எங்கள் தந்தையார் முனைவர் திரு அ. விநாயகமூர்த்தி அவர்களின் மறைவின்போது . . . .
அப்பா . . . .!
என் காலத்துத்
தமிழ் நாயகர்களுக்கெல்லாம்
விநாயகராய் ஒளிர்ந்தவரே!
இலக்கியம் கண்டு
அதற்கு இலக்கணம் இயம்பி என்பார்கள்;
அது போன்றே
வாழ்வின் இலக்கணத்தைச
சிங்க நோக்கால் உணர்ந்ததுடன்
மூலத்தில் ஆரம்பித்துத்
துறவில் முடித்த சான்றோரே !
பரிசினை எழுதிப
பரிசு பெற்ற பாவலரே!
நாலு சுவருக்குள் பிறந்தது போலவே
நாலு சுவருக்குள்ளே
வாழ்க்கையை முடித்த விசித்திரரே!
'அ. வி.' யாய் இருந்து
ஆவியான ஆன்றோரே!
பேரப் பிள்ளைகளையெல்லாம்
பாரமாய்க் கருதாமல்
அவர்தம் நெஞ்சில்
ஆரமாய் நின்றோரே!
சூழ்நிலை வட்டத்திற்குள் சிக்காமல்
சிந்தனை வெளியிலேயே
சுற்றிச் சிறகடித்த தாங்கள்
இன்று எப்படி ஒரு
க (ச)ட்டத்திற்குள்
அடங்கினீர்கள்??!!
(மிக மிக விந்தை அப்பா . . .இது)
கலைஞரின் தமிழ்க்கலையழகரே!
துரைமுருகனின் அண்ணன் விநாயகரே!
உந்தன் தமிழைக்
காட்டுப்பாடியில் ஆரம்பித்துக்
கோவையில் முடித்த
கற்பூர அறிஞரே!
பொற்கொடி (கனகவல்லி) யின் கொழுகொம்பே!
அம்முண்டியில் அரும்பாகி,
காட்டுப்பாடியில் மொட்டாகி,
சென்னையில் பூவாகி,
மதுரையில் மணம்வீசி,
மீண்டும்
காட்டுப்பாடியிலேயே வாடிய
எங்கள் வாடாமலரே! அப்பா!
மூலபாட ஆய்வாளரே
மதுரை வீரனின் தளபதியே
ஐவரின் சுடர்விளக்கே
காட்சியும் கருத்துமாய் இருந்தோரே
தமிழ்ச்சுடர் மணியே
கவிதையின் கலையழகரே
சிந்தனை மலரே
சைவத்தின் நெறியாளரே
சித்தாந்தமும் பக்தியும் கலந்தோரே
சைவ சமயத் தேனே
திருக்குறளின் வணிகரே
விளம்பரம் விரும்பா ஆசிரியரே
பதிப்புகளின் கலையரசே
தகவல் தொடர்புக் கலைஞரே - இன்று
எங்களில் எவரிடமும்
தகவல் சொல்லாமல் சென்றிட்ட
காயாம்பூ நறுமணமே
நன்மகனாய் அவதரித்து
நல்ல சகோதரனாய்
நல்ல கணவராய்
நல்ல தந்தையாய்
நல்ல மாமனாராய்
வாழ்ந்த 'இல்லறத துறவியே'
இவை மட்டுமா . . . .?
இறுதியில்கூட
'நூலகமே எனது வாழ்க்கைத்துணை' என்று
நூல்களிலேயே நூலாய் இழைந்து
'நூலாகி ' நின்று நிலைத்தவரே
எட்டுக்குள்ளே
வாழ்க்கையை முடித்த
எழுத்தாளரே
ஆம்! நீவிர்
உதித்த நாளும் எட்டு ( 15. 11. 1935 )
உதிர்ந்த நாளும் எட்டு ( 06. 08. 2010 )
எங்கள் அம்மாவிடம்,
நாம்
ஓருயிர்தான்
ஈருடல் அல்ல என்று வாழ்ந்தவரே
முத்தமிழைக் கற்ற வித்தகரே
நான்(கு) மக்களைப் பெற்று
ஐவர்க்கு விருப்பமானவரே
ஆறு பெயரப் பிள்ளைகளைப் பெற்று
ஏழு பிறவிக்கும் பெருமை சேர்த்திட்ட கல்விக்கடலே
எண்வகை வனப்புடன்
ஒன்பான் சுவையோடு வாழ்ந்தது
பத்து(ம் ) - போதும் என்று
உணர்ந்திட்டு ....எங்களுக்கும்
உணர்த்திட்ட
'விதி' ( விநாயகமூர்த்தி ) வல்லானே
எங்கள் அப்பாவே!
அப்புப்பிள்ளை - சுந்தரம்மாளின்
விநாயகப் பிள்ளையே
நான்மக்களைப் பெற்றபின்பும்கூட
( இ ) யந்திரமாய் வாழாமல்
கலைகள் பல கற்றுக்கொடுத்து
மூடநம்பிக்கைகள் நீக்கி, இச்
சீ ( ர் ) மிகு உலகில் எங்களையும் வாழ
வி (த்)திட்ட தலைவரே! அப்பாவே!
திசை எட்டிலும் . . .
வணங்குகிறோம் உங்களையே!
எங்களை ஆசீர்வதியுங்கள் அப்பா!!!
வணக்கம் அத்தை.
பதிலளிநீக்குதாத்தாவை மிகவும் அருமையாக போற்றியிருந்தீர் அத்தை.
தாத்தாவின்மீது தாங்கள் கொண்டுள்ள பக்தி, பாசம், மரியாதை முதலியவற்றை என்னால் நன்கு உணரமுடிந்தது அத்தை.
வாழ்த்துக்கள் அத்தை. தொடரட்டும் உங்கள் நற்பணி!
மிகவும் நன்றிமா கண்ணு! 👍
நீக்கு