சுப்பிரமணிய பாரதியார் பாடிய
குயில் பாட்டு
கதைச் சுருக்கம்
புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு வேடர் வராத ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது.
"காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்"
என்று துள்ளும் இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது, அந்தப் பெண் குயில்.
கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல் பிறந்து விட்டது. அந்த நேரத்தில் மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. காதலுக்குரிய தனிமை போய்விட்ட சூழலில் குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு மறவாமல் வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது.
கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் "காதல் காதல் காதல்", என்ற முன்னாள் இசைத்த அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன.
இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக் காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. 'காதல் காதல் காதல்’ என்ற அதே பாட்டில் சோலை முழுவதையும் குயில் சொக்க வைத்துக் கொண்டிருந்தது.
கவிஞன் சினம் பெருக வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன.
நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் வஞ்சகப் பொய்மையை எடுத்துக் கூறுகின்றான். குயில் கண்ணில் நீர் சிந்தத் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. "சேரநாட்டின் மலைச் சாரலில் பிறந்த சின்னக்குயிலி என்பாள், தன் மாமன் மகன் மாடன் என்பவனையும் தனக்காக மணம் நிச்சயிக்கப்பட்ட நெட்டைக் குரங்கன் என்பவனையும் புறக்கணித்து விட்டு மலைச்சாரலுக்கு வரும் சேர இளவரசன்பால் மையல் கொள்கிறாள்.
மாடனும் குரங்கனும் சேர இளவலை வெட்டி வீழ்த்துகின்றனர். மறுபிறப்பில் சந்திப்பதாகக் கூறி இளவரசன் விழி மூடுகின்றான். மறு பிறப்பிலும் காதலர் சேர முடியாதவாறு மாடனும் குரங்கனும் இடையூறு செய்கின்றனர். குயிலியைக் குயிலாக மாற்றி விடுகின்றனர்".
இந்தக் கதையைப் பொதிகை மலை முனிவர் குயிலிடம் கூறி விட்டு அதன் சாபம் தொண்டை நாட்டு மாஞ்சோலையில் தீரும் என்றும் கூறுகிறார்.
குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிவு பெறுகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே அழகு நிரம்பிய பெண் தோன்றுகிறாள். அதேசமயம் அந்தப் பெண், சோலை ஆகியன எல்லாம் மறைந்து விடக் கவிஞன் சுவடி, எழுதுகோல், பத்திரிகை, பழம்பாய் ஆகியவை சூழ்ந்த தன் வீட்டில் இருப்பதைக் கண்டான்.
பாட்டின் இறுதியில் பாரதியார் ஒரு வினாவை எழுப்புகின்றார்.
"ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்
வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ!"
இவ்வரிகளில் வேதாந்தக் கருத்து மற்றும் சைவ சித்தாந்த உள்ளுறை இருப்பதாகவும் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். குயில், மாடு, குரங்கு என்பவற்றை மனிதனின் மும்மலக் குறியீடுகளாகக் கருதி வேதாந்தக் கருத்து இருக்கிறது என்றே கூறுவார், தமிழ் உலகில்!
பாரதியார் பாடிய குயில் பாட்டின் வரிகளைக் காண, கீழே உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக