விநாயகர் அகவல்
( பொருளுடன் )
இந்நூலை, 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் இயற்றினார். இதில், விநாயகப் பெருமானின் அருள் தன்மையும் மூச்சுப் பயிற்சிகளும் கூறப்பட்டுள்ளன.
1. சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாத சிலம்பு பல இசை பாடப்
பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்த்தழகு எறிப்பப்
பொருள் : குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற பாதத்தில் அணிந்துள்ள சிலம்பானது, பலவிதமாக இசைக்கவும் அழகிய இடையில் பொன் அரைஞாணும் வெண்பட்டாடையும் அழகாக விளங்கவும்
2. பேழை வயிறும் பெரும்பாரக்கோரும், வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும், நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
பொருள் : பெரிய வயிறும் பெரிய உறுதியான தந்தமும் யானை முகமும் அந்த நெற்றியில் திகழும் குங்குமம் ஐந்து கரங்களும் அந்த இரண்டு கரங்களில் அங்குசமும் பாசம் ஆயுதங்களும் நீல நிற மேனியும் ( என் நெஞ்சில் இருக்கின்ற )
3. நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்,
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும், திரண்ட முப்புரிநூல் திகழ் ஒளி மார்பும்
பொருள் : தொங்குகின்ற துதிக்கையும் நான்கு பெரிய தோள்களும் மூன்று கண்களும் மும்மதங்கள் கசிந்ததனால் ஏற்பட்ட அடையாளங்களும் இரண்டு சேவைகளும் ஒளிவீசுகின்ற பொன்னால் ஆன கிரீடமும் மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலும் அணிந்த ஒளி வீசுகின்ற மார்பும்
4. சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே,
முப்பழம் நுகரும் மூஷிக வாகன! இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டி
பொருள் : சொற்களால் விளக்கிக் கூற இயலாத தூய மெய்ஞானமாகிய அற்புத நிலையில் நிலைத்து நின்று கற்பக மரத்தைப் போன்றே கொடுக்கின்ற யானை முகத்தோனே, முக்கனிகளை ( மா, பலா, வாழை ஆகிய ) விரும்பி உண்பவனே, பெருச்சாளியை வாகனமாகக் கொண்டவனே, இப்பொழுதே என்னை ஆட்கொள்வதற்காக
5. தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி, மாயப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து,
தொடர்ந்து வரும் பிறவிகளுக்குக் காரணமான என் அறியாமையை, தாயைப் போன்றே என்முன் தோன்றி நீக்கினாய். திருந்திய முதன்மையானதாகிய ஐந்து எழுத்து மந்திரமான பிரணவத்தின் பொருளை எனக்குத் தெளிவாக விளங்கும்படி என் உள்ளத்தில் பதியச் செய்தாய்.
6. குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என,
வாடா வகைதான், மகிழ்ந்தெனக்கருளிக் கோடா யுதத்தால் கொடு வினை களைந்தே
பொருள் : பூமியில் குருவின் உருவத்தில் தோன்றி நிலையான பொருள் எது என்பதனை உணர்த்தினாய். உன் கடைக்கண் பார்வையில் கொடிய வினைகளை அகற்றி வாடாமல் அதாவது கவலையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழும் வழியை எனக்கு அருளினாய்.
7. உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில், தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணை இனிதெனக் கருளிக்
பொருள் : உவட்டாத உபதேசத்தை, ஐம்புலன்களையும் அடக்குகின்ற தெவிட்டாத தெளிவான ஞான இன்பத்தை என் செவியில் அருளினாய். ( கூறினாய் ).
8. கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து,
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி, மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.
பொருள் : மெய்வாய்கண்மூக்குசெவி ஆகிய ஐம்புலன்களைக் கடந்து நிற்கும் உண்மையை எனக்கு அறிவித்து நல்வினைதீவினை ஆகிய இருவினைகளையும் அறுத்து அறியாமை என்னும் இருளையும் விலக்கினாய். மேலும் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுஜ்யம் என்னும் நான்கு முக்தி நிலைகளை அருளி ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலர்களால் ஏற்படும் மயக்கத்தை எனக்குப் போக்கினாய்.
9. ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால், ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும் , பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே.
பொருள் : பிரணவ மந்திரத்தின் உதவியால் இந்த உடலின் ஒன்பது வாசல்களையும் ஐம்புலன்களின் கதவுகளையும் அடைக்கும் வழியைக் கூறினாய். ஆறு ஆதாரங்களையும் கடந்த நிலையைப் பெறுவதற்கரிய பேறாகத் தந்து மௌனநிலையை அளித்தாய்.
10. இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழிமுனைக் கபாலமும் காட்டி,
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
பொருள் : இடை, பிங்கலை என்னும் நாடிகள் மூலம் உள்கொள்ளும் பிராண வாயுவின் உதவியுடன் குண்டலினியை சுழுமுனை வழியே கபால வாயில் வரை செலுத்தும் வித்தையை எனக்குத் தெரிவித்து அக்னி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று மண்டலங்களையும் ஊடுருவி நிற்கும் தூணாகிய சுழுமுனையில் அடியில் தொங்கி கொண்டிருக்கும் பாம்பாகிய குண்டலினியை எழுப்பி . . .
11. குண்டலி அதனில் கூடிய அசபை, விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழுக்கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே.
பொருள் : அக்குண்டலினியிலிருந்து மெளனமாக ஒலிக்கும் அசபை என்னும் ஹம்ச மந்திரம் தெளிவாக ஒலிக்கும்படிச் செய்து, மூலாதாரமாகிய அக்னி மண்டலத்தில் உள்ள கொழுந்து விட்டெரியும் குண்டலினியை மூச்சுக் காற்றினால் ஏற்படும் பிராண சக்தியின் துணை கொண்டு எழுப்பும் வழியை அறிவித்தாய்.
12. அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும், உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்
பொருள் : குண்டலினியை சஹஸ்ராரத்தை அடையும்பொழு ஏற்படும் அமுத நிலையையும் சூரிய நாடியாகிய இடையில் இயக்கத்தையும் எனக்கு விளக்கி இடைச்சக்கரமாகிய விசுத்தி சக்கரத்தின் பதினாறு நிலைகளும் உடலாகிய சக்கரத்தின் பல்வேறு உறுப்புகளின் தன்மையும் எனக்குப் புரியும்படிச் செய்தாய்.
13. சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் என்முக மாக இனிதெனக்கு அருளிப்
புரியட்ட காயம் புலம்பட எனக்குத் தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
பொருள் : 'நம' என்று தூலமாகிய உச்சரிக்கப்படும் ஓம் நமச்சிவாய என்ற ஆறெழுத்து மந்திரமும் சூட்சுமமாக உணரப்படும் ஓம் சிவாய என்ற நாலெழுத்து மந்திரமும் எனக்கு எளிதில் இனிக்கும்படிச் செய்து, புரியட்டகத்தின் தன்மை எனக்கு விளங்கும்படிச் செய்து மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை எட்டு நிலைகளும் அனுபவமாகும்படிச் செய்து
14. கருத்தினில் கபால வாயில் காட்டி, இருத்தி முக்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து, முன்னை வினையின் முதலைக் களைந்து
பொருள் : கபால வாயிலில் உள்ள சஹஸ்ராரம் என்னும் சக்கரத்தைக் காட்டி சித்திகளும் முக்தியும் எனக்கு அருளி என்னை நான் உணரும்படி எனக்கு அருள் செய்து முன் தேய்த்த வினைக்கும் காரணமாகிய ஆணவ மலத்தை நீக்கி.
15. வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன, அருள்தரு ஆனந்தத்து அழுத்திஎன் செவியில்
பொருள் : சொல்லும் எண்ணமும் கடந்த மனோலயம் என்னும் நிலையை எனக்கு அருளி என் சிந்தனை தெளிவாக இருக்கும்படிச் செய்து இருளும் ஒளியும் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை என்ற உண்மையை எனக்கு உணர்த்தியதோடு ஆனந்தத்தையும் அருளி
16. எல்லை இல்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள் வழி காட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
எல்லை இல்லாத ஆனந்தத்தை அளித்து துன்பங்கள் தவிர்த்து அருள்வழியைக் காட்டி சத்தமாகிய புறவுலகிலும் சித்தமாகிய ஹவுலகிலும் சிவனைக் காணும்படிச் செய்து
17. அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
சிறியவற்றிற்குச் சிறியதாகவும் பெரியவற்றிற்குப் பெரியதாகவும் உள்ள பொருள் என் உள்ளேயே கணுமுற்றி நிற்கும் கரும்பாக நேரில் அனுபவித்து உணரக்கூடிய இன்பமாக இருப்பதைக் காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையை எனக்கு நிலையாக அளித்து மெய்த்தொண்டர் குழாம் அளித்து
18. அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக! விரைகழல் சரணே!!.
ஐந்தெழுத்தின் மேலான பொருளை என் நெஞ்சில் நிலையாக இருக்கும்படி அறிவித்து உண்மை நிலையை அருளி என்னை ஆட்கொண்ட ஞான வடிவாகிய விநாயகப் பெருமானே! நறுமணம் கமழும் உன் பாதங்களைச் சரணடைந்தேன்.
* * * * * *
மும்மதங்கள் : யானையின் கன்ன மதம், கைம்மதம், கோசமதம் ஆகிய மதநீர்.
பூணூல் : மூன்று நூல்கள் - காயத்திரி ( மனம் ), சரசுவதி ( வாக்கு ), சாவித்திரி ( செய்கை ) அதாவது, இம்மூன்றும் தூய்மையாக வைத்திருத்தல்.
ஒன்பது வாயில்கள் : கண்கள், நாசித் துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாராம், சலத்துவாரம் ஆகிய ஒன்பது உடல்வாயில்கள்.
இடை, பிங்கலை, சூட்சும நாடி : இடை நாடி என்பது முதுகுத் தண்டின் இடது புறம் உள்ள சந்திர நாடி. பிங்கலை என்பது முதுகுத் தண்டின் வலது புறம் உள்ள சூரிய நாடி. சூட்சும நாடி என்பது முதுகுத் தண்டின் மத்தியில் உள்ளது. இந்த இரண்டு நாடிகளின் செயல்களுக்கு நடுவில் இயங்குவது. மூச்சை உள்ளிருத்தும்போது சூட்சும நாடி இயங்கத் தொடங்குகின்றது. இதனை குண்டலினி சக்தி என்று யோகிகள் கூறுவர் .
கருத்துகள்
கருத்துரையிடுக