தேசிய இயக்கப் பின்னணியில் சுரதா - தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு

  தமிழ் அறிஞர் & அவர்தம் தமிழ்த்தொண்டு சுரதா §   ஊர்                           - பழையனூர் -சிக்கல் , தஞ்சை மாவட்டம் §   காலம்                      - 23 நவம்பர் 1921 – 20 சூன் 2006 §   பெற்றோர்              - செண்பகம் அம்மையார்   - திருவேங்கடம் §   இயற்பெயர்           - இராசகோபாலன் §   பெயர் மாற்றம் -   கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட ஈடுபாட்டால் அவரது இயற்பெயரான சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தாசன் இணைத்துத் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்று அமைத்துக் கொண்டார். §   சிறப்புப் பெயர் - ' உவமைக்கவிஞர் ' - எழுத்தாளர் ஜெகசிற்பி வழங்கினார் - தமது...

நேர்காணல்


                             குழந்தை எழுத்தாளர் திரு. ஆயிஷா நடராஜன்
                                                        தமிழச்சி வி. அநுசூயா
                                                                   
                                                                       நேர்காணல்                                                                                                                                       
குழந்தை எழுத்தாளர் திரு. ஆயிஷா நடராசன்,  இவரது எழுத்துக்களே எனக்கு அறிமுகம்.  பலமுறை இவரைச் சந்திக்க வாய்ப்புகள் கிடைத்தபோதும் நேராமல் போயின.  சில ஆண்டுகளுக்குப் பின்பே, என் ஆய்வின் வாயிலாக இவரைச் சந்திக்க நேர்ந்தது. இவர், தனது ‘விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதை’க்காக 2014இல் ‘பால சாகித்திய விருது’ பெற்றவர். 2008 இல் சிறந்த ஆசிரியர்க்கான ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதி’னையும் பெற்றவர். இவர் எழுதிய ‘ஆயிஷா’ என்னும் குறுநாவல், கல்வி உலகில் பேசப்பட்டமையால் ஆயிஷா நடராசன் என்றே அழைக்கப்படுகிறார்.  இவருடன் உரையாடியபோது  கிடைத்த தகவல் முத்துக்களை, இனி உங்களிடம் வழங்குகிறேன் .

ஆய்வாளர் : தாங்கள் இப்பள்ளியின் முதல்வராக இருக்கிறீர்கள்.  ஆசிரியர்த்தொழில் பற்றித் தங்களது கருத்து?
ஆயிஷா... :  குழந்தைகளுக்கு அறிவியல் கருத்துகள் கூறவேண்டும். அறிவியலைக் காட்சிப்படுத்துதல், புரியவைத்தல், குழந்தைகளுடனேயே இருக்க விரும்பி ஆசிரியத் தொழிலுக்கு வந்தேன். தொடக்கத்தில் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் LKG ஆசிரியர் ஆனேன். 10, 12 வருடங்கள் கழித்து முதல்வராக ஆனேன்.  தற்போது இங்கு பணியாற்றுகிறேன்.

ஆய்வாளர் : ஆசிரியர் துறை யில் இருக்கும் தாங்கள் ஓர் ஆசிரியர்க்கான தகுதிகள்  என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
ஆயிஷா... : நல்ல கே ள்வி! TEACHER என்பதற்கு நான் கருதுவன:
T - Tolerance  - சகிப்புத்தன்மை.
E - Example for everyone  - உதாரணமாய் இருத்தல்.
A - Ability to find child’s mind  - குழந்தை யின் மனத்தை அறிபவர்.
C - Character Builder  - பண்புகளை வளர்ப்பவர்.
H - Humanity பண்புகளுடன் வாழ்பவர்.
E - Enthusiastics  - சிரித்து உற்சாகப்படுத்துபவர்.
R – Respectable -  ஓர் ஆசிரியர், இவை அனைத்திற்கும் பொறுப்பானவராக இருப்பவர். 
         மேலும், டாக்டர் இராதாகிருஷ்ணன்  அவர்கள், ‘உயர்ந்த கட்டடம், மின்வசதி, அழகான வகுப்பறை , தொழில்நுட்ப வசதி இவற்றை விட ஓர் உண்மை யான ஆசிரியர் இருந்தால், கல்வி எளிதில் நடைபெற ச் சாத்தியமாகும்’ என்பார் . அதேபோன்று ஆசிரியராகப் பணிக்குச் செல்வதை விட ஆசிரியராக வாழ்வதே சிறந்த ஆசிரியர்க்கான தகுதியாகும் என்று நான் கருதுகிறேன்.



ஆய்வாளர் :  “ஆயிஷா” என்பவள் தங்களது உண்மையான மாணவியா? கற்பனைப் பாத்திரமா? அல்லது அதுபோன்று நிகழ்வு ஏதேனும் தங்களைப் பாதித்ததா?
ஆயிஷா... : இல்லை . . . .  இல்லை! ஆயிஷா என்பவள் கற்பனைப்
பாத்திரமே. திண்டுக்கல்லில் ஒரு கல்லூரி மாணவர் விஞ்ஞா னி ஆகணும்னு ஆசை . பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி, ஒரு மருந்தையும் கண் டுபிடித்தா ன். பாம்புகளை வீட்டுக்கு
வரவழை த்து ஊசிமூலம் அந்த மருந்தினைத் தனக்கு இட்டுச் ‘சுயசோதனை’யாக முயற்சி செய்தான். அந்த நிகழ்வு என் மனதைப் பாதித்தது. “ஆசிரியர் அடிப்பதை நிறுத்தப் போவதில்லை; நமக்கும் வலிக்கக்கூடாது” என்று ஆயிஷா முடிவெடுத்து கதையில் இடம்பெறும் மருந்தைக் குடிக்கிறாள்; இறக்கிறாள்.  இது திணிக்கப்பட்ட முடிவு அன்று. ஆயிஷாவைக் கொல்லாமல் விட்டிருந்தால் கல்வியின் மீதான அந்த வதையும் வலியும் எவர்க்கும் புரிந்திருக்காது.

ஆய்வாளர் : சுட்டி விகடனில் ‘வீரவணக்கம் வெற்றிக் கடிதம்’ எழுதி வருகிறீர்கள். இதனை எழுதும் எண்ணம் தங்களுக்கு  எவ்வாறு உதயமாயிற்று?
ஆயிஷா... : கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தோடு  தொடர்புடை ய சிறுவன் கந்தக் குமார்தான் தமிழ்நாட்டில் கடைசியாக வாங்கப்பட்ட தேசிய விருதுக்கான சம்பவம்.  ஆமூர் என்ற இடத்தில் ஆளில்லாத இரயில்வே தண்டவாளத்தை இச்சிறுவன் உட்பட சுமார் 11 சிறுவர்கள் உள்ள பள்ளிவாகனம் கடக்க முயல்கிறது.  தொலைவில் இரயில் வந்துகொண்டிருக்கிறது. வாகனம் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. ஓட்டுநர் இறங்கித் தப்பியோடிவிட்டான். வண்டியில  சிறுவர்கள் கதறுகிறார்கள். உடனே, கந்தக் குமார் தன் உயிரையும்  பொருட்படுத்தாமல், ஒவ்வொரு குழந்தையாக ஐந்து சிறுவர்களை வேகமாகக் காப்பாற்றுகிறான். மீண்டும் ஒரு சிறுவனைக் காப்பாற்றச் சென்றபோது, அதற்குள் இரயில் வந்துவிட்டமையால், இவன் இரயிலில் சிக்கி இறந்துவிட்டான். இதேபோன்று, பல வீரச்செயல்கள் ஆற்றிய சிறுவர்களைப் பற்றி இதனை எழுதத் தொடங்கினேன். அதேசமயம், குழந்தைகளுக்குக் கடிதம் போன்று எழுதுவதால், இன்றைய குழந்தைகளும் “கடிதம் என்றால் என்ன , அதன் அமைப்பு” போன்றவற்றை அறிய முடிகிறது.

ஆய்வாளர் : இத்தொடர் பற்றிய விமர்சனம் தங்களுக்குக் கிடைக்கிறதா, ஐயா?
ஆயிஷா... : பாராட்டுகள் குவிகின்றன. அசாமில் கெளகாத்தியின் ஒரு மாவட்ட ஆட்சியர்,  ( நம் தமிழ்நாட்டவர் ) சுட்டி விகடன் வாங்கியிருந்திருக்கிறார். அதில் அவர்களுடைய ஊர்ப்பையன் பற்றிய நிகழ்வை  வீரவணக்கத்தில் படித்தவர். அச்சிறுவனின் ஊருக்கே சென்று, ‘இங்கே பார், உன்னைப் பற்றிய கட்டுரை இதில் வந்திருக்கிறது’ என்று கூறியுள்ளார் . பின்பு என்னைத் தொடர்பு கொண்டு, ‘இந்த விஷயம் உங்கள் மூலமாக எனக்குத் தெரிய வந்தது; மிக்க மகிழ்ச்சி’ என்று தெரிவித்தார் .

ஆய்வாளர் : குழந்தை இலக்கியங்களுக்கான கருத்துகளை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?
ஆயிஷா... : குழந்தைகளிடமிருந்துதான். . . . தெரிந்த உலகத்திலிருந்துதான் தெரியாத உலகத்திற்குக் குழந்தைகளைக் கூட்டிச் செல்ல வேண்டும். குழந்தைகளுடன் உட்கார்ந்து குழந்தைகளுடன் பேசிப் பழகி, கருத்துகளைப்  பெறுகிறேன். புத்தகத்தில் மயிலிறகு வை த்து, அது குட்டிப் போடும் என்று வைக்கிறார்கள் என்றால், அய்யய்ய … என்று முகம் சுளிக்கும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது.  நாம் உடன் இருந்து, “அது குட்டிப் போடுதா” என்று பார்க்க வேண் டும். அப்போதுதான் குழந்தைகளின் மனநிலை நமக்குப் புரியும்.
ஆய்வாளர் : குழந்தைகளுக்கான இலக்கியங்கள் பலவற்றைப்  படைக்கிறீர்கள். இது எதனால் சாத்தியமாயிற்று?
ஆயிஷா... : எனது வாசிப்புப் பழக்கம், படித்த நூல்கள் ஆகியவற்றால் இது சாத்தியமாயிற்று.

ஆய்வாளர் : இது பற்றிச் சற்றுக் கூறுங்கள், ஐயா.
ஆயிஷா... : எனது சிறுவயதில் எனது தந்தையார் ஆனந்த விகட ன், கல்கி என 12 புத்தகஙகளை வீட்டில் வாங்கித் தந்தார் . அவற்றை ஒன்று விடாமல், ஒரு பக்கம் விடாமல் வாசிப்பேன். 9ஆம் வகுப்பு பயிலும்போதே பொன்னியின் செல்வன்” படித்து முடித்துவிட்டேன். இவற்றைத் தவிர அறிவியல் புனைகதைகள், ஆர். கே . நாராயணன் முதலானோரின் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றைப் படிப்பேன். இந்த வாசிப்புப் பழக்கமே என் வாழ்க்கையைச் செதுக்கியது.

ஆய்வாளர் : சிறுவர்களுக்காக எழுதி வருவது குறித்து தங்கள் கருத்து?
ஆயிஷா... : எனக்கென்று வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கிற கருத்துகளை என்னால் வழங்கமுடியும்.  இப்படித்தான் எழுதவேண்டும் என்று வரையறுத்துப் பிடிவாதமாக எழுதிவருகிறேன்.
என்னுடைய கதையில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள சிறுவர்களே இடம்பெறுவர். ஏனெனில், இந்தியாவை வடிவமைக்க வேண்டுமென்றால், இவ்வகைச் சிறுவர்களிடத்துச் சொன்னால்தான் சரிப்படும். இந்த வயதைத் தாண்டியவர்களிடம்  சொன்னால் கருத்துகள் எடுபடாது.

ஆய்வாளர் : சிறுவர்களிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகச் செய்திகள் வருகின்றனவே , இதுபற்றித் தங்கள் கருத்து?
ஆயிஷா... : இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்; இது திட்டமிட்டுப் பரப்பப்படுகிற  பொய். "என் குழந்தைக ள் தமிழே படிப்பதில்லை என்று பொய் கூறும் பெற்றோர்கள், இதன்மூலம் ஆங்கிலத்தை
வளர்க்கிறார்கள். பெற்றோர்கள் படித்தால்தானே குழந்தைகளும் படிப்பார்கள். தினமலர்  ஒன்றரை கோடி பிரதிகள் விற்பனை ; தினத்தந்தி நம்பர் ஒன் இடத்தில் என்று பார்க்கிறோம்.  சுட்டி விகடன் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிக அளவில் விற்பனை; எனது விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் மூன்றே மாதத்தில் 38 ஆயிரம் பிரதிகள் விற்கப்பட்டன. அப்படியானால், குழந்தைகள் படிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.  எனவே , வாசிப்பு குறையவில்லை , நம்புங்கள்.

ஆய்வாளர் : சிறுவர் பத்திரிகைகளின் வருகை குறைவாக உள்ளதே . இதனை அதிகரிக்கும் வழிகள் பற்றிக் கூறுங்கள், ஐயா.
ஆயிஷா... : தினமணி, தினமலர் , தி இந்து முதலான நாளிதழ்களில் சிறுவர்க்கான பகுதிகள் உள்ளன .  இப்பகுதியை அவ்வப்போது வழங்காமல், சிறுவர் இதழாக உருவாக்கி, 15 நாளுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை என வெளியிடலாம்.  அதேபோன்று ஆங்கிலத்தில் வயதுப் பிரிவுக்கு ஏற்றாற்போல் மிகுதியான பத்திரிகைகள்  வெளியாகின்றன. இதனைப் பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு வாங்கித் தரவேண்டும். நிதிப்பிரச்சனை  எனின் 50% பள்ளி, 50% மாணவர்கள் என்றும் வாங்கி அவர்களுக்கு வழங்கலாம். அல்லது இரண்டு விளம்பரதாரர்களைக் கொண்டு சிறுவர் இதழ்களை வழங்கலாம். சொல்லப் போனால் , அரசாங்கமே இதுபோன்ற இதழ்களை பள்ளிகளுக்குத் தாமாக முன்வந்து வாங்கித் தர வேண்டும். இதனால் மாணவர்களின் சிந்தனை  ஊறும்; சிறுவர் எழுத்தாளர்கள் தோன்ற  வாய்ப்பு ஏற்படும். இயல்பாக சிறுவர் பத்திரிகைகள் அதிகரிக்கும்.

ஆய்வாளர் : பரவலாக நடைபெ றுகின்ற புத்தகக் கண்காட்சிகள் பற்றித் தங்களது கருத்து?
ஆயிஷா... : இப்போதெல்லாம் புத்தகக் கண்காட்சிகள்  அனைத்து ஊர்களிலும் நடைபெறுகின்றன. அங்கு வருபவர்களின் எண்ணிக்கை யும் அதிகமாக உள்ளது. ஆனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெரிய அப்பளம், இராட்டினம் ஆகியவற்றில்தான் செலவு செய்கின்றனர் . அப்படியே மீறிப் புத்தகஙகள் வாங்கித் தந்தா லும், IAS ஆவது எப்ப டி? G.K. போன்றவற்றையே வாங்கித் தருகின்றனர் . “இதெல்லாம் படி, பின்னாளில் பயன்படும்” என்கிறார்கள். அக்குழந்தையே புத்தகஙகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு தரவேண் டும். ஓவியம், வண்ணம் தீட்டுதல் முதலானவற்றைப் பிள்ளைகள் தெரிந்தெடுத்தால், பெற்றோர் மறுக்காமல் வாங்கித் தரவேண் டும். அல்லது தரமான இலக்கிய நூல்கள், அறிவியல், வரலாறு சார்ந்த நூல்களை வாங்கித் தந்து அவற்றைப் படிக்கத் தூண்டுதல் வேண்டும். அப்போதுதான் சிறப்பான எதிர்காலச் சந்ததி உருவாகும்.

ஆய்வாளர் : தங்களின் பணிகளின் ஊடே , இதுவரை தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா!
ஆயிஷா... : மிக்க நன்றி அம்மா !
         தனது பணிகளுக்கு இடையில் சிறுவர்களின் கல்வி,  எதிர்காலம், சிந்தனை, மாணவச் சமூகம், சிறுவர்களுக்காக அனைவரும் செய்ய வேண்டுவன என்று எத்தகைய செய்திகள் குறித்தும் தனது தெளிவான பல கருத்துக்களை வழங்கினார். இப்படியாக, அவருடனான நேர்காணல் இனிமையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.  
.
.
.
.
.
தமிழச்சி வி. அநுசூயா 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

PGTRB Psychology new syllabus - 2025 in Tamil & English

சிற்றிலக்கியம் : பள்ளு இலக்கியம் / பள்ளு நூல்கள் முழுத் தகவல்கள்

சிலப்பதிகாரம் - காதைகள் சுருக்கம், சிலப்பதிகாரம் நூல் அமைப்பு,