மக்களுக்குத் துணி அவசியம் எனக் கொண்டாலும் ஒவ்வொரு வரும் தனக்கு வேண்டிய துணிகளை நாளடைவில் அந்தந்தச் சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய துணிகள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது, புதிதாய் வாங்க வேண்டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படும் காலத்தில் கிழிந்த ஆடைகளைக் கூடியவரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப் படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமேயொழிய, புதுப் புதுத் துணி வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற நியதியைக் கைக்கொள்ளக் கூடாது. ஆனால், தீபா வளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத் தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராளமான ஆடைகள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தபோதிலும் – தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும், பண்டிகைக் காலத்தில் புத்தாடை வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்குவேண்டிய துணிகளைத் தீபாவளிச் சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமலி ருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண்டியிருப்பதால், ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப்பட்டு, ஏழைகளுக்கு நஷ்டமுண்டாகிறது. ஆகையால், நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடி யிலும், கஷ்டத்திலும் பட்டு உழலாமலிருக்க வேண்டு மானால், தீபாவளிப் பண்டிகையைக் கைவிடவேண் டியதவசியம். தேச நலத்தை விரும்புகிறவர்களும் – ஏழை மக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுபவர்களும் தங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண் டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும் – தீபாவளியைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனப் பொது மக்களிடையே தீவிரப் பிரச்சாரம் செய்வதிலும் முன்னிற்க வேண்டியது அவசியமாகும். பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடத் தில் இவ்விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பேதமிருக்க வேண்டியதில்லை. (‘குடிஅரசு’, தலையங்கம், 1.11.1931) என்றும்
“பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவுதனை சிறிதுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் சிக்கனம் காட்டுகிறீர்கள்? ஏனெனில், சிலர் பெரியாரைக் கடவுள் மறுப்பாளர் என்று பார்ப்பர். ஆனால், அவர் மேலே கூறிய கருத்துகள் எல்லாம் மிக எதார்த்தமாக .... நடைமுறை வாழ்வில் இருக்கக் கூடிய வாழ்வியலைத் தானே கூறியுள்ளார். யோசித்துப் பார்த்தால் உண்மைகள் புரியும்.

சமூகச் சிந்தனையாளர் பாரதிதாசனும், தனது 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடக நூலின் முகவுரைக் குறிப்புகளில் அசுரர்களும் இராட்சதர்களும் யார் என்பதைத் தருகிறார். மேலும்,
மானம் உணரும் நாள்
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்
சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்
என்று கேட்கும் நாள், மடமைகிழிக்கும்நாள்,
அறிவை ஊட்டும் நாள்
மானம் உணரு நாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீ ரே!
என்று அவர்தம் வழியில் கேள்விகள் கேட்டு விடைகளையும் தருகின்றார்.
சரி, இவையெல்லாம் இருக்கட்டும்! நமக்கு நாமே சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமே!
பூமியைச் சுருட்டினான் என்றால் பூமி உருண்டை தானே! அதை எப்படிச் சுருட்ட முடியும்? அதேபோன்று கடலுக்குள் ஒளிந்து கொண்டான் என்றால் கடல் என்ற ஒன்று தனியாக எப்படி இருக்கும்? பூமி என்னும்பொழுது நிலம், ஆகாயம், கடல், நதி, ஆறு என்று அனைத்தும் ஒன்றாகத் தானே இணைந்து இருக்கும், பூமிக்குள்!
பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்றால், பூமி வேறு கடல் வேறா? பூமி என்பது தமிழ்நாடா.. ஆந்திரா, கேரளா என்று இன்னும் பிற மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அடங்கிய இந்தியாவா.... அல்லது பல்வேறு கண்டங்களும் அவற்றில் அடங்கிய நாடுகளும் இணைந்த மொத்த உலகமா... பூமி என்பது அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து என்றால் இரஷ்யாவில், ஜப்பானில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் என்று இன்ன பிற நாடுகளிலும் கொண்டாடப்படுவதில்லையே? இவ்வளவு ஏன்? அனைத்து நாட்டினராலும் அனைத்து மதத்தினராலும் அனைத்து மொழியினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே?
இன்னும் ஆரியர்கள், திராவிடர்கள், அசுரர்கள், இராக்கதர்கள், படையெடுப்பு, போர், இருக் வேதம் கூறுகின்ற கருத்துகள் முதலான செய்திகளை அறிய விரும்புவோர் பின்வருபவர்களின் நூல்களில் சென்று காணலாம்.
டி.ஸி. ஆலன் : ”இந்திய சரித்திரம்”
பி.டி.சி. சீனிவாசய்யங்கார் : ”இந்திய சரித்திரம், முதற்பாகம்”
ஏ.ஸி. தாஸ் A. H, சரித்திர ஆசிரியர், கல்கத்தா சர்வகலாசாலை : ”ரிக்வேத காலத்து இந்தியா – முதற்பாகம்”
ஸர் வில்லியம் வில்ஸன் ஹண்டர் : ”இந்திய மக்களின் சரித்திரம்”
ராகோஸ : “வேதகால இந்தியா”
ரொமேஷ் சந்தர்தத் : ‘பண்டைய இந்தியாவின் நாகரிக வரலாறு
புலவர் டி. பொன்னம்பலம் பிள்ளை : ”மலபார் - காலாண்டு இதழ். ( ஒரு பார்வை )
டாக்டர் ரமேஷ் சந்த்ர மஜும்தார் A. H., டாக்கா யுனிவர்ஸிட்டி : ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்”
ஜோஷி சந்தர் தத் : ”இந்தியா – அன்று இன்று”
சிந்தனைகள்: இங்கே ;
முடிவுகள் : உங்கள் கைகளில்!
சரியான விடை : காலத்தின் கைகளில்!!!
Good effort and wonderful message
பதிலளிநீக்குஉங்களது கருத்துகளுக்கு நன்றி
பதிலளிநீக்குஇதே போன்று கிறித்தவ, இஸ்லாமியப் பண்டிகைகளுக்கான விளக்கங்களை பேரறிஞர்கள் தெரிவித்திருந்தால் வெளியிடுங்கள் தோழர்.
பதிலளிநீக்கு