தேசிய வாக்காளர் தினம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1985, 1990 களில், "போடுங்கம்மா ஓட்டு; . . . . . யப் பார்த்து" இந்தக் கூச்சல் இல்லாத இடமே இல்லை எனலாம். அந்த அளவிற்குத் தேர்தல் நேரம் வந்துவிட்டாலே, இந்தக் கூச்சல்தான். வீட்டில் சாப்பாடு என்றாலும், அம்மாவைப் பார்த்து வீட்டில் இருப்போர் "போடுங்கம்மா சோறு; என் தட்டைப் பார்த்து" என்னும் கேலிக் குரல்கள்!
மாண்டெஸ்க்யூ என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா' என்ற நூலில், குடியரசு அல்லது குடியாட்சி ஆகியவற்றில் தேர்தல்கள் நடக்கும் போது வாக்காளர்கள் தாம் நாட்டின் ஆட்சியாளர்களாக இருப்பதா அல்லது அரசாங்கத்தின் குடிமக்களாக இருப்பதா என்றஇரண்டில் ஒன்றை முடிவுசெய்கிறார்கள் என்றும், தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்களே என்றும் குறிப்பிடுகிறார். அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது! அதற்கு முன்னதாக, இதுபற்றிய சில கருத்துகளைக் காண்போம்!
தெரிந்தெடுப்பது என்பது, சோழன் காலத்தில் குடவோலை முறை மூலமே தொடங்கி விட்டது என்று கூறலாம்.ஆனால், தெரிந்தெடுத்தல் ( தேர்ந்தெடுத்தல் - தேர்தல் ) என்னும் செயல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. குடவோலைத் தேர்தல் முறை என்றெல்லாம் நாம் வரலாற்றுப் பாடங்களில் படித்திருக்கிறோம்.
1989 ஆம் ஆண்டு வரை 25 வயது நிரம்பியவரே வாக்களிக்க முடியும்; ஆனால், இன்று 18 வயது நிரம்பிய தகுதியான எவரும் வாக்களிக்கலாம். அதேசமயம், வேட்பாளரின் சொத்து, குற்ற வழக்குகள், தேர்தல் அறிக்கைகள் குறித்து அறிய உரிமைகளும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் சனவரி முதல் தேதியன்று, இந்திய நாடு முழுவதிலும் 18 வயது நிரம்பிய வாக்காளர்களை அடையாளம் காண்பது தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பணியாகும்.
இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் இயற்றப்பெற்ற ஓர் அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம்; தன்னாட்சி மிக்கது. ஏறக்குறைய இதன் செயல்கள் நீதித்துறை போன்று நடுவுநிலையுடன் இருக்கும்.
நாட்டை நிர்வகிக்க மக்கள் மன்றங்கள் தேவை. இதற்கான பெயராட்சி உறுப்பினர்களைத் தெரிவு செய்யத் தேர்தல்களை நடத்துவது இதன் முக்கிய பணியாகும். அதேசமயம், நடுவுநிலையோடும் தேர்தலை நடத்துதல் வேண்டும்.
குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மாநிலச் சட்ட மன்ற அவைகள் மற்றும் நாடாளுமன்ற அவைகளை அமைப்பதற்குரிய தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் இவ்வாணையத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழிவகுக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், இது தொடர்பான பணிகளை மேற்பார்வையிட, தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும்.
மாநில அரசின் அதிகாரங்கள் அதன் உள்ளமைப்புகளுக்கும் சென்று சேர "தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்" உருவாக்கப்பட்டது. உள்ளாட்சி மற்றும் நகராட்சி மன்றத் தேர்தல்கள் இதன்மூலம் நடத்தப் பெறுகின்றன.
ஒரே மாதிரியான தேர்தல் முறை இருந்ததில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி வந்திருக்கிறது. என் தாத்தா காலத்தில், என் தந்தையார் காலத்தில், என் காலத்தில், இப்போது என் மகன் காலம் என்று நவீனத் தேர்தல் முறை இருபதாம் நூற்றாண்டில்தான் உருவானது.
முன்பெல்லாம் வாக்குச்சீட்டுகள் இருந்தன; வாக்காளர் தாம் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள கட்சியின் சின்னத்தில் அடையாளமிட்டு அதன் அருகில் உள்ள பெட்டிக்குள் இடுவர். இதுவே, "வாக்குச் சீட்டு முறை" எனப்படும். ஆனால், தற்போது மின்னணு வாக்கு இயந்திரந்திரத்தில் ( Electro Voting Machine - EVM ) உள்ள பொத்தானை அழுத்தினால் போதுமானது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர் அறிய உதவும் "ஒப்புகைச் சீட்டு / வாக்காளர் சரிபார்க்கும் காகிதத் தணிக்கைச் சோதனை" ( Voter Verified Paper Audit Trail - VVPAT ) என்னும் நடைமுறையும் உள்ளது.
"நோட்டா" என்னும் ஒட்டு முறையும் உள்ளது. வாக்காளர் ஒருவர் தாம் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று உணர்ந்தால் இவ்விதமான ஓட்டினைப் பயன்படுத்தலாம். இது, வாக்களிக்கும் இயந்திரத்தின் இறுதிப் பொத்தானாக, 'இளஞ்சிவப்பு' நிறத்தில் அமைந்திருக்கும்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணிக்குப் பாதுகாப்பு தரும் காவல் துறையினர், இராணுவத் துறையினர் படிவம் - 6 ஐ நிரப்பி, அதன்மூலம் பெறுகின்ற படிவம் 13 ஏ மற்றும் வாக்குச் சீட்டின் மூலம் தங்கள் வாக்கினைப் பதிவு செய்யும், " அஞ்சல் வாக்கு முறை"யும் இருக்கின்றது. நாட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் ஆகும்.
இப்பொழுதும்கூட நாம் வாக்களிக்க வேண்டும் என்பதை விட ஏன் வாக்களிக்க வேண்டும், எப்படி வாக்களிக்க வேண்டும், எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வேண்டும். இதற்கு முக்கியமானது தம்மைச் சுற்றி நடக்கும் சமூகம் , அரசியல், விவசாயம், பொருளாதாரம் , கல்வி, தொழில், வேலைவாய்ப்பு முதலான சார்ந்த அடிப்படை தகவல்களையெல்லாம் தெரிந்து வைத்திருத்தல் நல்லது.
தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையைக் கட்டாயமாக்கியுள்ளது. எனினும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க இயலும். வாக்காளர் பட்டியல் என்பது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கென்று இருக்கும். தாம் இருக்கும் சட்டமன்றத் தொகுதியின் பெயர் அறிந்து தம் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்பே கவனித்து வைத்திருத்தல் நலம்.
அதேபோல்,வாக்காளர்கள் எந்தவிதச் சலுகையையும் எதிர்பாராமல், வாக்கு என்னும் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும். இதற்கான விழிப்புணர்வை வீட்டில் இருக்கும் மூத்தோர், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திறன்சார் சான்றோர்கள் ஏற்படுத்தலாம். அதேநேரம், தம் கருத்தைத் திணிப்பதாகவோ, வலியுறுத்துவதாகவோ, தம் கருத்திற்கு ஆதரவு கூறவேண்டி மறைமுகமாகவோ பேசுதல் கூடாது. நடுவுநிலை சார்ந்து வாக்கு, தேர்தல், வாக்குரிமை, வாக்களித்தல் முதலான பற்றி வழிகாட்ட வேண்டும்.
வாக்களித்ததன் அடையாளமாக இடது கையின் ஆள்காட்டி விரலில் நகமும் சதையும் சேரும் இடத்தில் நீல நிற மை வைக்கப்படுகிறது. ( 1962 முதல் ). பின்பு, இடது கை ஆள்காட்டி விரலில் கோடு போல் நீட்டி வைக்கும் முறை 2006 முதல் இருந்து வருகிறது. இந்த மை குறைந்தபட்சம் நான்கு நாள்கள் முதல் 20 நாள்கள் வரை இருக்கும். இந்த அடையாளத்தைப் பெருமையுடன் பிறரிடம் காட்டி மகிழ்வதில் இருக்கின்ற சுகமே அலாதி!
இன்றைய நாளில், நான், "வாக்களிக்கும் இந்தியக் குடிமகன்" என்றும் வாக்களிக்கும் நாளில், "என் கடமையினை ஆற்றினேன்" என்றும் பெருமை கொள்வோம்.
என்னங்க! அதற்குள் கிளம்பி விட்டீர்கள்? ஓ! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிப்பார்க்கவா??!! உங்கள் கடமையாற்றக் கிளம்பி விட்டீர்கள்! இதோ, நானும்.....!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்






Good to know
பதிலளிநீக்குமிகவும் நன்றி!
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு.. நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குஅருமை.. மிக அருமை.. குடவோலை முறை, வயதுவரம்பு, வாக்குச்சீட்டு முறை, EVM, NOTA, அஞ்சல் வாக்கு முறை என அனைத்துமே படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. தொடரட்டும் தங்கள் நற்பணி
பதிலளிநீக்குதங்களின் நீண்ட கருத்துகளுக்கு மிக்க நன்றி
பதிலளிநீக்கு