புயல் / சூறைக்காற்று / சூறாவளி
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
புயல் / சூறைக்காற்று / சூறாவளி
புயல் உருவாகக் காரணம்
எல்லா சூறாவளிகளுக்கும் நிறைய பொது உருவமைப்புப் பண்புகள் இருக்கின்றன. இவை குறைவான காற்றழுத்த பரப்புகளாக உள்ளதால், ஒரு பகுதியில் இருக்கும் காற்று மண்டலத்தில் மிக குறைவான காற்றழுத்தம் இருக்கும் இடத்தில் இவை மையம் கொள்கின்றன. இவை முற்றிய சூறாவளிகளில் கண் என்று அழைக்கப்படுகின்றன. மையத்தின் அருகே, காற்றழுத்தச் சாய்வளவு ஆற்றல் (சூறாவளியின் வெளியே இருக்கும் காற்றழுத்தத்தை விட அதன் மையத்தில் இருக்கும் காற்றழுத்தத்திலிருந்து) மற்றும் மைய விலக்கு விசை ( கொரியோலிஸ் ) ஆற்றல் ஆகிய இரண்டும் சரியான அளவில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், சூறாவளி காற்றழுத்தத்தின் வேறுபாட்டினால் தன் மேலேயே நிலை குலைந்து விழுந்துவிடும். மைய விலக்கு விசையினால் வட துருவத்தில், பெரிய சூறாவளிகளின் காற்றோட்டம் இடஞ்சுழியாகவும், தென் துருவத்தில் வலஞ்சுழி ஆகவும் உள்ளன.பள்ளத்தை நோக்கிப் பாய்வது எப்படித் தண்ணீரின் இயல்போ, அதே போன்று மேல்நோக்கி எழுவது காற்றின் இயல்பு!. வெப்பக் காற்று வேகமாக மேல் நோக்கிச் செல்லும். ஈரக் காற்று மெல்ல மெல்ல மேல் நோக்கிச் செல்லும். இது போன்று நகரும் காற்றின் நகர்வின் பெயர் சலனம். ஈரக்காற்று வெகு உயரம் செல்லாமல் வானில் தங்கிவிடுவதால், அது 'தாழ்வுநிலை' எனப்படும்.. அந்தத் தாழ்வுநிலை காரணமாகக் காற்றின் அழுத்தம் அதிகரித்தால் 'காற்றழுத்தத் தாழ்வுநிலை' என்று அழைக்கப்படும்.
புயல் என்னும்பொழுது அதன் கண் பகுதியைக் கொண்டே 'இவ்வகைப் புயல்' என்று வானிலையாளர்கள் வரையறுக்கின்றனர். இந்தக் கண் பகுதியானது, புயலின் வடிவியல் மையத்தில் இருக்கும். இது, சில சமயம் தெளிவாக இருக்கலாம் அல்லது தெளிவில்லாமல் இருக்கலாம். அதேசமயம், இதன் வடிவம் பெரும்பாலும் சமச்சீரான வடிவத்தில் இருக்கின்றன எனினும் சில நேரங்களில் நீள் சதுரமாகவும் ஒழுங்கற்ற வடிவத்திலும் இருக்கும்.
இந்தக் காற்று செல்லும் வேகத்தைப் பொறுத்துப் புயல்கள் உருவாகின்றன. இயல்பாகக் காற்றானது, மணிக்கு 31 கி.மீ. வேகத்தில் வீசும்.
32 - 51 கி.மீ. வேகத்தில் : காற்றழுத்தம். ( depression )
52 - 61 : தீவிர அழுத்தம். ( deep depression )
62 - 88 : புயல். ( cyclonic storm )*
89 - 118 : கடும் புயல்.
119 - 221 : மிகக் கடும் புயல்
222 க்கு மேல் : சூப்பர் புயல்.
*cyclone என்றால் 'சுருண்டு கிடக்கும் பாம்பு' என்று பொருள். ( கிரேக்க மொழிச் சொல் ) இவ்வாறு, வெவ்வேறு கி.மீ. வேகத்தில் செல்லும் காற்றானது,
சுழன்றடிக்கும் சூறாவளி - Tornado ( அமெரிக்கா ),
சூறாவளி - Hurricane ( மேற்கிந்தியத் தீவுகள் ),
சூறாவளிப் புயல் - Typoon ( சீனா ),
வில்லி வில்லி ( Willy Willy ) ஆஸ்திரேலியா,
புயல் - Cyclone ( இந்தியா ).
என்று இதன் பெயர்கள் அமைகின்றன. பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், வானிலையாளர்கள் துருவ மண்டலச் சூறாவளிகள், துருவப் பகுதிகளை நோக்கிய சூறாவளிகள், வெப்பமல் மண்டலச் சூறாவளிகள், மிதவெப்ப மண்டலச் சூறாவளிகள், வெப்ப மண்டலச் சூறாவளிகள், சுழல் காற்று என்று ஆறு வகைகளாகப் பிரிக்கின்றனர்.
துருவ மண்டலச் சூறாவளிகள் : ஒரு குறைவான காற்றழுத்தப் பகுதி ஆகும். இது, குளிர்காலத்தில் வலுவடைந்து கோடைக்காலத்தில் வலு இழக்கிறது.
துருவப் பகுதிகளை நோக்கி : சிறிய அளவில் தோன்றிச் சிறிது காலமே உயிர் வாழும். குறைந்த காற்றழுத்த அமைப்பு ஆகும். இது, இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் நீடித்து இருப்பதில்லை.
வெப்ப மண்டலங்களுக்கு வெளியே இருக்கும் சூறாவளி : வெப்ப மண்டல மற்றும் குளிர் துருவப் பண்புகள் இல்லாதவை. இதனால் இது, 'வெப்ப மண்டலத்தைக் கடந்த சூறாவளிகள்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், வானிலை ஆய்வாளர்களாலும் பொது மக்களாலும் காற்றழுத்த இழிவு என்றும் காற்றழுத்தக் குறைபாடு என்றும் அழைக்கப்படுகின்றது.
மித வெப்ப மண்டலச் சூறாவளி : காற்றைக் கொண்டிருப்பவை. இது, குறைவான அல்லது வலு இல்லாத தட்பவெப்பநிலை இருக்கின்ற இடங்களில் உருவாகும்.
வெப்ப மண்டலச் சூறாவளி : இது ஒரு புயல் அமைப்பு ஆகும். இடியுடன் கூடிய புயல்களும் குறைந்த காற்றழுத்த மையங்களும் உள்ளன. பலமான காற்று, மழை, வெள்ளம் உருவாகும்.
சுழல் காற்று : ஒரு செங்குத்தான சுழலச்சைச் சுற்றிச் சுழன்று காற்று உயரும். ஒரு குறிப்பிட்ட சிறு பகுதியில் நடக்கும் இந்தச் சுழல் தீவிர இடியுடன் கூடிய புயலாக உருவாகும்.
இதனைக் காணொளியாகக் கீழே காணலாம்.
இதனைப் பொறுமையாகவும் முழுமையாகவும் காண்போம்.
21 ஆம் நூற்றாண்டானது தகவல் தொழில் நுட்பக் காலம் எனினும், இயற்கைச் சீற்றங்களின் வேகத்தால் தொலைத் தொடர்பு அற்றுவிடுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் பயனற்றுப் போய் விடுகின்றன. இக்கட்டான சூழ்நிலையில் மனிதனின் முதல் தகவல் தொடர்புச் சாதனமான 'சைகை' தான் பயன்படுகிறது. இந்த வகையில் அமைவதே, "புயல் கூண்டுகள்". பகல் நேரங்களில் கருப்பு நிறத்துடன் கூடிய மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும், இரவு மற்றும் மேக மூட்டமாக உள்ள நேரங்களில் ஒளிகளை பாய்ச்சும் விளக்குகள் மூலம் இந்த எச்சரிக்கைகள் விடப்படுகின்றன.
புயல்கள் கடல் சார்ந்த பகுதி துறைமுகம், படகுகள், கப்பல்கள், மக்களைத் தாக்கும் என்பதால் புயல் கூண்டுகள் ஏற்றுவர். இதன்மூலம், புயலின் தன்மையைச் சட்டென்று மக்கள், மீனவர்கள் புரிந்து அதற்கேற்பத் தங்கள் இருப்பிட நகர்வை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். எண்கள் அடிப்படையில் இக்கூண்டுகள் ஏற்றப்படும்.
எண் 1. : புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது.
எண் 2 : புயல் உருவாகியுள்ளது.
எண் 3 : திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகத்திற்கான எச்சரிக்கை.
எண் 4 : துறைமுகம், புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம் என்பது உள்ளூருக்கான எச்சரிக்கை.
எண் 5 : துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கடப்பதால், துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படலாம் என்பதற்கான எச்சரிக்கை.
எண் 6 : துறைமுகத்தில், புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமஜூகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதற்கான எச்சரிக்கை.
எண் 7 : கடுமையான வானிலைக்குத் துறைமுகம் உட்படக் கூடிய ஆபத்து என்பதற்கான எச்சரிக்கை.
எண் 8 : துறைமுகத்தின் இடது பக்கமாகப் புயல் கரையைக் கிடைப்பதால் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதற்கான எச்சரிக்கை.
எண் 9 : துறைமுகத்தைப் புயல் வலது பக்கமாகக் கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் கடும் புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதற்கான எச்சரிக்கை.
எண் 10 : துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் புயலினால், பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது.
எண் 11 : இந்த எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பற்றுப் போன நிலையில், மோசமான வானிலையால் கேடுகள் ஏற்படலாம்.
மேலே உள்ள படத்தில் காணப்படும் முக்கோணம், உருளை, கூம்பு முதலான வடிவங்கள் மற்றும் சிவப்பு வெண்மை நிறங்கள் என ஒவ்வொன்றும் புயல் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் எச்சரிக்கைகளை உணர்த்துகின்றன.
பெயர் வைப்பது ஏன்?
புயலுக்கு முன் பேரழிவு, ஆபத்து பற்றிய விழிப்புணர்வு, பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்ற செயல்பாடுகளுக்குப் பெயர்கள் உதவும்.
பெரும்பாலான புயல்கள் ஒரு வாரம் அல்லது அதற்கு அதிகமான காலத்தில் இருக்கலாம். ஒரே கடற்பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து உருவாகி இருக்கலாம். அல்லது ஒரு புயல் வலுவிழக்கும் நேரத்திலேயே, மற்றொரு புதிய புயல் உருவாகலாம். ஒரு புயல் எங்கு உருவாகிறது, எந்தத் திசையில் இடம் பெயர்ந்து நகர்கிறது என்பதைக் கண்டறியவும் எச்சரிக்கை தரவும் பெயர் வைக்கும் வழக்கம் உண்டானது.
இந்தியாவில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை 2000 ஆம் ஆண்டில் தொடங்கியது. புதுடெல்லியில், உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை மையம் புயல்களுக்குப் பெயர் வைக்க 64 பெயர்களைக் குறித்தது. ( 2004, செப்டம்பரில் ). இந்தியா, வங்கதேசம், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாயலாந்து ஆகிய நாடுகள் இந்தப் பெயர்களை வழங்கியுள்ளன.
புயல்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா? என்றால் நம்மால் இயன்ற அளவு தடுக்கலாம். இதன்மூலம் பேரிழப்புகளும் குறையும். மேலும்,
i) புவி வெப்பமயமாவதைத் தடுத்தல்.
ii) காடுகளை அழிக்காமல் பாதுகாத்தல்.
iii) பாதரசம் வெளியேற்றப்படுவதைத் தடுத்தல்.
iv) இரசாயனம் போன்ற வேதிப்பொருள்களை நீர் முதலான இடங்களில் கொட்டப்படுவதைத் தவிர்த்தல்.
v) மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.
vi) பூமியின் மீதான தேவையற்ற ஆக்கிரமிப்புகளை நீக்குதல்
போன்ற செயல்கள் மூலமும் தடுக்கலாம்.
"பூமித்தாய் சோம்பல் முறித்தால் பூகம்பம்; பெருமூச்சு விட்டால் எரிமலை" என்பர். இந்த மாதிரியான இயற்கைச் சீற்றங்கள் நமக்குப் புதியதன்று. ஆம்! நிஷா, தானே, வர்தா,ஒகி, கஜா போன்று பலவிதமான புயல்களைச் சந்தித்து விட்டோம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட 'கடல்கோளி'னால் நம் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கணச் சொத்துகள் சிலவற்றை இழந்தோமே? பொருள் 'இழப்புகளை' மீட்டு விடலாம். ஆனால், உயிர் 'இழப்புகள்'? ஒவ்வோர் உயிரும் அந்தக் குடும்பத்திற்கு முக்கியம் ஆனதுதானே! இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளை உணருவோம்.
நமக்குத் தேவை விழிப்புணர்வு தான்! இனியாவது நாம் ஒவ்வொருவரும் விழித்துக் கொண்டால் பூமித்தாயும் அமைதியாக இருப்பாள்; பேரழிவும் ஏற்படாது. வரும் தலைமுறையும் காப்பாற்றப்படும் ! ! !
கருத்துகள்





Good information
பதிலளிநீக்குmigavum Nandri
பதிலளிநீக்குசெறிவான தகவல். நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி !
பதிலளிநீக்கு