சிலப்பதிகாரம் - முக்கியமான பாடல் வரிகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கற்பது தமிழ்
கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு
விளக்க
முறை வினாக்கள்
முக்கியமான
பாடல் வரிகள்
காப்பியங்கள்
காப்பிய இலக்கணம்
தண்டியலங்காரம்
“பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய்
மலைகடல் நாடு, வளநகர் பருவம்
இருசுடர்த் தோற்றமென்று இனையன புனைந்து
நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல்
பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல்
தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல்
புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென்று
இன்னன புனைந்த நன்னடைத் தாகி
மந்திரம் தூது செலவுஇகல் வென்றி
சந்தியின் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி,
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” ( தண்டி. 8 )
கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (
தண்டி. 9 )
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு
"சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
கந்தா மணிமே கலைபுனைந்தான் - நந்தா
வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்
திளையாத குண்டலகே சிக்கும்"
திருத்தணிகையுலா.
சிலப்பதிகாரம்
பதிகம்
"சாத்தனார் தாம் கேட்டதை உரைத்தல்"
குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி ….
"சாத்தனார் அடிகளை வேண்டுதல்"
‘முடி
கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக’ என்றாற்கு
‘அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’என - இளங்கோ அடிகள்
மங்கல வாழ்த்து
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை
போன்று இவ்
அங்கண் உலகு அளித்த லான்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம் திரிதலான்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
“தீது இலா வடமீனின் திறம் இவள்
திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ”
“வான் ஊர் மதியம் சகடு அனைய, வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட
தீவலம் செய்வத் காண்பார் கண் நோன்பு என்னை!”
மனையறம்படுத்தகாதை
“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
அரங்கேற்றுக் காதை
நாட்டிய அரங்கின் அமைப்பு
எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக,
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நால்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து; ஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து -
ஆங்கு
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அரும்தொழில்
அரங்கத்து"
" -- பெருந்தோள் மடந்தை
தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்று இக்
கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்,
ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி
மாதவியின் நாட்டியம்
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப,
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத் தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்,
சீர் இயல் பொலிய, நீர்அல நீங்க,
வாரம் இரண்டும் வரிசையின் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
இசைக்கருவிகள் ஒலித்த முறை
குழல் வழி நின்றது யாழே; யாழ் வழித்
தண்ணுமை நின்றது தகவே: தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே; முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை
தலைக்கோல் அமைதி
பேரிசை மன்னர் பெயர்புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு,
கண்இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய
நாவல்அம் பொலம் தகட்டு இடை நிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து, வழிபடு தலைக்கோல்
புண்ணிய நன்னீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர், மாலை அணிந்து,
நலம்தரு நாளால், பொலம்பூண் ஓடை
அரசு உவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப,
அரைசொடு பட்ட ஐம்பெரும் குழுவும்
தேர்வலம் செய்து, கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்து, முன் வைத்துஆங்கு
மாதவி மன்னனிடம் பரிசு பெறுதல்
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நல்நூல் நன்கு கடைப்பிடித்துக்
காட்டினள் ஆதலின்,
---காவல் வேந்தன்
இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத்
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
ஒரு முறையாகப் பெற்றனள்
இந்திரவிழா
ஊரெடுத்த காதை
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;*
காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,
பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுது இல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;
குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்
ஐம்பெருங் குழுவும், எண்பேர் ஆயமும்
அரச குமரரும் பரத குமரரும்
கவர் பரிப் புரவியர், களிற்றின் தொகுதியர்
இவர்பரித்தேரினர், இயைந்து ஒருங்கு ஈண்டி
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல்,
சீருடன் உருட்டல், தெருட்டல், அள்ளல்,
ஏர் உடைப் பட்டடை, என இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக் கரணத்துப்
பட்ட வகை தன் செவியின் ஓரத்து-
‘ஏவலன்; பின்,பாணி யாது?’ என,
கோவலன் கை யாழ் நீட்ட-அவனும்,
காவிரியை நோக்கினவும், கடல் கானல் வரிப் பாணியும்,
மாதவி-தன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்கும்- மன்
கயல் எழுதி, வில் எழுதி, கார் எழுதி, காமன்
செயல் எழுதி, தீர்த்த முகம் திங்களோ, காணீர்!
திங்களோ, காணீர்-திமில் வாழ்நர் சீறூர்க்கே
அம்
கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே!
ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,
‘மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்’ என,
கலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,
தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,
நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத்
தொடங்கும்மன்.
"காமம் மிக்க கழிபடர் கிளவி"
தம்முடைய தண்ணளியும், தாமும், தம் மான் தேரும்,
எம்மை நினையாது, விட்டாரோ? விட்டு அகல்க;
அம் மென் இணர அடும்புகாள்! அன்னங்காள்!
நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்.
‘கானல் வரி யான் பாட, தான் ஒன்றின்மேல் மனம் வைத்து,
மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்’ என
யாழ்-இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்,
உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை
ஞெகிழ்ந்தனனாய்,
‘பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின், எழுதும்’ என்று உடன் எழாது,
ஏவலாளர் உடன் சூழ்தர, கோவலன்-தான் போன பின்னர்
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்,
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்’ என,
எண்-எண் கலையும் இசைந்து உடன் போக,
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதி;
பசந்த மேனியள் படர் உறு மாலையின்,
வசந்தமாலையை, ‘வருக’ எனக் கூஉய்,
‘தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து, கொணர்க ஈங்கு’ என-
‘மாலை வாரார் ஆயினும், மாண்-இழை!
காலை காண்குவாம்’ என, கையறு நெஞ்சமொடு
வேனிற் காதை
நெடியோன் குன்றமும் தொடிதோள் பௌவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்
நாடுகாண் காதை
கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப —
காடுகாண் காதை
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
வேட்டுவ வரி
இவளோ கொங்கச் செல்வி; குடமலையாட்டி;
தென்றமிழ்ப் பாவை; செய்தவக் கொழுந்து;
ஒருமாமணி ஆய், உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப —
புறஞ்சேரி இறுத்த காதை
கோள்வல் உளியமும் கொடும் புற்று அகழா
வால்வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா –
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு —
அருந்தெறல் கடவுள் அகன் பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பின் பல் இயல் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்து
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக் கொடி —
‘புனல்யாறு அன்று; இது பூம் புனல்யாறு’
ஊர்காண் காதை
நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில்
கொண்டோர் உறூவும் கொள்ளாத் துன்பம்
அடைக்கலக் காதை
நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலம் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து
ஞான நன்னெறி நல்வரம்பு ஆகியோன்
தானம் கொள்ளும் தகைமையின் வருவோன்
தளர்ந்த நடையின் தண்டுகால் ஊன்றி
வளைந்த யாக்கை மறையோன்
கற்புக் கடம் பூண்ட இத் தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;
வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது;
நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது;
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு
என்னொடு போந்த இளங்கொடி நங்கை – தன்
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்;
கொலைக்களக் காதை
“அறவோர்க்களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும்,
தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”
ஆய்ச்சியர் குரவை
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?”
பெரியவனை மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் – தம் கண்ணென்ன கண்ணே?
மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக்
கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!
“வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கி
கடல் வண்ணன்! பண்டொரு நாள் கடல் வயிறு
கலக்கினையே;
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண்கை!
மலர்க்கமல உந்தியாய்! மாயமோ மருட்கைத்தே!
வழக்குரை காதை
வாயிலோயே! வாயிலோயே!
அறிவு அறைபோகிய பொறி அறு நெஞ்சத்து,
இறை முறை பிழைத்தோன் வாயிலோயே!
“இணை அரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்,
கணவனை இழந்தாள், கடைஅகத்தாள்” என்று
அறிவிப்பாயே! அறிவிப்பாயே!’ என
“……பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே;
கணவனை இழந்தாள் கடைஅகத்தாளே’
தேரா மன்னா ! செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடு நா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடதான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர் புகார் என்பதியே— அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
"மன்னவன் உரைத்த விடை"
‘பெண் அணங்கே!
கள்வனைக் கோறல் கடுங் கோல் அன்று;
வெள் வேல் கொற்றம்-காண்’ என- ஒள்-இழை,
"கண்ணகி தன் சிலம்பின் தன்மையை அறிவித்தல்"
‘நல் திறம் படராக் கொற்கை வேந்தே!
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே’ என-
அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றம் ஆம் என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே
தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன்,
‘பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட
யனோ அரசன்? யானே கள்வன்;
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி,
‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’ என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே,
வஞ்சின மாலை
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க —
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்.
குன்றக் குரவை
மலை வேங்கை நறு நிழலின், வள்ளி
போல்வீர்! மனம் நடுங்க,
முலை இழந்து வந்து நின்றீர்; யாவிரோ?’ என-
முனியாதே, ‘மண
மதுரையோடு அரசு கேடுற
வல் வினை வந்து உருத்தகாலை, கணவனை
அங்கு இழந்து போந்த
கடு வினையேன் யான்’ என்றாள்.
இணை வளைக் கை எதிர் கூப்பி,
நின்ற எல்லையுள், வானவரும்
நெடு மாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்ப,
கொழுநனொடு கொண்டு போயினார்;
இவள் போலும் நம் குலக்கு ஓர்
இருந் தெய்வம் இல்லை; ஆதலின்,
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
தெய்வம் கொள்ளுமின், சிறுகுடியீரே!
நடுகல் காதை
‘அறக்களத்து அந்தணர், ஆசான், பெருங்கணி,
சிறப்புடைக் கம்மியர்-தம்மொடும் சென்று;
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து,
இமையவர் உறையும் இமையச் செவ் வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசி,
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து,
வித்தகர் இயற்றிய, விளங்கிய கோலத்து,
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி,
பூப் பலி செய்து, காப்புக் கடை நிறுத்தி,
வேள்வியும் விழாவும் நாள்தொறும் வகுத்து,
கடவுள்-மங்கலம் செய்க’ என ஏவினன்-
வடதிசை வணக்கிய மன்னவர் ஏறு-என்.
“ . . . . மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்.
"நூலை
அடிகள் வகுத்த வகை"
அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்,
அந்திமாலைச் சிறப்புச்செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக்
கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து
நாடு காண் காதையும், காடுகாண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை
அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத் திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்கு உரை காதையும், வஞ்சின மாலையும்
அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டு அலர் கோதையர்
குன்றக் குரவையும்-என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு
இவ் ஆறு-ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்.
இது-பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு-என்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
அருமையான தொகுப்பு
பதிலளிநீக்கு