் இயந்திரம்' அவ்வளவுதான்!  அந்த அளவோடு நின்றிருந்தால்கூடப்  பரவாயில்லை.  ஆனால், அவற்றின் காரணமாக மனிதர்கள் சிரத்தையும் நம்பிக்கையும் அற்றவர்களாக அல்லவா ஆகின்றனர்.  கீதையை இடைச்செருகல் என்கிறார்கள்;  வேதமந்திரங்களை நாட்டுப்புறப் பாடல்கள்  என்கிறார்கள்.       

                          இந்தியாவிற்கு வெளியேயுள்ள  எல்லாவற்றின் நாடிநரம்புகளை எல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள்.  தங்கள் முன்னோர்களின் ஏழு தலைமுறை ஏழு தலைமுறை ஏன், மூன்று  தலைமுறையினரின் பெயர்கூட அவர்களுக்குத் தெரியாது.

                           அதனால் என்ன? முன்னோர்கள்   அறியாமலிருப்பதால் என்ன ஆகி விடும்?

                         அப்படி நினைக்காதே!  தனக்கென ஒரு வரலாற்றுப் பரம்பரை இல்லாத நாட்டிற்கு எதுவுமே இல்லை. 'நான் இன்ன நாட்டில்  பிறந்தவன்' என்ற நம்பிக்கையும் பெருமிதமும் உடையவன்  தீயவனாக முடியுமா?  எப்படி ஆக முடியும்? அவனது நம்பிக்கையே  அவனை நல்வழிப்படுத்தும்.  மரணமே வந்தாலும் அவனால் தீயவனாக முடியாது.  அதுபோலவே ஒரு நாட்டின் பண்டைய சரித்திரம் அதன் மக்களைக் கட்டுப்பாட்டுடன் இருக்கச் செய்கிறது; அவர்களைத் தாழ்ந்து போக விடுவதில்லை.

                        சரி, இப்பொழுது நீ கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் தருகிறேன், பார்...!   ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து அதன் மூலமாக ஒரு சந்ததி உருவாவது தான், தலைமுறை என்பார்கள்.  நீங்கள் எல்லாரும் முதல் தலைமுறை என்றால், நாங்கள் இரண்டாம் தலைமுறை.. உங்கள் தாத்தா பாட்டி மூன்றாம் தலைமுறை ..என்று கீழுள்ளவாறு விளக்கமாகக் கூறினார்.

                               நாம்                                  இன்று / முதல் தலைமுறை 

                            தந்தை  தாய்                   இரண்டாவது தலைமுறை   

                          பாட்டன் ( கொள்ளுத் தாத்தா )

                           பாட்டி   ( கொள்ளுப் பாட்டி )  மூன்றாவது தலைமுறை    

                           பூட்டன் பூட்டி                    நான்காவது தலைமுறை    

                         ஓட்டன்(எள்ளுத் தாத்தா)  ஐந்தாவது தலைமுறை  

                         ஓட்டி ( எள்ளுப் பாட்டி )                       

                          சேயோன் சேயோள்       ஆறாவது தலைமுறை    

                           பரன் பரை                          ஏழாவது தலைமுறை.   

 பரன் பரை என்னும் சொல்லே,  நாளடைவில் பரம்பரை என்று ஆயிற்று.   தாத்தாவைப் பாட்டன் என்றும் அழைப்பார்கள்.  ஆக, இப்படி வருகிற ஏழாவது தலைமுறைதான் பரம்பரை என்று சொல்லுவார்கள்.

                           இன்னும் பார்த்தாயானால், பரன் என்றால் பூட்டனின் பூட்டன்.  அதாவது, பூட்டன் முதல் தலைமுறை என்றால் பரன் என்பவன் பூட்டனின் பூட்டன் ஆகிறான்.  ( மேலே உள்ள வரிசை முறையை வைத்துச் சொல்லிப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். )

                            நம்ம கலிங்கத்துப் பரணியில், "நந்தியே, நந்தியா பரனே!" என்று ஓர் அடி வரும்.  அந்த இடத்தில் பரன் என்றால் உயர்ந்தவனே, கடவுள் போன்றவனே என்ற அர்த்தத்தைத் தரும்.  ( இப்படித்தான் இலக்கியத்திலிருந்து சட் சட்டென்று பாடல் வரிகளை, கருத்துகளைக் கூடவே சொல்லுவார், எங்கள் அப்பா! )

                        ஒரு தலைமுறை தோராயமாக, 60 ஆண்டுகள் என்று கணக்கில் எடுத்துக் கொள்வர் நம் பெரியவர்கள்.  அப்படி ஏழு தலைமுறை என்றால்,   7 ✖ 60 = 420 ஆண்டுகள் வாழும் என்பர். 

                        இன்னும் ஒண்ணு சொல்றேன் மா!நம்ம உடம்புல இருக்கிற செல்லுல மைட்டோகாண்ட்ரியான்னு ஒன்று இருக்கிறது.  அதுல மரபணு, மரபணு ன்னு சொல்றோமே DNA இருக்கு.  அது யார்கிட்ட இருந்து வருதுன்னா அம்மாகிட்ட இருந்து வருது.  மீதி பாதிதான் அப்பாகிட்ட இருந்து வருது.  அது மட்டுமன்று, இந்த மைட்டோகாண்ட்ரியா அம்மாகிட்ட இருந்து மட்டுமே வழிவழியா வருது.   அம்மாகிட்ட இருக்கிறது அவங்களோட தாய்வழிப் பாட்டிகிட்ட இருந்து வருது.  அதனால,  தலைமுறையைப் பார்த்தாயானால்,  தலைமுறை அளவீட்டைத்  தாய்வழியில் தான் சொல்லணும். என்று கூறுவாரும் உண்டு; மறுப்பாரும் உண்டு மா!  என்று முடித்தார்.  

                          இன்றைக்கு எந்த ஒரு தகவல் என்றாலும் இணையத்தில் சென்று பார்க்கின்றனர் இன்றைய தலைமுறையினர்;  ஆனால், அன்றைக்கு இணையம் என்பது ஏது?  அம்மா அப்பா, தாத்தா பாட்டியர்தான் அனைத்தும் அறிந்த 'இணையமாக' இருந்து நம்மை இணைத்து வைத்திருந்தனர்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,