தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

தீபாவளி


 தீபாவளி
                                 
    
                                    தீபாவளிப் பண்டிகை கொண்டாடலாமா கூடாதா  என்பது பற்றியெல்லாம் தெரியாது.  ஆனால், பின்வரும் கருத்துகள் சிந்திக்கத்  தூண்டுகின்றன.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சிந்தனைகள் போன்றனவே இவையும்.   முடிவுகள் எட்டப்படாமல் இன்றுவரை  விவாதத்திற்கு உரிய.  தீபாவளியைக் கொண்டாடும் இந்நேரத்தில் இது பற்றிய கருத்துகளைக் காண்போம்.
 தமிழர்கள் தீபாவளியை ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறார்கள்.   புராணத்தின்படி, தீபாவளி என்பது,
                              அசுரன் ஒருவன்,  உலகத்தை ஒரு பாய் போன்று சுருட்டிக் கொண்டு கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.  விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர்.  இதனால், விஷ்ணுவும் பன்றி அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று அந்த அசுரனைக் கொன்று உலகை விரித்தார்.  இவ்வாறு விரிந்த உலகம் பன்றியுடன் ( விஷ்ணு ) கலவி செய்ய விரும்பியது.  இவர்கள் இணைவால் நரகாசுரன் பிறந்தான்.   
                           நரகாசுரனோ தேவர்களை மிகவும் துன்புறுத்தினான்.   இதனால் விஷ்ணு அவனை அழிக்க நினைத்துச் சண்டையிட்டார்.  ஆனால், விஷ்ணுவால் முடியவில்லை.   ஏனெனில்,   நரகாசூரன் தனது தாயின் கையால் மட்டுமே  அல்லாது  வேறுயாராலும் தனக்கு இறப்பு நேரக்கூடாது என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான்.   
                        இதனால் விஷ்ணு,  தன் இரண்டாவது மனைவியான சத்தியபாமாவைத் தேரோட்டியாகக்  கொண்டு  நரகாசுரனுடன் போரிடுகிறார்.  நரகாசுரனின் ஓர் அம்பு  விஷ்ணுவின் நெஞ்சில் பாய்ந்து விடுகிறது.  வீழ்ந்தவர்  போன்று நடிக்கிறார் விஷ்ணு.  இதை அறியாத சத்தியபாமாவோ நரகாசுரனை அழிக்க விஷ்ணுவின் வில்லை எடுத்து எய்துகின்றார்.   அப்பொழுது, உன் கடைசி ஆசை என்ன என்று கேட்க, நரகாசுரனும் ' நான் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்' என்றவாறே உயிர் இழக்கிறான்.   தேவர்கள்  மகிழ்ச்சி அடைகின்றனர்.
                            ஆக,  எல்லாப் புராணங்களும் தேவர்களைக் கொடுமை செய்தவர்களாக அசுரர்களைக்  குறிப்பிடுகின்றன. இதற்காக, கடவுள்கள் அவதாரம் எடுத்துத் தேவர்களைக் காப்பாற்றியதாகவும்  கூறுகின்றன.      

                    அசுரர் என்ற சொல்லின் பொருளைக் காண்போம்.  சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள்.  அசுரர் என்றால் குடிக்காதவர் என்று பொருள்.   ஆரியர்கள் சோமபானம் குடித்ததாக 'இருக்கு வேதம்' கூறுகிறது.  சொல்லப்போனால்,  அதற்கான செடியைக்  கடவுளாகவே வணங்கினர்.  அவிர்ப்பாகம் என்ற உணவில் அதாவது, குதிரை, மாடு, ஆடு, பன்றி முதலான விலங்குகளை வேகவைத்து உண்பதாகும்.   இவர்களைத் தேவர்கள் என்றும் சோமபானம் அருந்தியவர்களை உயர்ந்தவர்கள் என்றும் வழங்கி வந்தனர்.  அதேசமயம்,  முன்னே குறிப்பிட்ட குதிரை, மாடு போன்றவற்றின் மீது  இரக்கம் கொண்டு அவற்றை உண்ணாது விட்டவர்களை அசுரர்கள் என்றும் கூறுகின்றது  புராணங்கள்.

                                 வடநாட்டில்  வாழும்  குஜராத்தியர்கள் போன்றோர்,  இந்த நாளில் புதுக்கணக்கினைத் தொடங்குவர்.  அவர்கள் புத்தாண்டுப் பிறப்பு போன்று கருதிக்  கொண்டாடுவர்.(  நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார் )   இந்தப் பண்டிகைக்கும் தமிழர்க்கும் தமிழ் இலக்கியத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,   மதுரை நாயக்கர்களாலும்  தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து  தமிழ்நாட்டில்  கொண்டாடப்பட்டு வருகிறது.   இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை.  சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை  என்று, " மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு" என்னும் நூலில்  அ. கி. பரந்தாமனார் மிகத் தெளிவாக விளக்குகிறார்.  

    
                  
                       இதே கருத்தினைப் போன்றே,  "தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியது அன்று.  புராண மதத்தைச் சார்ந்தது.  அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் நன்றன்று"  என்று   'தமிழர் சமயம்'  என்னும் நூலில்  பேராசிரியர் கா. சுப்பிரமணியப்  பிள்ளை, தெரிவிக்கிறார்.

                                                                    
            தீபாவளி, சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை.   கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மஹாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையில் தங்கி இருந்த பொது அ ங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்து அருளினார்.  இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.     வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இடுந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.  வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திடுந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார்.  பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபொழுது மஹாவீரர் .இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.   அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை சித்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொQருட்டு அவர் இயற்கை எய்திய நாழி வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.   அது முதல் இந்த விழா  ( தீபம்  :  விளக்கு,  ஆவளி : வரிசை  -  தீபாவளி )  மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற் காலையில் கொண்டாடசப்படுகிறது.  விடியற்காலையில் நீராடிய பின்னர் திரு விளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக  இருக்கிறது.  
                    சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர் கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டி கையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்த மற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.      கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி ( “சமணமும் தமிழும்” பக்கம்: 79-80 )
                                                   
                                 இந்த உண்மை நிகழ்ச்சி மறைக் கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக் களால் கட்டி விடப்பட் டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத் தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவி னர். அந்நிலையிலும் தீபா வளியைக் கொண்டாடி னர். அப்பழக்கம் பிற சம யத்தாரிடையேயும் நாள டைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத் திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும். ( டாக்டர் மா. இராசமாணிக்கனார் ( ‘தமிழர் நாகரிகமும், பண்பாடும்” பக்கம் 33-34)  )          
               
                        'ஆரிய பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி'  என்று தமிழறிஞர் மறைமலை அடிகள் தாம் எழுதிய " தமிழர் மதம்" என்ற நூலில் எழுதியுள்ளார்.  மேலும் அவர், "ஆரியரின்  இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன், இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.  ( வேளாளர் நாகரிகம்  ப. 60 )  என்றும் பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தாமதிக்கு உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாய் இருந்த மற்றொரு தமிழ்   மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்.  தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால், அத்திருநாளுக்கும் கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பதும் தெளியப்படும்.  தீபாவளி என்பது தீப ஆவலி  எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்.  ஆதலால், தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.  ( தமிழர் மதம் : பக். 200 - 201 ).
                            மறைமலை அடிகள்,  தமிழர்;  குறிப்பாக, தமிழ் வெறியர்.  அவர் அப்படித்தான் எழுதுவார் என்று கூறுபவர்களுக்கு,  சுவாமி  விவேகானந்தரின் கூற்று : 
                                                                
                              “காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது ராமருக்கும் அவரைச் சேர்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில்லாதவர் களைக் ‘குரங்கு’ களென்று அழைத்தார்கள். அவர்க ளிலேயே மிகுந்த பலமும் தைரியமும் செல்வாக்கு முடைய வர்களை ‘அரக்கர்க’ளென்று அழைத்தார்கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.” சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்; ”ராமாயணம்” (பக்கம் – 587, 589)
                                                                                                                                                                                                                                                                                                       நரகாசுரனைக் கொன்ற காரணத்தால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை.  ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது.  அப்படியானால் இரணியன், இராவணன், இடும்பன் மகன், சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கு கொண்டாட்டம் இருக்க வேண்டும்.  ஆகவே, தீபாவளிக்கும் நரகாசுரனைக் கொன்றதற்கு தொடர்பு இல்லை என உணர்க" என்று  கிருபானந்த  வாரியார், தமது "விரிவுரை விருந்து" என்னும் நூலில் ( பக்கம் 95 ) குறிப்பிடுகிறார்.
                                                    அபிதான சிந்தாமணி என்னும் அகராதி நூலிலிருந்து   :  இரண்யாட்சதன்  -  இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய் போல் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக ( பன்றி ) உருக்கொண்டு கொம்பினால் இவன் மார்பைப்  பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார்.   (இக்கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது. )  நாரகாசுரன் - வராக ( பன்றி ) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும் பூமிதேவிக்கும் பிறந்த அசுரன்  ( 934 )  சுரர் : பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் ( 705 )  அசுரர் : சுரராகிய தேவர்க்கு ( அதாவது மது அருந்தும் ஆரிய பார்ப்பனருக்கு ) விரோதிகள் ( அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள் ) -  ஆ. சிங்காரவேலு முதலியார்.
                       ஜவஹர்லால் நேரு,  தமிழ் அறிஞர் ந. சி. கந்தையாப்  பிள்ளை, வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர் தெள்ளத் தெளிவாக போன்றோரும் இதே கருத்துகளைக்  கூறுகின்றனர்.  எனவே,  சிறிதளவும் நடைமுறைக்கு ஒத்துவராத,  முரண்பட்டு இருக்கின்ற குறிப்பாகத் தமிழர்களைத்  தாழ்வுபடுத்துகின்ற இந்தத் தீபாவளியைக்  கொண்டாடலாமா என்று இனியாவது யோசிப்போம்.
                                இலக்கிய அறிஞர்களும்  இலக்கியங்களும்  இவ்வாறு கூற,  சிந்தனைச் செல்வர் பெரியார் கூறுவதையும் காண்போம்.   

                                     தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண் டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேகத்  தமிழ் மக்கள் இப் பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும் இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானத்தைக் கைவிட்டு அதனைக் கொண்டாடி வருகிறார்கள்.  ( விடுதலை, 27.10.2005  )
                      "தீபாவளியில் தின்பண்டங்கள் தின்னவேண்டும் என்றிருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாகப் புசித்து வரவேண்டுமேயொழிய – வருஷத்தில் சில தினங்களில் மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு – அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் புசித்தால் நோயடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் ‘காலரா’ என்னும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில்தான் என்பதை அனைவரும் அறிவர்"  என்றும் 
                மக்களுக்குத் துணி அவசியம் எனக் கொண்டாலும் ஒவ்வொரு வரும் தனக்கு வேண்டிய துணிகளை நாளடைவில் அந்தந்தச் சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய துணிகள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது, புதிதாய் வாங்க வேண்டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படும் காலத்தில் கிழிந்த ஆடைகளைக் கூடியவரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப் படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமேயொழிய, புதுப் புதுத் துணி வாங்கித்தான் ஆகவேண்டுமென்ற நியதியைக் கைக்கொள்ளக் கூடாது. ஆனால், தீபா வளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத் தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராளமான ஆடைகள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்தபோதிலும் – தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும், பண்டிகைக் காலத்தில் புத்தாடை வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்குவேண்டிய துணிகளைத் தீபாவளிச் சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமலி ருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண்டியிருப்பதால், ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப்பட்டு, ஏழைகளுக்கு நஷ்டமுண்டாகிறது. ஆகையால், நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடி யிலும், கஷ்டத்திலும் பட்டு உழலாமலிருக்க வேண்டு மானால், தீபாவளிப் பண்டிகையைக் கைவிடவேண் டியதவசியம். தேச நலத்தை விரும்புகிறவர்களும் – ஏழை மக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுபவர்களும் தங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண் டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதிலும் – தீபாவளியைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனப் பொது மக்களிடையே தீவிரப் பிரச்சாரம் செய்வதிலும் முன்னிற்க வேண்டியது அவசியமாகும். பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடத் தில் இவ்விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பேதமிருக்க வேண்டியதில்லை. (‘குடிஅரசு’, தலையங்கம், 1.11.1931)  என்றும் 
                            “பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவுதனை சிறிதுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் சிக்கனம் காட்டுகிறீர்கள்?  ஏனெனில்,  சிலர் பெரியாரைக் கடவுள் மறுப்பாளர் என்று பார்ப்பர்.  ஆனால், அவர் மேலே கூறிய கருத்துகள் எல்லாம் மிக எதார்த்தமாக ....  நடைமுறை வாழ்வில் இருக்கக் கூடிய வாழ்வியலைத் தானே கூறியுள்ளார்.  யோசித்துப் பார்த்தால் உண்மைகள் புரியும். 
                                                        
                                         சமூகச் சிந்தனையாளர் பாரதிதாசனும்,     தனது 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' என்ற நாடக நூலின் முகவுரைக் குறிப்புகளில் அசுரர்களும் இராட்சதர்களும் யார் என்பதைத்   தருகிறார்.    மேலும்,
மானம் உணரும் நாள் 
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா? 
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு? 
 நரகன் என்பவன் நல்லனா? தீயனா? 
 அசுரன் என்றவனை அறைகின்றாரே? 
 இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே? 
 இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது? 
 இன்றும் தமிழரை இராக்கதர் எனச்
சிலர் பன்னு கின்றனர் என்பது பொய்யா? 
 இவைக ளைநாம் எண்ண வேண்டும். 
 எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
 படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா? 
 வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் 
 கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம் 
 ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும் 
 தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
 'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம் 
 நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா? 
 என்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்! 
 உனக்கெது தெரியும் உரைப்பாய் 
என்று கேட்கும் நாள், மடமைகிழிக்கும்நாள்,
அறிவை ஊட்டும் நாள் 
மானம் உணரு நாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத் 
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீ ரே! 
என்று அவர்தம் வழியில் கேள்விகள் கேட்டு விடைகளையும் தருகின்றார்.
                            சரி,  இவையெல்லாம் இருக்கட்டும்!   நமக்கு நாமே சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமே!   
                             பூமியைச் சுருட்டினான் என்றால் பூமி உருண்டை தானே!  அதை எப்படிச் சுருட்ட முடியும்?  அதேபோன்று கடலுக்குள் ஒளிந்து கொண்டான் என்றால் கடல் என்ற ஒன்று தனியாக எப்படி இருக்கும்?  பூமி என்னும்பொழுது நிலம், ஆகாயம்,  கடல், நதி, ஆறு என்று அனைத்தும் ஒன்றாகத் தானே இணைந்து இருக்கும், பூமிக்குள்!
                        பூமியைப்  பாயாகச் சுருட்டினான் என்றால், பூமி வேறு கடல் வேறா?   பூமி என்பது தமிழ்நாடா.. ஆந்திரா, கேரளா என்று இன்னும் பிற மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அடங்கிய இந்தியாவா.... அல்லது பல்வேறு கண்டங்களும் அவற்றில் அடங்கிய நாடுகளும் இணைந்த மொத்த உலகமா... பூமி என்பது அனைத்து நாடுகளும் ஒன்றிணைத்து என்றால் இரஷ்யாவில், ஜப்பானில், இங்கிலாந்தில், அமெரிக்காவில் என்று இன்ன பிற நாடுகளிலும் கொண்டாடப்படுவதில்லையே?  இவ்வளவு  ஏன்?  அனைத்து நாட்டினராலும்  அனைத்து மதத்தினராலும் அனைத்து மொழியினராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே? 
                    இன்னும் ஆரியர்கள்,  திராவிடர்கள்,  அசுரர்கள்,  இராக்கதர்கள்,  படையெடுப்பு,  போர், இருக் வேதம் கூறுகின்ற கருத்துகள் முதலான செய்திகளை அறிய விரும்புவோர் பின்வருபவர்களின் நூல்களில் சென்று காணலாம்.

டி.ஸி. ஆலன் :   ”இந்திய சரித்திரம்” 
பி.டி.சி. சீனிவாசய்யங்கார் : ”இந்திய சரித்திரம், முதற்பாகம்” 
ஏ.ஸி. தாஸ் A. H, சரித்திர ஆசிரியர், கல்கத்தா சர்வகலாசாலை : ”ரிக்வேத காலத்து இந்தியா – முதற்பாகம்” 
ஸர் வில்லியம் வில்ஸன் ஹண்டர் :  ”இந்திய மக்களின் சரித்திரம்” 
ராகோஸ :  “வேதகால இந்தியா”
ரொமேஷ் சந்தர்தத் : ‘பண்டைய இந்தியாவின் நாகரிக வரலாறு 
புலவர் டி. பொன்னம்பலம் பிள்ளை  : ”மலபார் -  காலாண்டு இதழ். ( ஒரு பார்வை )
டாக்டர் ரமேஷ் சந்த்ர மஜும்தார் A. H., டாக்கா யுனிவர்ஸிட்டி : ”பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்” 
ஜோஷி சந்தர் தத் :  ”இந்தியா – அன்று இன்று” 
சிந்தனைகள்:  இங்கே ;  
முடிவுகள் :  உங்கள் கைகளில்!  
சரியான விடை :  காலத்தின் கைகளில்!!! 

கருத்துகள்

  1. இதே போன்று கிறித்தவ, இஸ்லாமியப் பண்டிகைகளுக்கான விளக்கங்களை பேரறிஞர்கள் தெரிவித்திருந்தால் வெளியிடுங்கள் தோழர்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,