அறிவியல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ம. சிங்கார வேலர் ( 1860 - 1946 )
தமிழில் அறிவியல் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்று விரும்பிவர்களுள் முதலாக இருந்தார். எளிய தமிழில் அறிவியலைக் கொண்டு சேர்க்கலாம் என்று செய்து காட்டியவர். பொதுவுடைமை இயக்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தமது அறிவியல் சிந்தனைகளைக் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு என்னும் இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். தமிழில் அறிவியல் கருத்துகளைக் கூறுவதற்கென்றே, 1934 இல் புது உலகம் என்ற இதழைத் தொடங்கினார். அதில், முழுக்க முழுக்க அறிவியல் தொடர்பான கட்டுரைகளையே எழுதி வந்தார். அதில், "அறிவியலின் மார்க்கம் அறியாததால், மூடப் பழக்கங்கள், சாதி -சமய வேறுபாடுகளால் மக்கள் வாடி வதங்கி வருகின்றனர். நிழலைக் கண்டு பயப்படும் குதிரை, ஆடு, மாடுகளை போல் நம் மக்கள் பூமி நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சந்திர கிரகணத்தையும் சந்திரன் நிழலால் மறைக்கப்பட்டு உண்டாகும் சூரிய கிரகணத்தையும் கண்டு பயப்படும் அறியாமையை என்னவென்று கூறுவது? இந்தக் குறைகளை நீக்குவதற்கு ஒரு விஞ்ஞானப் பத்திரிகை வேண்டும் என்ற கோரிக்கை இந்தப் புது உலகம் தோற்றத்தால் நிறைவேறும் என்று நம்புகின்றோம்" என்று மே, 1935 இதழில் எழுதியிருந்தார்.
கோழி முந்தியதா? முட்டை முந்தியதா என்னும் கேள்விக்கு, " பறவைகள் ஊர்வனவற்றிலிருந்தும் ஊர்வன தவளைக் கூட்டங்களிலிருந்தும், தவளைகள் மீன்களிலிருந்தும், மீன்கள் புழுப் பூச்சியிலிருந்தும், புழுப்பூச்சிகள் சிறு கிருமிகளிலிருந்தும் சிறு கிருமிகள் நுண்முட்டைகளிலிருந்தும் உயிர் பெற்றவை என்று டார்வின் கூறுவதை விளக்குகிறார். இந்தச் சிறுமுட்டைகள்தான் அனைத்து உயிர்கள் தோன்றுவதற்கும் காரணமாகும். தாவரங்களும் அந்தச் செல்களிலிருந்தே உருவாகின்றன. விதைகளும் முட்டை போன்ற வடிவுடையனவே ஆகும். முட்டைகளும் விதைகளும் தாதுக்களால் உண்டானவை. குறிப்பாக, முட்டையானது பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, கார்பன் ஆகியவை தட்ப-வெப்ப இயற்கைக் சூழலால் கூட்டுச் சேர்க்கையாகி முட்டை வடிவம் பெறுகிறது. இந்த முட்டை எல்லா உயிர்களுக்கும் எப்படி மூலமுதலோ, கோழிக்கும் அந்த முட்டைதான் மூலமுதலாகும். எனவே, கோழிக்கு முந்தியது முட்டை ஆகும்" என்று அறிவியலுடன் கூடிய விளக்கம் தந்தார். இதுபோன்றே, குடியரசு இதழிலும் அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடைகள் கூறியதன் மூலம் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து வந்தார்.
இது போன்ற அறிவியல் சிந்தனைகளின் மூலம் மக்களிடையே இருந்த பில்லி, சூனியம், சகுனம் பார்த்தல் முதலான மூடப் பழக்க வழக்கங்களையும் சாதி சமய வேறுபாடுகளையும் நீக்கி வந்தார்.
எந்தப் பொருளையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். பகுத்தறிவும் சுயமரியாதையும் அறிவியல் சிந்தனைகளால் கிடைக்கும் என்று தமது ஒவ்வொரு கட்டுரைகளின் மூலம் உணர்த்தி வந்தார். ,இதனால் இவர், 'சிந்தனைச் சிற்பி' என்று போற்றப்பட்டார். இவர், தொழிற்சங்கவாதியாகவும் விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்துள்ளார்.
அவர் எழுதிய நூல்கள்
1. கடவுளும் பிரபஞ்சமும்
2. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி
3. மனிதனும் பிரபஞ்சமும்
4. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்
5. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்
6. கல்மழை உண்டாகும் விதம்
7. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்
8. பிரபஞ்சப் பிரச்சினைகள்
9. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்
10. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் -பல பகுதிகள்
11. விஞ்ஞானத்தின் அவசியம்
12. பேய், பிசாசு
13. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்
14. மனோ ஆலய உலகங்கள்
15. பிரகிருத ஞானம்
16. ஜோதிட ஆபாசம்
17. பகுத்தறிவென்றால் என்ன?
18. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை
19. பிரபஞ்சமும் நாமும்
20. உலகம் சுழன்று கொண்டே போகிறது
21. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை
மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த இவரை, அறிஞர் அண்ணா " சிங்கார வேலர் செட்டியார். பரதவர் குலம். நெய்தல் நாயகன். இவர் ஒரு பிராமணராகப் பிறந்திருந்தால் இவர் சிலை இரஷ்யாவின் மாஸ்கோ வரை நிறுவப்பட்டிருக்கும். மேலும் காந்தி புராணம், கந்த புராணம் பேசும் நபர்களைக் கொண்டாடும் மக்கள் இவரை மிகச் சாதாரணமாக நினைத்து விட்டார்கள். இந்தியாவில் நடந்த மிகப் பெரிய போராட்டங்கள் பத்து என்றால் நான்கில் இவரின் பங்கு மிக அதிகம்.
சென்னையில் நடந்த வேல்ஸ் இளவரசர் வருகை புறக்கணிப்பு, சைமன் குழுப் புறக்கணிப்பு, தொழிலாளர்கள் போராட்டம், CN மில் போராட்டம், நாகை இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் இவர் தலைமையில் தான் நடந்தன. தொழிலாளர் தினம் மே 1 ஆம் தேதி என்று ஆசியாவை முதன்முதலில் சென்னையில் தான் இவரால் கொண்டாடப்பட்டது. வாக்கு வாங்கி இல்லாத ஒரு சமூகத்தில் பிறந்ததால் இவர் பெரிதாகப் போற்றப்படுவதில்லை" என்று கூறுகிறார்.
இவர் தமிழ் மொழியைத் தவிர இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் திறமை பெற்றவர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எப்போதும் இவர் ஏழைகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
காமராசர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியாக இருந்தவர். விவசாயக் காட்சியைத் தொடங்கியவர். ( 1923 ) மேலே நாம் கண்ட இவரது நூல்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக